முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தற்கொலை செய்ய அனுமதி கேட்டு கருணை மனு: விவசாயி கதறல்

வியாழக்கிழமை, 7 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.8 -​ கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை, திருப்ர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல் வழியாக பெங்களூருக்கு எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசின் கெய்ல் இந்தியா நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

இதற்காக விவசாய நிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருவதால் தமிழக அரசு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு வருகிறது.

சென்னை அடையாறில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் நேற்று முன்தினம் கோவை, நாமக்கல் மாவட்ட விவசாயிகளையும், நில உரிமையாளர்களையும் அழைத்து கருத்து கேட்டனர். தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் விவ சாயிகளின் கருத்துக்களை முழுமையாக கேட்டறிந்தனர்.

நேற்று 2​வது நாளாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்ர் மாவட்டத்தைச் சேர்ந்த 300-​க்கும் மேற்பட்ட விவசாயிகளும், நில உரிமையாளர்களும் பங்கேற்றனர். காலை 10.30 மணிக்கு தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், தொழில்துறை முதன்மை செயலாளர் என்.எஸ்.பழனியப்பன், திருப்ர் கலெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் அமர்ந்து ஒவ்வொரு விவசாயிகளிடமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கேட்டறிந்தனர்.

கூட்டத்தை தொடங்கி வைத்து தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் பேசியதாவது:-​

முதல்​அமைச்சரின் ஆணைக்கிணங்க உங்களிடம் முழுமையாக கருத்து கேட்கப்பட உள்ளது. விவசாயிகளும், நில உரிமையாளர்களும் எந்தவித தயக்கமும் இன்றி சுருக்கமாக உங்கள் கருத்துக்களை எடுத்து கூறலாம். உங்களுக்கு எவ்வளவு சென்ட் இடம் உள்ளது. அதில் கெய்ல் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்க எவ்வளவு இடத்தை எடுக்கிறார்கள். இதனால் உங்களுக்கு என்னென்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை விரிவாக கூறுங்கள் என்றார்.

அப்போது விவசாயிகள் கூறியதாவது:​

வேலுச்சாமி (அவினாசி தாலுகா, அய்யன் தோட்டம்):​ எனக்கு 1 ஏக்கர், 1 சென்ட் இடம் உள்ளது. கடந்த பிப்ரவரி 13-​ந்தேதி போலீஸ் பாதுகாப்புடன் கெய்ல் நிறுவன அதிகாரிகள் வந்தனர். உங்கள் விளை நிலம் வழியாக குழாய் பதிக்க இருக்கிறோம். 67 அடி இடத்தை கையகப்படுத்துவோம் என்றனர். குழாய் சேதம் அடைந்தால் நீங்கள்தான் பொறுப்பு என்றும் மிரட்டினர். எனக்கு விவசாயத்தை தவிர வேறு வேலை தெரியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாங்கள் எப்படி வாழ்வது. மாற்றுப் பாதையில் குழாய்களை பதிக்க சொல்லுங்கள் என்று தேம்பி தேம்பி அழுதார்.

பின்னர் சகஜநிலைக்கு வந்து வேலுச்சாமி கூறும்போது, தொழில் இல்லாத போது எங்களால் வாழமுடியாது. எனவே என்னை வாழ வழியற்றவன் என்று அறிவித்து தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்குமாறு ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவேன் என்றார்.

தலைமைச் செயலாளர் :​ கெய்ல் நிறுவனத்தினர் உங்களுக்கு ஏதாவது அத்தாட்சி தந்தார்களா?

விவசாயிகள் பதில்:​ எதுவும் தரவில்லை. தேசிய நெடுஞ்சாலை அல்லது ஆற்றுப்படுகை வழியாக எரிவாயு குழாய்களை பதிக்க சொல்லுங்கள். விவசாய நிலத்தில் குழாய் பதித்தால் எல்லா விவசாயிகளும் என்னைப் போன்ற முடிவுக்குதான் வருவார்கள்.

விவசாயி வெங்கடசாலம் (பல்லாராயன்பாளையம்):​ எங்கள் விவசாய நிலத்துக்கு 150 போலீசாருடன் அதிகாரிகள் வந்தார்கள். எனக்கு தென்னை மரங்கள் உள்ளன. இந்த இடம் வழியாக குழாய் பதிக்க இருக்கிறோம் என்று கூறினார்கள். அந்த குழாய் 2 அடி விட்டம் தான் உள்ளது. இதை பதிக்க 5 அடி அகலத்திற்கு இடம் போதுமானது. ஆனால் 67 அடிக்கு இடம் கேட்கிறார்கள்.

தலைமை செயலாளர்:​ உங்கள் நிலத்தில் ஓரமாக குழாய் செல்கிறதா? அல்லது நடுவில் செல்ல உள்ளதா?

விவசாயி:​ நிலத்தின் நடுவில்தான் குழாய் பதிப்பதாக கூறுகிறார்கள். இதேபோல் ஒவ்வொரு விவசாயிகளும் தங்கள் கருத்துக்களை கூறினார்கள்.

கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க ஏராளமான விவசாயிகள் வந்ததால் கூட்ட அரங்கு நிரம்பி வழிந்தது. இன்று மதியம் கிருஷ்ணகிரி, மாவட்ட விவசாயிகளிடமும் கருத்து கேட்கப்படுகிறது. கடைசி நாளான நாளை தர்மபுரி, சேலம் மாவட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்கப்படுகிறது.

விவசாயிகள் வந்து செல்ல பஸ் வசதி, உணவு, தங்கும் இடம் ஆகியவையும் அரசு சார்பில் வழங்க விரிவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago