முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலை அம்பலபடுத்திய தினபூமி ஆசிரியருக்கு மிரட்டல்

வெள்ளிக்கிழமை, 18 பெப்ரவரி 2011      ஊழல்
Image Unavailable

மதுரை, நவ.2- தி.மு.க. அரசின் பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் சுரங்க ஊழலை அம்பலபடுத்திய தினபூமி ஆசிரியருக்கு மிரட்டல்கள் தொடர்கிறது. இந்தியாவிலேயே பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத மோசமான மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. பத்திரிகை சுதந்திரத்தை கருணாநிதி குழிதோண்டி புதைத்துவிட்டார்.

தி.மு.க. அரசின் கிரானைட் சுரங்க ஊழல்களை தினபூமி நாளிதழ் துணிச்சலுடன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தது. கடந்த 20.7.2010-ம் தேதியன்று ரூ.1,500 கோடி கிரானைட் சுரங்க ஊழல் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சித்தலைவர் என்ற தலைப்பில் தினபூமி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக தி.மு.க. அரசால் தினபூமி நாளிதழ் ஆசிரியர் ந.மணிமாறன், பத்திரிகையாளர் ங.ரமேஷ்குமார் மற்றும் கிரானைட் சுரங்க முறைகேடுகள் சம்பந்தமாக புகார் கொடுத்த கீழையூர் இந்திய கம்யூனிஸ்ட் கிளை செயலாளர் ங.முத்தையா ஆகியோர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டது. கருணாநிதி பத்திரிகை சுதந்திரத்தை குழிதோண்டி புதைத்துவிட்டார்.

பத்திரிகையாளர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து கைது பற்றி தனக்கு தெரியாதது போல நாடகம் நடத்தினார் கருணாநிதி. மறுநாள் அவசர அவசரமாக ஆசிரியர் உட்பட மூவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறையில் ஆசிரியரை

கொல்ல சதியா?

ஆசிரியர் சிறையில் இருந்த போது 21.7.2010-ம் தேதி காலை சுமார் 10 மணி அளவில் சிறைக்கு உயர் அதிகாரி வந்து இருக்கிறார் என்று ஆசிரியர் உட்பட 3 பேரையும் வெளியே நிற்க வைத்தார்கள். உயர் போலீஸ் அதிகாரியும் வந்தார். மேலும் கீழும் தீவிரவாதிகளை பார்ப்பது போல் பார்த்தார். எதுவும் கூறாமல் சென்றுவிட்டார். சிறைச்சாலையை ஒருமுறை சுற்றிவிட்டு ஆசிரியரை மட்டும் தனியே கூப்பிட்டு பேசினார். பின்பு அவர் சென்ற உடன் உங்களை எப்படி எல்லாம் கொடுமைபடுத்துகிறார்கள் என்பதை பார்க்கத்தான் இவரை அனுப்பி உள்ளார்கள் என்ற திடுக்கிடும் தகவலை ஒரு சிறைகாவலர் கூறினார்.

இதன்பின்பு நடந்த சம்பவங்கள் அனைத்தும் சிறைக்குள் ஆசிரியர் உட்பட மூவரையும் கொல்ல சதி நடப்பது போல தெரிந்தது. அன்றைய தினம் அ.பிரிவுக்குள்ள உணவு தருவதாக கூறப்பட்டு உணவும் செல்லுக்குள் வந்தது. ஒரு சிறை காவலர் சாப்பாடு சாப்பிட்டு விட்டீர்களா? என்று கேட்டார். சிறிது நேரம் கழித்து மீண்டும் இதே போல ஒரு சிறை காவலர் சாப்பிட்டு விட்டீர்களா? என்று கேட்டார். சிறிது நேரம் கழித்து 3-வதாக மீண்டும் ஒரு சிறை காவலர் இதே போல் சாப்பிட்டுவிட்டீர்களா? என்று கேட்டார். இதனால் சந்தேகம் அடைந்த ஆசிரியர் உட்பட மூவரும் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டனர். அதன் பின் திடீரென்று ஆசிரியர் உட்பட 3 பேரையும் ஜாமீனில் விடுவித்துவிட்டதாக கூறி 5 நிமிடத்தில் வெளியே செல்ல வேண்டும் எனக்கூறி அவசர அவசரமாக ஜெயிலைவிட்டு வெளியே அனுப்பிவிட்டனர்.

