கடலோரகளில் பலத்த மழை பெய்யும்: வானிலை மையம்

 

சென்னை, மார்ச்.8 - வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. நேற்று நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் அதிகபட்சமாக 17 செ.மீ அளவுக்கு மழை பெய்திருந்தது. குற்றாலத்திலும் கனமழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தூத்துக்குடி, திருச்செந்தூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம் மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்துள்ளது.

சென்னையில் பரவலாக லேசான மழை பெய்தது. எழும்பூர், கோயம்பேடு, வடபழனி, அடையார், தாம்பரம், அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர் உள்பட பல பகுதிகளிலும் பெய்த மழையால் வெய்யில் கூடு தணிந்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 11.7 மில்லி மீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 31.7 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

இந்த மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நகர்ந்து வருவதால் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யக் கூடும் என்றார்.