முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி ஊழல்: கனிமொழி - ராசாவிடம் தரப்பட்ட 1718 கேள்விகள்

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மார்ச்.29 - நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய 2ஜிஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கு விசாரணையை துரிதப்படுத்துவதற்காக சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு 1718 கேள்விகளை தயாரித்து அவற்றை இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா, கனிமொழி உள்பட அனைவரிடமும் வழங்கியுள்ளது. இந்த கேள்விகள் மொத்தம் 824 பக்கங்களை கொண்டுள்ளது. 

2ஜி இமாலய ஊழல் வழக்கு உலகையே உலுக்கிய ஒரு இமாலய ஊழலாகும்.இந்த ஊழல் மூலம் நாட்டிற்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இந்த ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, முதலில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதையடுத்து அவரது உதவியாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி. 

கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கனிமொழி கிட்டத்தட்ட 7 மாத சிறைவாசத்திற்கு பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மேலும் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளுக்கும் சமீபத்தில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. காரணம்,கனிமொழி,தயாளு அம்மாள் இருவருமே கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களாவர். 

இந்தநிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி சி.பி.ஐ.தனிக்கோர்ட்டு கனிமொழி,ஆ.ராசா உள்ளிட்ட 17 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்துவதற்காக 1718 கேள்விகளை தயாரித்துள்ளது. இந்த கேள்விகள் மொத்தம் 824 பக்கங்களை கொண்டதாகும். இந்த கேள்விகள் அடங்கிய வரைவு அறிக்கை கனிமொழி மற்றும் ராசா உள்பட அனைவரிடமும் வழங்கப்பட்டுவிட்டது. வழக்கு விசாரணையை துரிதப்படுத்த இது உதவும் என்று நீதிபதி சைனி தெரிவித்தார். வழக்கின் தன்மை கருதியும் நீதியின் நலன் கருதியும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் படித்து பதில் சொல்ல வசதியாகவும் இந்த கேள்விகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த கேள்விகளை படித்துப்பார்க்க அவகாசம் வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர் கேட்டக்கொண்டதையடுத்து வரும் ஏப்ரல் 21-ம் தேதி வரை அவகாசம் அளித்தார் நீதிபதி. அதாவது இந்த வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 21-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் வாக்குமூலம் மற்றும் சாட்சியம் சொன்ன அடிப்படையில்தான் இந்த கேள்விகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் 1718 கேள்விகள் தயாரிக்கப்பட்டிருப்பது தி.மு.க. வட்டாரத்தில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2ஜி விவகாரத்தால்தான் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியே உடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்