சர்க்கரை மீதான கட்டுப்பாட்டை நீக்க நிபுணர் குழு

 

புதுடெல்லி, ஜன.28 - சர்க்கரை மீதான கட்டுப்பாடுகளை ஓரளவுக்கு நீக்குவது தொடர்பான பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மன்மோகன் சிங் நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளார். சர்க்கரை மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திறந்தவெளி சந்தைக்கு மத்திய உணவு அமைச்சகம் மாதா மாதம் நிர்ணயிக்கும் அளவுக்குத்தான் சர்க்கரை ஆலைகள் சர்க்கரையை விற்பனை செய்ய வேண்டும். மேலும் ரேஷனில் வழங்கப்படும் சர்க்கரை சப்ளைக்கு 60 சதவீதம் லெவி விதிக்கப்படுகிறது.

இப்படி சர்க்கரை துறையில் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும் என்று கோரி இந்திய சர்க்கரை உற்பத்தியாளர்கள் சங்கம் , இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டு சம்மேளனம் ஆகியவற்றை சேர்ந்த பிரதிநிதிகள் சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து தங்கள் துறையில் உள்ள குறைபாடுகள் குறித்து பேசினார்கள்.  அப்போது சர்க்கரை மீதான கட்டுப்பாடுகளை ஓரளவுக்காவது நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரணாப் முகர்ஜி உறுதி அளித்தார்.

இந்த நிலையில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து நேற்று ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. சர்க்கரை மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்ய பிரதமரின் பொருளாதார ஆலோனை குழுவின் தலைவர் சி. ரங்கராஜன் தலைமையில் நிபுணர் குழு ஒன்றை பிரதமர் அமைத்துள்ளதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை மீதான கட்டுப்பாடுகளை அகற்றுவது தொடர்பான பிரச்சினை குறித்து இக்குழு ஆய்வு நடத்தி அந்த ஆய்வு அறிக்கை மற்றும் சிபாரிசுகளை விரைவில் பிரதமரிடம் அளிக்கும் என்றும் அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

லெவி சர்க்கரையை விற்பனை செய்வதால் சர்க்கரை ஆலைகளுக்கு ஆண்டுக்கு ரூ.2,500 கோடி முதல் ரூ. 3,000 கோடி வரை இழப்பு ஏற்படுவதாக சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

எனவே இந்த லெவியை நீக்க வேண்டும் என்றும் திறந்த வெளி சந்தைக்கு சப்ளை செய்யப்படும் சர்க்கரை அளவை ஓரளவுக்கு உயர்த்த வேண்டும் என்றும் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் கோரி வருகின்றனர்.