முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாரிப்பாளர் கவுன்சிலின் கூட்டத்தை நடத்த உத்தரவு

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை,ஏப்.13 - தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை வருகிற மே 11-ந் தேதி ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் நடத்தவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் செயலாளர் டி.சிவா, கே.ஈ.ஞானவேல்ராஜா ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தோல்வியடைந்த எஸ்.தாணு தலைமையிலான அணியினர், வெற்றிப் பெற்ற அணியினருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வருகிற 13_ந் தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டுகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.ஜெயசந்திரன், எம்.வேணுகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:_

இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கு மனுதாரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

எனவே, தயாரிப்பாளர் கவுன்சிலின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை வருகிற மே 11_ந் தேதி நடத்தவேண்டும். இந்த கூட்டத்தில், எதிர்மனுதாரர் தாணு உள்ளிட்டோர்கள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும், பிற தீர்மானங்களையும் சேர்த்து விவாதிக்க வேண்டும்.

இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை, ஐகோர்ட்டு ஓய்வுப்பெற்ற நீதிபதி பி.சண்முகம் தலைமையில் நடத்தப்படவேண்டும். இந்த கூட்டத்தில், நம்பிக்கையில்லா தீர்மான உள்ளிட்ட தீர்மானங்களை ரகசிய வாக்குப்பதிவு மூலம் அமைதியாகவும், சுமூகமாகவும் நீதிபதி சண்முகம் நடத்தவேண்டும். இதற்காக போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டால், அவற்றினை நீதிபதி பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்