முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரணி தொகுதிக்கு செய்தது என்ன? முதல்வர் பட்டியல்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.16 - ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு தமிழக அரசு செய்தது என்ன என்று முதல்வர் ஜெயலலிதா பட்டியலிட்டார். ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வே.ஏழுமலையை ஆதரித்து வட தண்டலம் கிராமம், செய்யார்_ஆரணி நெடுஞ்சாலை' என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:_

ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வசதிகளை கடந்த 34 மாதங்களில் நாங்கள் நிறைவேற்றி கொடுத்து இருக்கிறோம்.  போளூர்_ஆரணி ரயில் நிலையங்களுக்கு இடையில், கடலூர்_சித்தூர் சாலையில் ஒரு சாலை மேம்பாலம் அமைக்க முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  

மயிலம்_பேரணி ரயில்வே நிலையங்களுக்கு இடையே 22 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சாலை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி_நெமூர் சாலையில், முண்டியம்பாக்கம்_விக்கிரவாண்டி ரயில்வே நிலையங்களுக்கு இடையே, 20 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சாலை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரயில்வே கடவு எண் 126 மற்றும் 127_க்கு மாற்றாக 36 கோடியே  38 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சாலை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

போளூர் வட்டம் மற்றும் செங்கம் வட்டம் பகுதிகளில், 3 கோடியே 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில், செய்யாற்றின் குறுக்கே கீழ்மட்ட தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. செய்யாறு வட்டம், கொருக்காத்தூர் கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே 2 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில், கீழ்மட்ட நிலத்தடி தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. 

ஆரணி தொகுதிக்குட்பட்ட திருநாவலூர் வட்டாரத்திலுள்ள சேந்தநாட்டில் ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. செய்யாறில் உள்ள அரிசி ஆலையை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

ஆரணி தொகுதி அனக்காவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தாமூர் மற்றும் 27 குடியிருப்புகளில் 13,756 பேர் பயன் அடையும் வகையில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் என்னால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

செய்யாறு ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்பூண்டி பட்டு மற்றும் ஒன்பது குடியிருப்புகளில் வசிக்கும் 4,000 மக்கள் பயன் அடையும் வகையிலான கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நாங்கள் நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம். 

வந்தவாசி நகராட்சியில் வசிக்கும் 31,000 மக்கள் பயனடையும் வகையிலான தண்ணீர் விநியோக மேம்பாட்டுத் திட்டப் பணிகள் 11 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

திருவத்திபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 38,000 மக்கள் பயன் பெறும் வகையில் 

13 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட 64,000 மக்கள் பயன்பெறும் வகையில் 36 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.  

ஆரணி தொகுதி, போளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட படவேடு மற்றும் 46 குடியிருப்புகளுக்கான குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் 3 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் முடிக்கப்பட்டு என்னால் துவக்கி வைக்கப்பட்டது. 

இந்தத் தொகுதிக்கு உட்பட்ட மயிலம், மேல்மலையனூர், செஞ்சி, வல்லம் ஆகிய ஒன்றியங்களில் 14 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் 47 ஏரிகளை சீரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. இந்த தொகுதிக்கு உட்பட்ட திருவக்கரை செங்கமேடு சாலை 45 லட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தப்பட்டு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. 

ஆரணி மக்களவைத் தொகுதியின் வளர்ச்சிக்காக, நலனுக்காக பல்வேறு பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தொகுதியில் வளர்ச்சி பணிகள் குறித்து பட்டியலிட்டு பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்