முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி சென்னை வருகை: ரஜினிகாந்தை சந்தித்து பேசுகிறார்

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.13: பா,ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று சென்னையில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவர் சந்தித்து பேசுகிறார்..

எல்.கே.அத்வானி, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி உள்ளிட்ட பா,ஜ.க தலைவர்களும் அடுத்த வாரம் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்கள்.

தமிழக பா,ஜ.க  மேலிடப் பார்வையாளர் முரளிதரராவ் நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

பா,ஜ.க  பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்றுசென்னை வருகிறார்.  சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு தென்சென்னை பா,ஜ.க  வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.

மேலும் 16, 17 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் 5 முதல் 6  தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டு பா,ஜ.க  மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மோடி பிரச்சாரம் செய்கிறார். பா,ஜ.க  மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வரும் 18ம் தேதியும், முன்னாள் பிஜேபி தலைவர்களான நிதின் கட்காரி 16_ந் தேதியும், வெங்கையா நாயுடு 18, 19, 20 ஆகிய தேதிகளிலும் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.

மேலும் கட்சியின் செய்தி தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி மீண்டும் தமிழகம் வருகிறார். நீலகிரியில் பா,ஜ.க  வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது துரதிருஷ்டமானது. அது பின்னடைவை அளித்துள்ளது. அங்கு யாரை ஆதரிப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.  தமிழகத்தை பொறுத்தவரை இந்த மாநிலத்துக்கு பா,ஜ.க  முன்னுரிமை கொடுத்து வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழர்கள் மற்றும்

இலங்கை    தமிழர்கள்  பிரச்சனைகள், அவர்களின் உரிமைகள் ஆகியவை குறித்து நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். தமிழகத்தில் தொழில் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. அதை மேலும் செம்மை மிகுந்ததாக்க பா,ஜ.க  பாடுபடும்.   தமிழகத்தில் அதிமுகவை எதிர்த்து பேசாதது ஏன் என்று கேட்கிறீர்கள். எங்களுக்கு முக்கிய எதிரி ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான். ஆகவே அதற்கு எதிராகத்தான் எங்களது பிரச்சாரம் அமைந்துள்ளது.

வைகோ மோடியின் கூட்டத்தை புறக்கணித்ததாக கூறுவது சரியல்ல. அவர் ஓட்டலில் மோடியை சந்தித்து பேசினார். அதேபோல மற்ற கூட்டணி கட்சித் தலைவர்களும் சந்தித்து பேசினார்கள். ஆகவே கூட்டணிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. 

மதவாத கட்சிகளை பதவிக்கு வர விடாமல் செய்ய வேண்டும் என்று கருணாநிதி கூறியிருக்கிறார். அவர் காலத்திற்கு ஏற்றார்போல் பேசக் கூடியவர் என்பது தெரிந்ததுதானே.  இவ்வாறு முரளிதர ராவ் கூறினார்.

 இன்று சென்னை வரும் நரேந்திர மோடி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசுகிறார் என்ற தகவலையும் அவர் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்