முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சபாண்டவர் மலை பகுதி - கிரானைட் குவாரிப் பணிக்கு அனுமதி மறுப்பு

வெள்ளிக்கிழமை, 4 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, மார்ச்.3 - தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவு சின்னங்களை எல்லாம் மாநில அரசு பாதுகாக்க வேண்டும். அந்த வகையில் கீழவளவு பஞ்சபாண்டவர் மலைப் பகுதி முழுவதும் கிரானைட் குவாரி நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது. நினைவுச் சின்னங்களை பாதுகாக்கும் வகையில் பஞ்சபாண்டவர் மலைபகுதி முழுவதும் கிரானைட் குவாரி பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரை மாவட்டம் கீழவளவு, கீழையூர், ரெங்கசாமிபுரம் போன்ற பகுதிகளில் சட்டவிரோத கிரானைட் குவாரிகள் நடப்பது தமிழக மக்கள் மட்டுமல்ல, உலக மக்களும் அறிந்த விஷயம். இங்கு சட்டவிரோதமாக நடத்தப்படும் கிரானைட் குவாரிகளால் பொதுமக்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பலமுறை தினபூமி நாளிதழ் சுட்டிக் காட்டியுள்ளது. 

இந்த கிரானைட் குவாரிப் பணிகளால் பல கண்மாய்கள் காணாமல் போய் விட்டன. பல குளங்களையும் காணவில்லை. கிரானைட் குவாரிகளில் சக்திவாய்ந்த வெடிகள் வெடிக்கப்படுவதால் பல வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு விட்டன. 

கிரானைட் விவகாரத்தில் மதுரை கலெக்டர் தன் கடமையை செய்யத் தவறி விட்டதாகவும் மதுரை ஐகோர்ட் கிளை சமீபத்தில் தன்னுடைய ஒரு உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. 

இந்த நிலையில் கீழவளவு பஞ்சபாண்டவர் மலைப் பகுதியில் கிரானைட் குவாரி பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி சிலர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதாவது, மதுரை கே.கே. நகர் பகுதியை சேர்ந்த சோக்கோ அறக்கட்டளையின் நிர்வாக டிரஸ்டி மெகபூப் பாட்சா, மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீழவளவை சேர்ந்த புவனேஸ்வரி, அதே கீழவளவு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் பாண்டி ஆகியோர் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, 

கீழவளவு மலையில் 2 ம் நூற்றாண்டை சேர்ந்த சமணர் படுகைகள் மற்றும் 9 ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. இந்த மலை தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்ட ஒரு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சர்வே எண்: 226 / 1 ல் 51.77 ஏக்கர் முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இங்கு 8.6 ஹெக்டேர் பரப்பில் கிரானைட் குவாரி நடத்த டாமின் நிறுவனத்துக்கு மாவட்ட கலெக்டர் குத்தகை கொடுத்துள்ளார். ஆனால் இங்கு குவாரி நடத்தினால் புராதன சின்னங்கள் பாதிக்கப்படும். எனவே இங்கு குவாரி நடத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று இந்த மூவரது மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இவர்களில் கீழவளவை சேர்ந்த பாண்டி என்பவரும் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில் கூறியிருந்ததாவது, நான் இந்த வழக்கின் 3 வது மனுதாரர். எனக்கு இந்த வழக்கின் முழு விவரங்களும் தெரியும். பொது நடவடிக்கைகளில் ஆர்வம் உள்ளவன் நான். அதனால்தான் பொதுமக்கள் நலன் கருதி இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளேன். கீழவளவு மலைப் பகுதியில் உள்ள பழம்பெரும் நினைவுச் சின்னம்தான் சமணர் படுகையாகும். இதை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த மனுத்தாக்கல் செய்கிறேன். மேலும் இங்கு தமிழ் பிராமி கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. எங்களது கிராமங்களை சுற்றி இருக்கும் சமணர் படுகை உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களை பாதுகாக்க நானும் சரி, எனது கிராம மக்களும் சரி, பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டோம்.  9 மற்றும் 10 ம் நூற்றாண்டை சேர்ந்த மிக முக்கியமான நினைவுச் சின்னங்கள்தான் சமணர் படுகைகள். 

