முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்குப்பதிவு முடிந்த பின்னர் எந்திரங்கள் சீலிடப்படும்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.16 - வாக்குப்பதிவு முடிந்த பின்னர் எந்திரங்கள் சீலிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பிரவீண்குமார் கூறியதாவது:_

புதிதாக வாக்களர் பட்டியலில் சேர்க்கக்கோரி விண்ணப்பித்தவர்கள் சேர்ந்த துணை வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பார்க்கலாம். விதிமீறல் தொடர்பான வழக்குகளை தேர்தல் முடிந்த பிறகும் ஆணையம் கண்காணிக்கும். தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் இறுதிச் செலவுக் கணக்கை வேட்பாளர் தாக்கல் செய்யப்படவேண்டும். 

தமிழகத்தில் தற்போது 70 ஆயிரம் கட்டுப்பாட்டு எந்திரங்களும், 1.25 லட்சம் வாக்குப்பதிவு எந்திரங்களும் உள்ளன. தற்போதைய நிலவரப்படி 10 ஆயிரத்து 500 வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றாக்குறை உள்ளது. தேர்தல் நடந்து முடிந்த பக்கத்து மாநிலங்களில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் பெறப்பட்டு பற்றாக்குறை நிறைவு செய்யப்படும். 

தற்போது ஐதராபாத்தில் இருந்து 2,013 வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்துள்ளன. இவை, தென்சென்னை, நாமக்கல், சேலம் ஆகிய இடங்களிலுள்ள வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும். ஓட்டுப்பதிவு அன்று, கட்டுப்பாட்டு எந்திரம் மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்களில் 10 சதவீதம், தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும். ஏதாவது வாக்குச்சாவடிகளில் உள்ள அந்த எந்திரங்களில் தொழில்நுட்ப பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினை ஏற்பட்டால், அதிலிருந்து எந்திரங்கள் எடுத்து, பயன்பாட்டுக்கு அனுப்பிவைக்கப்படும்.

மேற்கொண்டு எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 

வாக்குபதிவு எந்திரங்களுக்கு சீல்:_

அகில இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே தரப்பட்ட சில புகார்களின் அடிப்படையில் சில நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ஏற்கனவே நடந்த தேர்தல்களில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் "குளோஸ் பட்டன்'', வாக்குப்பதிவு முடிந்தது என்பதை குறிக்கும் வகையில் பொத்தான்களை அழுத்தவேண்டும். ஆனால் சில இடங்களில் நடந்த வாக்குப்பதிவில் அப்படி அழுத்தாததால் சந்தேகத்திற்கு இடமளிப்பதாகவும், முறைகேடுகள் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும், சில புகார்கள் தரப்பட்டுள்ளது. அதையொட்டி தேர்தல் ஆணையம் தற்போது ஓர் ஆணையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 24_ம் தேதி நடைபெறும் மக்களவை தேர்தலிலும், ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் சுதந்திரமாகவும், சுயேட்சையாகவும் தேர்தல் நடத்துவதற்கு ஏதுவாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் ஏஜெண்டுகள் முன்னிலையில் குளோஸ் பட்டன் அழுத்தப்பட்டு சீல் வைக்கப்படும்.

அனைத்து வாக்குப்பதிவு அதிகாரிகளும், வாக்குப்பதிவு முடிந்த பின்னர் கடைசியாக 17ஏ படிவத்தை பூர்த்தி செய்து அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகளின் கையெழுத்து பெற்று அதன்பின் அவர் கையெழுத்திட்டு வாக்குப்பதிவை முடிக்கவேண்டும். மேலும், வாக்குப்பதிவு அதிகாரிகள் அனைத்து அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகளின் முன்னிலையில் வாக்குச்சீட்டுகளின் கணக்குகளை முடித்து கையெழுத்திட்டு அவற்றை ஒட்டுமொத்தமாக சீல் வைக்கவேண்டும்.

இவ்வாறு தேர்தல் ஆணையம் விடுத்த உத்தரவு குறித்து பிரவீண்குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்