முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரை பிரதமர் ஆக்குங்கள்: ஸ்ரீதர் வாண்டையார் பிரச்சாரம்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.16 - பாராளுமன்றதேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்து முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்குங்கள் என்று வாக்காளர்களை மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் பிரச்சாரத்தில் கேட்டுக்கொண்டார்.

   வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களைஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு மூவேந்தர் முன்னேற்றக்கழக தலைவர் ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார். கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட நெய்வேலியில் பிரச்சாரத்தை தொடங்கிய ஸ்ரீதர் வாண்டையார் மயிலாடுதுறை, தஞ்சை, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் சுற்றுபயணம் செய்து அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த ஸ்ரீதர் வாண்டையார் நேற்று விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டி.கே.ராதாகிருஷ்ணனை ஆதரித்து திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய பகுதிகளி்ல் திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் செய்தார்.

   இந்த பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடையோ ஸ்ரீதர் வாண்டையார் பேசியதாவது, தமிழக முதல்வர் ஜெயலலிதா தென்மாவட்ட தேவரின மக்களின் உணர்வுகளுக்கு மரியாதை செய்யும் வகையில் தேவர் ஜெயந்தி விழா இல்லாத காலத்தில் மனிதப்புனிதர் பசும்பொன் தேவர்திருமகனாருக்கு தங்க கவசம் அளிக்க பெரும் திரளாக வந்து மரியாதை செய்தார். அதற்கு பாராட்டு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நான் பிரச்சாரத்திற்கு செல்லும் அனைத்து இடங்களிலும் தேவரின மக்கள் மிகுந்த எழுச்சியுடன் பெரும் திரளாக கலந்து கொள்கின்றனர். தமிழகம் முழுவதும் 50 இடங்களில் சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளேன். இது இன அடிப்படையிலான ஆதரவு அல்ல அதையும் தாண்டி ஜெயலலிதா அவர்களின் விஷன்2023 என்ற தொலைநோக்கு பார்வையுள்ள திட்டமே முக்கியமானது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு தமிழன் பிரதமராகும் வாய்ப்பு நம் கைகளில் உள்ளது. அது நிறைவேறினால் தமிழகத்தில் தொழில்வளம், விவசாயிகள் நலம், நீர்வசதி, குடிநீர் வசதி, பாசன வசதி, கல்வி, சுகாதாரம், மின்மிகு மாநிலமாக தமிழகம் உருவாவதற்கும், போக்குவரத்து வசதி பெருகவும், மக்களின் குடியிருப்பு வீட்டு வசதி பெருகவும், தமிழகம் முதன்மையான மாநிலமாக உருவாகிட எல்லா துறைகளிலும் அடிப்படை வசதிகளும் மேம்பாடுகளும் தேவை. இவை கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு நிதி ஆதாரம் தேவை. முந்தைய மத்திய அரசு போதுமான நிதி தராமல் தமிழகத்திற்கு துரோகம் செய்தது. ஆனால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மையான வெற்றிகிடைக்க மக்கள் ஆதரவு அளித்து ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கசெய்யவேண்டும். அதன் மூலம் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு தேவையான நிதியை பெற்றுத்தரும் வல்லமையும், ஆளுகை திறனும் ஜெயலலிதாவுக்கு உண்டு என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லபட்டுள்ள கங்கை காவிரி இணைப்பு, நதிகள் தேசியமயமாக்கும் திட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. காவிரி நதிநீர் ஆணையத்தின் தீர்ப்பை மத்திய அரசின் கெசட்டில் வெளியிட வேண்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதை வெளியிடச்செய்தவர் ஜெயலலிதா. அதைப்போல காவிரி நடுவர் மன்ற மேலாண்மை வாரியம் அமைக்கவும், காவிரி நதி னீரை பிற மாநிலங்களுக்கு பகிர்ந்திளிக்க ஒரு உயரமட்ட குழுவை அமைக்க வேண்டும். ஆனால் இது வரை இருந்த காங்கிரஸ் அரசாஙகமோ, அதில் அங்கம் வகித்த திமுகவோ செய்ய வில்லை. இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால் காவிரி நதிநீரை முறைப்படுத்தி பகிர்ந்தளிக்க உயர்மட்ட குழுவை அமைப்பார். இது போன்ற தமிழகத்திற்கு நன்மை செய்யும் திட்டங்களை செயல்படுத்த அதிமுகவுக்கு மூவேந்தர் முன்னேற்றக் கழகம் முழுமையான ஆதரவளிக்கிறது. மக்களும் ஆதரவளித்து வெற்றி பெறச்செய்யவேண்டும் என்று கூறினார்.

   இந்த பிரச்சாரத்தில் மூவேந்தர் முன்னேற்றக்கழக  இணை தலைவர் ஆறுமுக நாட்டார், மாநில பொதுச்செயலாளர் சி.செல்வராஜ், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், செய்தி தொடர்பாளர் ஆர்.பி.சிவக்குமார் மற்றும் எம்.சுரேஷ், ஒச்சாத்தேவர், ஆனந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்