இந்த இடத்திற்கு அருகே கிரானைட் குவாரிப் பணிகள் நடப்பதற்கு டாமின் நிறுவனத்திற்கு அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கீழவளவு மலைப் பகுதியில் அமைந்துள்ள இந்த சமணர் படுகைகளில் பல தெய்வ விக்கிரகங்கள் உள்ளன. இங்கு முக்கியமான காலக் கட்டங்களில் எல்லாம் திருமண விழாக்கள் நடைபெறுகின்றன. இந்த மலைப் பகுதி முழுவதுமே ஒரு புராதன நினைவு சின்னமாகும். எதிர் மனுதாரரான மதுரை மாவட்ட கலெக்டர், இங்கு 21.24 ஏக்கரில் அதாவது 8.60 ஹெக்டேரில் கிரானைட் குவாரி நடத்த டாமின் நிறுவனத்துக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளார்.  

இந்த நிலையில் கடந்த 30.11.07 அன்று கீழவளவு மலைப் பகுதியில் உள்ள சமணர் படுகைகளில் கிரானைட் குவாரிப் பணிகள் நடப்பதை தடுக்கும் நோக்கத்துடன் கீழவளவு பஞ்சாயத்து கவுன்சில் ஒரு தீர்மானமே நிறைவேற்றி உள்ளது. பிறகு 14.1.08 அன்று கீழவளவு கிராம மக்கள் இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு ஒரு புகார் மனுவையும் அனுப்பினர். அதன் பிறகு துணை இயக்குனர்( மினரல்ஸ்) அவர்களிடம் இருந்து ஒரு பதில் வந்தது. புராதன நினைவு சின்னம் இருக்கும் இடத்தில் இருந்து 300 மீட்டர் பாதுகாப்பு இடைவெளி விட்டு தான் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அந்த பதிலில் கூறப்பட்டிருந்தது. 

ஆனாலும் இந்த பணிகளை தடுக்கக் கோரி இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறையை நாங்கள் கேட்டுக் கொண்டோம். இந்த நினைவு சின்னத்தை பாதுகாக்கும் வகையில் கீழவளவு பஞ்சாயத்து 2008 ம் ஆண்டிலும் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த படுகை பஞ்ச பாண்டவர் படுகை என்றும் அழைக்கப்படுகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் பல போராட்டங்களும் நடத்தினார்கள். அது பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் குவாரிப் பணிகளை தடுக்க முடியவில்லை. அதனால்தான் இந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது என்று பாண்டி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டி.லஜபதிராய் ஆஜராகி வாதாடினார்.

இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை இது பற்றி ஆய்வு செய்ய வழக்கறிஞர்கள் அஜ்மல்கான், சீனிவாசன் ஆகியோர் கொண்ட கமிஷனை நியமித்து அந்த மலைப் பகுதியை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு உத்தரவிட்டது. அந்த கமிஷனும் அந்த மலைப் பகுதியை ஆய்வு செய்து தனது அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தது. பின்னர் இந்த வழக்கில் நீதிபதிகள் பால் வசந்தகுமார் மற்றும் நீதிபதி ஆர். சுப்பையா ஆகியோர் விசாரணை செய்து தீர்ப்பளித்தனர். இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

