முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தமிழர் பிரச்சினை: விவாதம் நடத்த சம்மதம்

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி,மார்ச்.7 - விவசாயிகளுக்கு ரூ.52 ஆயிரம் கோடி அளவுக்கு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதையொட்டி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சினையை எழுப்பி கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இலங்கை தமிழர்களின் பரிதாப நிலை குறித்தும் உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனையொட்டி ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தையொட்டி லோக்சபை நேற்று பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அ.தி.மு.க. வற்புறுத்தலுக்கு மத்திய அரசு பணிந்தது. 

வறுமையில் வாடும் விவசாயிகளுக்கும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் வங்கிகடன் ரூ.52 ஆயிரம் கோடி அளவுக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதுகுறித்து விவசாயிகளின் வங்கிக்கடன் கணக்குகளை ஆய்வு செய்த மத்திய தணிக்கைக்குழு விவசாய கடன் தள்ளபடி செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. 

இந்த பிரச்சினையை நேற்று பாராளுமன்ற லோக்சபையில் எதிர்க்கட்சிகள் கிளப்பின. 

நேற்று லோக்சபை கூடியதும் பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரி உறுப்பினர்கள் எழுந்து,விவசாயிகளுக்கு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ள பிரச்சினையை எழுப்பினர். இந்த பிரச்சினையை சபையில் உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக்கோரி பாரதிய ஜனதா கட்சியின் லோக்சபை துணைத்தலைவர் கோபிநாத் முண்டே தலைமையில் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் கோரியதோடு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களுடன் இடது கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் சேர்ந்துகொண்டனர். மறுபக்கம் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்கு சிங்கள அரசு இழைத்து வரும் கொடுமைகளை எடுத்துரைத்தனர். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷன் கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றையும் கொண்டு வந்தனர். லோக்சபையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் குழுத்தலைவர் தம்பித்துரை எழுந்து இலங்கையில் தமிழர்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை மூலம் பொருளாதார தடையை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். சபையின் மையப் பகுதிக்கு அ.தி.மு.க உறுப்பினர்கள் சென்று கோஷங்களை எழுப்பினர். அப்போது சபையில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படும் என்று சபாநாயகர் மீராகுமார் அறிவித்தார். ஆனால் விவசாயிகளுக்கு வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் நடந்துள்ள முறைகேடு குறித்து சபையில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று கோரி பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் சபையின் மத்திய பகுதிக்கு சென்று கோரியதோடு கோஷங்களையும் எழுப்பிக்கொண்டியிருந்தனர். மேலும் இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும்  என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூறிக்கொண்டு இருந்தனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனையடுத்து லோக்சபையை சபாநாயகர் மீரா குமார் நேற்று பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.

ராஜ்யசபையிலும் இலங்கை தமிழர்கள் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் குழுத்தலைவர் மைத்ரேயன் எழுப்பி பேசினார். அப்போது அவர் கூறுகையில் தூத்துக்குடி மீனவர்கள் 16 பேர்களை சிங்கள கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக மீனவர்கள் படும் துயரத்தையும் கொடுமையையும் நிரந்தரமாக போக்க வேண்டும் என்றால் இலங்கைக்கு தாரைவார்த்துக்கொடுத்த கச்சத்தீவை இந்தியா திரும்ப மீட்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் விவசாயிகளுக்கு வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதில் நடந்த முறைகேடு குறித்து இதர எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிக்கொண்டியிருந்ததால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அதனால் ராஜ்யசபையும் முதல் தடவையாக ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபை மீண்டும் கூடி

யதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கோரியபடி இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் என்று பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago