இந்திய மீனவர்கள் 4 பேர் சுட்டுக்கொலை

 

காக்ட்விப்.ஜன. 29 - வங்காள விரிகுடா கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது வங்கதேச கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 4 இந்திய மீனவர்கள் பலியானார்கள். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவின் தென் பகுதியில் தமிழக மீனவர்கள் மீது அவ்வபோது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவது வழக்கமாக இருந்து வருகிறது.   இப்போது வங்காள விரிகுடா கடலில் வங்கதேச கடற்கொள்ளையர்கள் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மா பசந்தி என்ற மீன்பிடி படகில் இந்திய மீனவர்கள் சிலர் இரவில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது வங்கதேசத்தை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் ஒரு கும்பலாக வந்து அந்த மீன்பிடி படகில் வந்தவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் 4 இந்திய மீனவர்கள் படகில் விழுந்து பலியானார்கள்.  அந்த படகில் இருந்த மேலும் 8 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சத்தத்தை கேட்டு நேரில் பார்த்த அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த  இன்னொரு படகில் இருந்த இந்திய மீனவர்கள் அந்த கடற்கொள்ளையர்களுடன் போரிட்டு அந்த கொள்ளையர்களில் 4 பேரை மடக்கி பிடித்தனர்.

பலியான 4 பேரின் சடலங்கள், படுகாயம் அடைந்த 8 பேர் பிடிபட்ட கொள்ளையர்கள் 4 பேர் ஆகியோருடன் இந்திய மீனவ்ரகள் கரைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள் என்று காக்ட்விப் சரக எஸ்.டி. ஓ. மஜூம்தார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் இன்னொரு படகில் மீண் பிடித்துக்கொண்டிருந்த மேலும் 12 இந்திய மீனவர்களை மற்றொரு வங்க தேச கடற்கொள்ளையர்கள் கும்பல் கடத்தி சென்று விட்டது என்றும் அவர் கூறினார்.

இதை அடுத்து காக்ட்விப் பகுதியில் மீனவர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.