முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹெலிகாப்டர் ஊழல்: தியாகி சகோதரர்களிடம் விசாரணை

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச். 7 - வி.வி.ஐ.பி. களுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பான விவகாரத்தில் முன்னாள் விமானப்படை தலைமைத் தளபதி எஸ்.பி.தியாகியிடம் நேற்று சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. மேலும் தியாகியின் சகோதரர்கள் மூவரிடமும் நேற்று விசாரணை நடந்தது. 

தியாகியின் சார்பில் இவர்கள்தான் லஞ்சப் பணத்தை வாங்கினார்கள் என்பது குற்றச்சாட்டு. அதுதொடர்பாக இந்த மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட தியாகி மற்றும் அவரது சகோதரர்கள் ஜூலி, ராஜீவ் மற்றும் டோஸ்கா தியாகி ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் குழு தீவிர விசாரணை நடத்தியது. கடந்த 2010 ம் ஆண்டு இத்தாலியின் பின்மெக்கானிகா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேன்ட்டிடமிருந்து ரூ. 4000 கோடி மதிப்பிலான 12 ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா முயற்சி மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக இத்தாலியில் சர்ச்சை கிளம்பியது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய இத்தாலிய அதிகாரிகள், முன்னாள் விமானப்படைத் தலைவர் எஸ்.பி.தியாகியின் சகோதரர்கள்தான் இதில், தியாகி சார்பில் இடைத்தரகர்களிடமிருந்து லஞ்சப் பணத்தைப் பெற்றதாக குற்றம் சாட்டினர். 

இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஒரு இடைத்தரகரான குய்டோ ஹெஸ்கி இதுகுறித்து கூறுகையில், தியாகியின் சகோதரர்களிடம் 1 லட்சம் ்ரோ பணத்தைக் கொடுத்ததாக தெரிவித்தார். இப்பணத்தின் ஒரு பகுதி தியாகியிடமே நேரடியாகப் போய்ச் சேர்ந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் இதை தியாகி மறுத்துள்ளார். தான் ஓய்வு பெற்று 3 ஆண்டுகளுக்குப் பின்னரே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது அவரது வாதமாகும். ஆனால் ஹெலிகாப்டர் வாங்கிய விவகாரத்தில் நிதி முறைகேடு நடந்திருப்பதாக சி.பி.ஐ. ஆணித்தரமாக கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்