முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் மோடி அலை வீசவில்லை: பிரசாந்த் பூஷண் கருத்து

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.16 - நாட்டில் மோடி அலை எதுவும் வீசவில்லை என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரசாந்த் பூஷண் தெரிவித்தார். சென்னையில் நிருபர் களுக்கு அவர் அளித்த பேட்டி: 

தமிழகத்தை 1967-ம் ஆண்டு முதல் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. அனைத்து மட்டத்திலும் ஊழல் ஊடுருவி உள்ளது. ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு 17 ஆண்டுகளாக நடந்து வருகிறது. மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா, 2ஜி ