ஐ.நா. பாதுகாப்பு சபையை விரிவுபடுத்த ஜி-4 கோரிக்கை

நியூயார்க், ஜன. 28 - ஐ.நா. பாதுகாப்பு சபையை விரிவுபடுத்த வேண்டும் என்று இந்தியா, ஜப்பான், பிரேசில் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி - 4 அமைப்பு கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஜி - 4 அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாதுகாப்பு சபையில் நிரந்தர மற்றும் நிரந்தரமில்லா என்ற 2 பிரிவுகளிலுமே உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிரிக்க நாடுகளையும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பு நாடாக இணைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற ஜி - 4 நாடுகளின் நிலைப்பாட்டில் தற்போதும் உறுதியாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் ஜி - 4 நாடுகளின் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனா தொடர்ந்து ஐ.நா. சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.