பத்திரிகை சுதந்திரத்தை

காலில் போட்டு மிதித்த கருணாநிதி

கிரானைட் அதிபர்கள் சங்கத்தின் தலைவர் பெரியசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில்  பணம் பறித்ததாக ஆசிரியர் உட்பட 3 பேரையும் கைது செய்த போலீஸ் 22.7.10 தேதியன்று விசாரணை செய்து சட்டமாறுதல் அறிக்கை தாக்கல் செய்தபோது, ஆசிரியர் உட்பட 3 பேரும் பணம் பறித்ததாக கூறவில்லை. போலீசாருக்கு பெரியசாமி கொடுத்ததாக கூறப்படும் மறுவாக்குமூலத்தில் அந்த பத்திரிகையை நாம் ஏதாவது பொய் புகார் அளித்து மாட்டிவிடவேம்டும் என்று முடிவு செய்தேன் என்றும் எவ்வளவு கூடுதலாக மிகைப்படுத்தி புகார் அளிக்க இயலுமோ அவ்வளவு மிகைபடுத்தி புகார் கொடுத்தேன் என்றும் போலீசாருக்கு அளித்துள்ளதாக கூறப்படும் மறுவாக்குமூலத்தில் பெரியசாமி கூறியுள்ளார். மேலும் சாட்சியான சுடலை என்பவர் போலீசுக்கு கொடுத்ததாக கூறப்படும் மறுவாக்குமூலத்தில் பெரியசாமி மிகைபடுத்தி புகார் கொடுப்பதாகவும் ஏற்கனவே பணம் பறித்து சென்றார்கள் எனவும் சொல்ல வேண்டும் என கூறினார். எனவே நானும் மிகைபடுத்தி வாக்குமூலம் தந்தேன் என்று சாட்சி சுடலை கூறுவதாக போலீஸ் கூறுகிறது. இதில் இருந்தே தினபூமி மீது போலீசார் போட்டது பொய்வழக்கு என்பதை போலீசாரே ஒத்துக்கொண்டது போல் உள்ளது. பல ஆயிரம் கோடி கிரானைட் ஊழலை மறைப்பதற்காக தினபூமி பத்திரிகையாளர்கள் மீது பொய்வழக்கு போட்டு கைது செய்து பத்திரிகைய சுதந்திரத்தை கருணாநிதி காலில் போட்டு மிதித்துள்ளார்.

புகார் கொடுத்து

பல மாதங்கள் ஆகியும்

கிரானைட் கொள்ளையர்கள் மீது

நடவடிக்கை எடுக்காத கருணாநிதி

கிரானைட் சங்க தலைவர் பெரியசாமி கொடுத்த பொய்புகாரின்  அடிப்படையில் புகார் கொடுத்த 2 1/2 மணி நேரத்தில் தினபூமி ஆசிரியரை பொய்வழக்கில் கைது செய்தது கருணாநிதி அரசின் போலீஸ். சம்பவம் உண்மையில் நடந்ததா? என்று விசாரிக்கவில்லை புகாரில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை ஆசிரியருக்கும் கூறவில்லை. ஆசிரியரை விசாரிக்கவில்லை, வாக்குமூலமும் வாங்கவில்லை, புகார் நகலையும் போலீசார் ஆசிரியருக்கு தரவில்லை. திருட்டு கிரானைட் சுரங்கங்கள் சம்பந்தமாக சட்டவிரோதமாக கண்மாய்களை தோண்டுவது சம்பந்தமாகவும் உயர்போலீஸ் அதிகாரிகள் முதல் முதலமைச்சர் வரை புகார் கொடுத்து மாதக் கணக்காகியும் சட்டவிரோத கிரானைட் கொள்ளையர்கள் மீது இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இவர்களை பாதுகாக்க முதல்வர் கருணாநிதி ஏன் முயற்சி செய்கிறார்?

பொய் புகார் கூறியவர்கள்

மீது நடவடிக்கை எடுக்காத கருணாநிதி

நானும் பத்திரிகையாளன் தான் என தம்பட்டம் அடித்து கொள்ளும் முதல்வர் கருணாநிதி தினபூமி ஆசிரியர் மீது பொய்புகார் கொடுத்த கிரானைட் சங்க தலைவர் பெரியசாமி மற்றும் பொய் வழக்கு பதிவு செய்த போலீசார் மற்றும் பொய் சாட்சிகளை கைது செய்ய கருணாநிதி ஏன் உத்தரவிடவில்லை.

தொடர்ந்து 5 பொய் வழக்குகள்

போட்டு சதாம் உசேனை

மிஞ்சிய கருணாநிதி அரசு

தொடர்ந்து 5 பொய் வழக்குகளை தினபூமி பத்திரிகையாளர்கள் மீது போட்டு பத்திரிகை சுதந்திரத்தை மதுரை போலீசார் குழி தோண்டி புதைத்துள்ளனர். இதில் உச்சகட்ட காமெடி என்னவென்றால் தினபூமி நாளிதழில் வெளிவராத ஒரு செய்திக்காக தினபூமி பத்திரிகையாளர் மீது வழக்கு பதிவு செய்து கின்னஸ் சாதனை செய்து  கருணாநிதி அரசு சதாம் உசேன் ஆட்சியையும் மிஞ்சிவிட்டது.

