காஷ்மீரில் வர்த்தகரை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்

ஸ்ரீநகர், ஜன. 25 - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் 40 வயதான வர்த்தகர் ஒருவரை தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். கொல்லப்பட்ட வர்த்தகரின் பெயர் அஜல் அகமது ஷா. இவரது வீடு சப்தானி மேவா என்ற கிராமத்தில் உள்ளது. இவரது வீட்டுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் அவரை நேற்று காலை 11.30 மணியளவில் சரமாரியாக சுட்டனர். இதையடுத்து ரத்தவெள்ளத்தில் அகமது ஷா மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து விட்டனர். இவரது கொலைக்கான நோக்கம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் இந்த வர்த்தகர் கொல்லப்பட்டது இந்த கிராமத்தில் பதட்டத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.