மணிப்பூர் மாநில தேர்தல் வன்முறைக்கு 5 பேர் பலி

இம்பால்,ஜன.29 - மணிப்பூர் மாநிலத்தில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 82 சதவீத ஓட்டுப்பதிவு நடைபெற்றது. ஆனால் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 5 பேர் பலியானார்கள் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் முதலாவதாக மணிப்பூர் மாநிலத்தில் 60 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 60 தொகுதிகளிலும் 279 வாக்காளர்கள் போட்டியிட்டனர். மணிப்பூர் மாநிலத்தில் மலைப்பகுதி இருப்பதால் வாக்காளர்கள் எளிதாக சென்று ஓட்டளிக்க கொஞ்சம் கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 2 ஆயிரத்து 357 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஓட்டுப்பதிவு நேற்றுக்காலை சரியாக 7 மணிக்கு தொடங்கியது. ஓட்டுப்பதிவு ஆரம்பமானது முதல் கடைசி 3 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆண்களும் பெண்களும் ஆர்வமாக வாக்குச்சாவடிகளுக்கு வந்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்டநேரம் வரிசையில் நின்று வாக்களித்தனர். மாநிலம் முழுவதும் சராசரியாக 82 சதவீத ஓட்டுப்பதிவு இருக்கலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் தங்கள் ஓட்டு இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். காங்கிரஸ் முதல்வர் வாக்களித்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றாலும் ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. ஒரு ஓட்டுச்சாவடியை தீவிரவாதிகள் கைப்பற்ற முயன்றபோது அவர்களுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய படையினர்களுக்குமிடையே பயங்கர சண்டை நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் தேர்தல் அலுவலர் உள்பட 5 பேர் பலியானார்கள் மற்றும் பலர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. வருகின்ற மார்ச் மாதம் 6-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதற்குள் உத்திரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துவிடும். உத்திரப்பிரதேசம் தவிர இதர மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. உத்திரப்பிரதேச மாநில சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி ஆரம்பமாகிறது. மணிப்பூர் மாநிலத்தில் ஒருசில இடங்களில் நடைபெற்ற வன்முறையையொட்டி தேர்தல் நடக்கவிருக்கும் இதர 4 மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.