1958 ம் ஆண்டின் புராதன நினைவுச் சின்னம் மற்றும் தொல்லியல் சட்டப்படி கீழவளவு சமணர் படுகை ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம் என்ற அடிப்படையில் இந்த பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள தமிழ் பிராமி எழுத்துக்கள் மற்றும் கல்வெட்டுக்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த இடத்தில் 6 வது எதிர் மனுதாரரான மதுரை கலெக்டர் டாமின் நிறுவனத்துக்கு குவாரிப் பணிகள் நடத்துவதற்கு குத்தகை கொடுத்திருக்கிறார். 8.60 ஹெக்டேரில் அதாவது தோராயமாக 21.24 ஏக்கரில் குவாரிப் பணிகள் நடத்த இந்த குத்தகை கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் 30.11.07 அன்று கீழவளவு பஞ்சாயத்து கவுன்சிலில் இங்கு குவாரி நடப்பதை தடுக்கும் வகையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிறகு முதல்வருக்கும் புகார் மனு கொடுத்திருக்கிறார்கள். இதன் பிறகு மினரல்ஸ் துணை இயக்குனரிடம் இருந்து பதில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் புராதன நினைவுச் சின்னம் இருக்கும் இடத்தில் இருந்து 300 மீட்டர் இடைவெளி விடப்படும். அதற்கு அப்பால்தான் குவாரிப் பணிகள் நடத்தப்படும் என்று துணை இயக்குனர் பதில் அளித்துள்ளார். இதன் பிறகும் மனுதாரர் குவாரிப் பணிகளை தடுக்கக் கோரி தொல்பொருள் ஆய்வுத் துறையை அணுகி உள்ளார். ஆனாலும் அவருக்கு எந்த பலனும் கிட்டவில்லை. 

அதன் பிறகே இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார். இந்த விவகாரம் குறித்து முடிவெடுப்பதற்காக கோர்ட் உத்தரவுப்படி வக்கீல்கள் அஜ்மல்கான், சீனிவாசன் ஆகிய ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.  இவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று தங்களது அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இவர்களது அறிக்கைப்படி நினைவுச் சின்னத்தின் கிழக்குப் பகுதியில் 21.27 ஏக்கரில்தான் குவாரிப் பணிகளை தாங்கள் மேற்கொள்வதாகவும், விஞ்ஞான ரீதியில் இந்த பணிகள் நடப்பதாகவும், அவ்வாறு நடக்கும் போது சிறிய சப்தம் கூட கேட்காது, நினைவுச் சின்னத்தையும் எந்த வகையிலும் பாதிக்காது. காரணம், 300 மீட்டர் இடைவெளி விட்டுதான் செய்கிறோம் என்று டாமின் உறுதியளித்ததாக ஆய்வாளர்களின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்த பகுதியை ஆய்வு செய்த நமது ஆய்வாளர்கள் டாமின் அதிகாரிகளிடம் ஒரு கேள்வியை கேட்டனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கூட இந்த நினைவு சின்னத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதா? தொடர்ந்து குவாரிப் பணிகள் நடக்கும் போது அப்படி ஒரு பாதிப்பு சமணர் படுகைக்கு வராதா? என்று கேட்ட போது டாமின் அதிகாரிகளால் அந்த கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை. 

இந்த வழக்கில் டாமின் நிறுவனமும் ஒரு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. நினைவு சின்னம் இருக்கும் இடத்தில் இருந்து 310 மீட்டர் இடைவெளி விட்டுத்தான் 2007 ம் ஆண்டில் குவாரிப் பணிகள் தொடங்கப்பட்டன என்று டாமின் நிறுவனமும் கூறியுள்ளது. 6 வது எதிர் மனுதாரரான மதுரை மாவட்ட கலெக்டரும், தனது ஆட்சேபணை மனுவை ஆய்வாளர்களிடம் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த சமணர் படுகை இருக்கும் இடத்திற்கும், பாதுகாக்கப்பட்ட பகுதியின் எல்லைப் பகுதிக்கும் இடையேயான தூரம் மேற்கு பக்கத்தில் 120 மீட்டர் என்றும், வடக்கு பக்கத்தில் 135 மீட்டர் என்றும், தெற்கு பக்கத்தில் 70 மீட்டர் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த அந்த இடத்திற்கும் கிழக்குப் பகுதியில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியின் எல்லைக்கும் இடையிலான தூரமோ 1,075 மீட்டராக உள்ளது. எனவே இந்த விஷயத்தில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட இல்லை. புராதன சின்னத்துக்கும், பாதுகாக்கப்பட்ட பகுதியின் எல்லைக்கும் இடையேயான தூரம் எல்லா திசைகளிலும் சரிசமமாகவே இல்லை. இவற்றில் வித்தியாசம் காணப்படுகிறது. குறிப்பாக, கிழக்குப் பகுதியில் 1,075 மீட்டராக உள்ளது. 

