நாகர்கோவில்,பிப்-10 - நாகர்கோவில் அருகே இரணியலை அடுத்துள்ள மேலகட்டிமாங் கோட்டைச் சேர்ந்தவர் மனோகரன் (40). தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (35). இவர்களது மகள் ரதீஷா (10). ரமா (8). தூத்துக்குடி ஸ்பிக் நகரில் நடை பெறும் உறவினர் திருமண விழாவில் பங்கேற்பதற்காக இவர்கள் 4 பேரும் நேற்று அதிகாலை ஒரு ஜீப்பில் புறப்பட்டனர். இவர்களுடன் உறவினர்களான இரணியல் வீராணியைச் சேர்ந்த முருகன், ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த பெருமாள், இந்திரா, அவர்களது குழந்தைகள் ரேவதி மற்றும் டிரைவர் என மொத்தம் 9 பேர் ஜீப்பில் பயணம் செய்தனர்.
ஜீப் முப்பந்தல் அண்ணா நகர் பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் 10 பேரை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் வந்தது. அந்த மாணவிகள் கோவையில் நடந்த பயிற்சியில் பங்கேற்று விட்டு திரும்பிக்கொண்டு இருந்தனர். ஜீப்பும் வேனும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. மோதிய வேகத்தில் ஜீப் ஒரு பக்கமாக திரும்பியது. இதில் ஜீப் அப்பளம் போல் நொறுங்கியது.
ஜீப்பில் இருந்தவர்களும், வேனில் தூக்கத்தில் இருந்த மாணவிகளும் அலறி சத்தம் போட்டனர். அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் மீட்பு பணியில் ்டுபட்டனர். இந்த விபத்தில் ஜீப்பில் இருந்த மனோகரன் அவரது மனைவி ராஜேஸ்வரி மகள்கள் ரதீஷா, ரமா ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மற்ற 5 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஜீப் மீது மோதிய வேன் முன் பக்கம் மட்டும் சேதம் அடைந்தது. அதில் இருந்த மாணவிகள் அனைவரும் காயமின்றி தப்பினர். சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் கோட்டாரைச் சேர்ந்த ராஜனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான ரதீஷா கட்டிமாங்கோட்டில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். ரமா 3-ம் வகுப்பு படித்தார். ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சம்பவம் கட்டிமாங்கோடு, ஆரல்வாய்மொழி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.