சென்னை,பிப்.9 - விஐடி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழங்களுக்கு இடையேயான தென்மண்டல மற்றும் அகில இந்திய சதுரங்க போட்டி இன்று தொடங்கியது. தொடர்ந்து 5 நாள் நடக்கும் இந்த சதுரங்க போட்டியை வேலூர் சரக காவல் துறை டிஐஜி பி. சக்திவேலு, தொடங்கி வைத்தார். விஐடி பல்கலைக்கழகத்தில் தென் மண்டல மற்றும் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான சதுரங்க போட்டி நேற்று 8-ம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகின்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 51 பல்கலைக்கழக மாணவ மாணவியர் அணிகள் பங்கேற்றுள்ளன. சதுரங்க போட்டிகள் தொடக்க விழா இன்று காலை விஐடியில் உள்ள உட்ஸ்டாக் திறந்த வெளி அரங்கில் நடைப்பெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை விஐடி உடற்கல்வி இயக்குநர் முனைவர் ஜே.விக்டர் தன்ராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் தேசிய கொடியை விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதனும், ஒலிம்பிக்கொடியை விழா சிறப்பு விருந்தினர் வேலூர் சரக டி.ஐ.ஜி பி.சக்திவேலு, அகில இந்திய பல்கலைக்கழக கொடியை துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் தென் மண்டல பல்கலைக்கழக கொடியை துணைத்தலைவர் ஜி.வி.சம்பத், வி.ஐ.டி பல்கலைக்கழக கொடியை துணைவேந்தர் முனைவர் வி.ராஜீ ஆகியோர் ஏற்றி வைத்தனர். விழாவிற்கு வி.ஐ.டி வேந்தர் டாக்டர் ஜி.விஸ்வநாதன் தலைமை வகித்து பேசியதாவது:
வி.ஐ.டி பல்கலைக்கழகம் தரமான உயர்கல்வி வழங்குவதுடன் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பல்கலைக்கழக மாணவர்கள் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க அவர்களுக்கு வேண்டிய சர்வதேச தரத்துடன் கூடிய விளையாட்டு அரங்குகள் விஐடியில் அமைக்கப்பட்டு உள்ளன. அதனுடன் மாணவர்களுக்கு விளையாட்டு உதவி தொகை அளிக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு உடல் ஆரோக்கியத்தை அளிக்க கூடியது.இளைமை காலம் முதலே விளையாட்டு பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். அதன்மூலம் எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாகலாம் என்றார். விழாவில் வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி பி.சக்திவேலு, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தென் மண்டல மற்றும் அகில இந்திய சதுரங்க போட்டியை தொடங்கி வைத்து பேசியதாவது: விஐடி பல்கலைக்கழகம் காணும்போது பசுமையுடன் கூடிய இயற்கை எழிலோடு காணப்படுகிறது. சர்வதேச அளவிலான தரமான உயர்கல்வி வழங்கப்பட்டு அதன் மூலம் இங்கு படித்த மாணவ, மாணவியர் வெளி நாடுகளில் சிறந்த நிறுவனங்களில் பணியில் இருப்பதாக அறிந்தேன் அதற்காக விஐடியை பாராட்டுகிறேன். தென் மண்டல மற்றும் அகில இந்திய அளவிலான சதுரங்க போட்டியை தொடங்கி வைத்துள்ளேன். இது உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்க அமையும். சதுரங்க விளையாட்டு என்பது மன அமைதி தரும் விளையாட்டு ஆகும். மன அமைதி தேடி சிலர் ஆசிரமங்களுக்கு செல்வது வழக்கம். சதுரங்க போட்டியில் பங்கேற்றால் மன அமைதியை கொடுக்கும் என்று பேசினார்.முடிவில் உடற்கல்வி இயக்குனர் என்.வி.தியாகசந்தன் நன்றி கூறினார்.