இந்த வழக்கில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் சூப்பிரண்டும் ஒரு பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் பாதுகாக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பகுதியில் எந்த கிரானைட் குவாரி நடவடிக்கைகளும் நடத்தப்படக் கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் மனுதாரர் சில கருத்துக்களை கூறியுள்ளார். இப்பகுதியில் தொடர்ந்து கிரானைட் குவாரி பணிகள் நடத்த அனுமதிக்கப்பட்டால் அது சமணர் படுகைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பகுதி 1921 ம் ஆண்டிலேயே புராதன நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். 

இப்போது நம் முன்னே ஒரு கேள்விதான் எழுகிறது.  மலைப் பகுதி முழுவதையும் பழமை வாய்ந்த நினைவு சின்னமாக கருதுவதா? அல்லது புராதன நினைவு சின்னத்தில் இருந்து பாதுகாப்பு இடைவெளி விட்டு அங்கு குவாரிப் பணிகள் நடத்த அனுமதிப்பதா? இந்த கேள்விதான் இப்போது எழுகிறது. இந்திய அரசியல் சட்டம் 49 வது சரத்து என்ன கூறுகிறது என்றால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்களை எல்லாம் ஒரு மாநில அரசு பாதுகாக்க வேண்டும். அவ்வாறு பாதுகாப்பது ஒரு மாநில அரசின் கடமை. எனவே இந்த சட்டப் பிரிவுப் படி புராதன நினைவு சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதை பாதுகாக்க வேண்டியது இந்த அரசின் கடமையாகும். 

எனவே கீழவளவு மலைப் பகுதியில் உள்ள சமணர் படுகைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது. அந்த அளவுக்கு அந்த பகுதியை பாதுகாக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் நினைவுச் சின்னம் இருக்கும் அந்த பகுதி முழுவதும் வேலி அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு வேலி அமைத்து இது போன்ற நினைவுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும். எனவே 300 மீட்டர் பாதுகாப்பு இடைவெளி விட்டுத்தான் பணி செய்கிறோம் என்ற டாமின் நிறுவனத்தின் வாதத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் கூறும் இந்த வாதம் அர்த்தமற்றது. 

மேலும் மதுரை மாவட்ட கலெக்டருக்கு இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினரும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அதில் சம்பந்தப்பட்ட இடத்தில் குவாரிப் பணிகளை நிறுத்துமாறு தாங்கள் கேட்டுக் கொண்டதாக அவர்கள் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். எனவே  கீழவளவு கிராமத்தின் (பஞ்சபாண்டவர்) மலைப் பகுதி முழுவதும் கிரானைட் குவாரிப் பணிகளை (சர்வே நம்பர் 226/1-ல் 51.77 ஏக்கர் அளவுக்கு) நடப்பதை எங்களால் அனுமதிக்க முடியாது. புராதன நினைவு சின்னத்தை பாதுகாப்பது நமது கடமை. அந்த வகையில் கிரானைட் பணிக்கு தடை விதித்து டாமின் நிறுவனத்துக்கு உத்தரவிடுகிறோம். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் இடைக்கால உத்தரவில் கூறியுள்ளனர். 

மனுதாரரின் ரிட் மனு ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த தீர்ப்பின் மூலம் கீழவளவு பஞ்சப்பாண்டவர் மலைப் பகுதி முழுவதும் இனி குவாரிப் பணிகளை அரசு நடத்த முடியாது. அதை அனுமதிக்கவும் முடியாது என்று கோர்ட் தீர்ப்பளித்து விட்டது. அந்த வகையில் மனுதாரர்களின் பொது நல வழக்கிற்கு ஒரு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago