மெல்போர்ன், ஜன. 29 - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவின் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் எலீனா வெஸ்னினா ஜோடி அரை இறுதியில் வெற்றி பெற்று இறுதிச் சுற் றுக்கு முன்னேறியது. இந்த வருடத்தின் முதலாவது கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் முக்கிய நகரமான மெல்போர்னில் கடந்த 2 வார காலமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களத்தில் குதித்துள்ளனர். இந்தப் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டது. கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இந்தியாவின் இரட்டையர் ஸ்பெசலிஸ்டுகளில் ஒருவரான லியாண்டர் பயஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் ரஷ்யாவின் இளம் வீராங்கனையான எலீனா வெஸ்னினாவுடன் இணைந்து ஆடி வருகிறார்.
கலப்பு இரட்டையர் பிரிவின் அரை இறுதிச் சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் லியாண்டர் பயஸ் மற்றும் எலீனா வெஸ்னினா ஜோடியும், ராபர்ட் வின்சி மற்றும் டெனிலி இணையும் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் இந்திய மற்றும் ரஷ்ய ஜோடி அபாரமாக ஆடி, 5 - 7, 6- 2, 10 - 7 என்ற செட் கணக்கில் ராபர்ட் மற்றும் டெனிலி இணையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்தப் போட்டி சுமார் ஒரு மணி மற்றும் 25 நிமிடத்தில்முடிவுக்கு வந்தது. இதில் லியாண்டர் ஜோடி முதல் சுற்றில் சிறிது தடுமாறியது. பின்பு அடுத்து நடந்த செட்டுகளில் அபாரமாக ஆடி வெற்றி பெற்றது.
முன்னதாக நடந்த முதல்செட்டில் ராபர்ட் மற்றும் டெனிலி இணை கடும் சவாலை அளித்தது. இந்திய மற்றும் ரஷ்ய ஜோடிபோராடிய போதிலும் வெற்றி பெற முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து நடந்து 2 -வது மற்றும் 3-வது செட்டுகளில் லியாண்ட ர் மற்றும் எலீனா ஜோடி சிறப்பாக ஆடியது. இறுதியில் வெற்றி பெற்று எதிரணியை வெளியேற்றியது.