ராமநாதபுரம் ஜன 29 செல்வி ஜெயலலிதாவின் நிர்வாக திறமையால் ஆட்சித்திறத்தால் மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டை உற்று நோக்கும் நிலை உருவாகியுள்ளது என்று தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.ராமநாதபுரம் மாவட்ட அஇஅதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்டக்கழக செயலாளர் கே.சி. ஆனிமுத்து ஏற்பாடு செய்திருந்தார். மாவட்ட அவைத்தலைவர் எஸ்.கே.ஜி.சேகர் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் அஇஅதிமுக பொருளாளரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
கடந்த திமுக ஆட்சியில் சொல்லொணா துயரங்களை அனுபவித்த தமிழக மக்கள், சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக வெற்றி பெற்று அம்மா முதலமைச்சராக ஆனால்தான் தங்கள் துயரம்தீரும் என்று முடிவு செய்து அம்மாவை முதலமைச்சராக ஆக்கி அஇஅதிமுகவை ஆட்சி கட்டிலில் அமர வைத்தீர்கள். அதனை மனதில் வைத்துதான் அம்மா தினந்தோறம் ஒரு திட்டத்தை தமிழக மக்கள் நலனுக்காக அறிவித்து வருகிறார். தமிழ்நாட்டில் 22 ஆண்டுகாலம் ஆட்சி செய்த ஒரே கட்சி அஇஅதிமுகதான். எம்.ஜி.ஆர் இறந்தபோது கட்சியில் 26 லட்சம் உறுப்பினர்கள் இருந்தார்கள். அம்மா பொறுப்புக்கு வந்தபிறகு கட்சியின் இன்றைய உறுப்பினர்களின் எண்ணிக்கை 1.5 கோடி. இந்த இயக்கத்தில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை. இங்கு பேசிய சில நிர்வாகிகள் கோரி;க்கைகள் சில வைத்தீர்கள் இது குறித்து முதலமைச்சர் அம்மா அவர்களின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்படும். தமிழகத்தை அம்மா ஆட்சி செய்துவரும் நிர்வாகத்திறமையாலும், ஆட்சித்திறத்தாலும் மற்ற மாநிலங்கள் எல்லாம் தமிழகத்தை உற்று நோக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தியாவை ஆட்சி செய்யும்தகுதி அம்மாவுக்குத்தான் உண்டு என்று மற்ற தேசிய கட்சிகள் எல்லாம் நினைக்கும் நிலை உருவாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு செயிண்ட்ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றும் அம்மா பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு செங்கோட்டையில் கொடி ஏற்றும் நிலையை உருவாக்க தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் வெற்றி என்ற நிலையை உருவாக்க பாடுபட வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் கழக சிறுபான்மையினர் நல பிரிவு செயலாளர் அன்வர்ராஜா, முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், முதுகுளத்துார் தொகுதி எம்.எல்.ஏ. முருகன், மாவட்ட துணை செயலாளர் ஜி.முனியசாமி, தொகுதி கழக செயலாளர் செ.முருகேசன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சுந்தரபாண்டியன், உட்பட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.