பொருளாதார கொள்கையால் நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும்

 

புதுடெல்லி,மார்ச்.7 - மத்தியில் உள்ள ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார கொள்கைகள் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும் உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

பாராளுமன்ற ராஜ்யசபையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை காங்கிரஸ் தலைவர் ரேணுகா செளத்ரி நேற்று தொடங்கிவைத்து பேசுகையில் மேற்கண்டவாறு கூறினார். மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் சிறந்தவைகள் என்றும் இதனால் உலக அளவில் சீனாவுக்கு அடுத்து நமது நாட்டில் பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்றும் கூறினார். நாம் பொருளாதார வளர்ச்சிக்கான சாதகமான நேரத்திற்கு வந்துள்ளோம். அதேசமயத்தில் உலகத்தின் இதர நாடுகளில் நிதி நெருக்கடி அதிக அளவில் இருக்கிறது. கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை நாம் கடந்து கொண்டியிருக்கிறோம். இதற்கு காரணம் மத்திய அரசின் சிறந்த பொருளாதார கொள்கைகள்தான். சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் 5.9 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இதற்கு காரணம் மத்திய அரசின் வலுவான பொருளாதார கொள்கைகள்தான். பெண்களுக்கு அதிக அதிகாரம் கிடைக்கவும் அவர்கள் அதிக அளவில் படிக்கவும் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் ரேணுகா செளத்ரி மேலும் கூறினார்.