மிரட்டல்-1

தினபூமி நாளிதழ் தி.மு.க. அரசின் கிரானைட் சுரங்க ஊழல்களை அம்பலபடுத்தியதில் இருந்து ஆசிரியருக்கு மிரட்டல்கள் தொடர்கிறது. கடந்த 2.8.2010-ம் தேதியன்று இரவு 10.15 மணி அளவில் தினபூமி ஆசிரியர் வீட்டிற்கு வந்த இருவர் நாங்கள் தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் இருந்து வருகிறோம். ஆசிரியரை ஒரு விசாரணைக்காக பார்க்க வேண்டும் என்றும் கிரிஸ்டல் கிரானைட் உங்களுடையதா? கிரிஸ்டல் கிரானைட் யாருடையது? மணிமாறன் நீங்கள்தானே என்று கேள்விகளை கேட்டார்கள். விசாரணை செய்ய வேண்டும் என்றால் காலையில் வாருங்கள் என்று கூறப்பட்டது. பின்பு இருவரும் சென்றுவிட்டனர்.

அன்றைய தினம் இரவே தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு போன் மூலம் விசாரித்த போது நாங்கள் யாரையும் விசாரணைக்கு அனுப்பவில்லை என்று கூறப்பட்டது. அடுத்த நாள் காலை யாரும் விசாரணைக்கு வரவில்லை. விசாரணை என்ற பெயரில் வந்தது போலீசா? மர்ம நபர்களா? யார் என்று தெரியாததால் தல்லாகுளம் காவல் நிலையத்திற்கும், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் வீடியோ ஆதாரங்களுடன் புகார் கடிதம் அனுப்பப்பட்டது. அதன் பின்னர் போன் மூலம் தொடர்பு கொண்ட போலீசார் ஆசிரியர் வீட்டிற்கு வந்தது போலீசார்தான் என்றும் கிரானைட் சங்க தலைவர் பெரியசாமி வீட்டிற்கு விசாரணைக்கு செல்வதற்கு பதில் ஆசிரியர் வீட்டிற்கு தவறுதலாக வந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. பெரியசாமி வீட்டிற்கு செல்வதற்கு பதில் தவறுதலாக மாறி ஆசிரியர் வீட்டிற்கு வந்ததாக கூறும் போலீசார் மணிமாறன் நீங்கள்தானே என்று ஏன் கேட்கவேண்டும்? இரவில் ஏன் வரவேண்டும்? இதுவரை போலீசார் எழுத்து பூர்வமாக ஆசிரியர் வீட்டிற்கு வந்தது யார் என்பதை தெரிவிக்கவில்லை. ஆசிரியர் வீட்டிற்கு விசாரணை என்ற பெயரில் வந்தது யார்? என்ற மர்மம் தொடர்கிறது.

மிரட்டல்-2

கடந்த 24.10.2010-ம் தேதி இரவு 7.25 மணி அளவில் மதுரை மேலூர் ச”லையில்  உள்ள ஆசிரியரின் மற்றெ”ரு அலுவலகம் உள்ள இடத்திற்கு போலீஸ் வாகனத்தில் போலீசார் சீருடை அணிந்த 4 பேர் வந்தனர். அலுவலகத்தில் யாரும் இல்லை காலையில் வாருங்கள் என்று செக்யூரிட்டிகள் கூறியும் அத்துமீறி போலீஸ் ஜீப்பை உள்ளே ஓட்டி சென்றனர். சிறிது நேரம் உளவு பார்த்தனர். பின்னர் 7.27 மணிக்கு அங்கிருந்து கிளம்பி சென்றனர். இவை அனைத்தும் வீடியோவில் பதிவாகி உள்ளது. அன்றைய தினமே மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு போன் மூலம் கேட்டபோது போலீஸ் வாகனத்தில் போலீசார் யாரும் விசாரணைக்கு செல்லவில்லை என்று தகவல் கூறினார்கள். அப்படி என்றால் போலீஸ் வாகனத்தில் வந்தது யார்? போலீசா? மர்மநபர்களா? போலீசார் சொந்த வேலையாக வந்தார்கள் என்றால் சொந்த வேலைக்கு அரசு கொடுத்த ஜீப்பில் ஏன் வந்தார்கள்? என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. தினபூமி ஆசிரியருக்கு மிரட்டல்கள் தொடர்கிறது.

மிரட்டல்களுக்கு தினபூமி

அஞ்சாது

தினபூமி மீது எத்தனை பொய்வழக்கு போட்டாலும், மிரட்டல்கள் விடுத்தாலும் இந்த மிரட்டல்களுக்கு தினபூமி அஞ்சாது. தி.மு.க. அரசின் ஊழல்களை தொடர்ந்து அம்பலபடுத்திக் கொண்டுதான் இருக்கும்.

இந்தியாவிலேயே பாதுகாப்பு

இல்லாத மோசமான நிலையில் தமிழகம்

தி.மு.க. அரசின் ஊழல் செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கு சிறை தண்டனை, அரசுக்கு எதிரான எந்த செய்திகளையும் வெளியிடும் பத்திரிகைக்கு மிரட்டல் போன்ற நிலை தி.மு.க. ஆட்சியில் தொடர்வதால் அரசுக்கு எதிரான செய்திகளை எழுதும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்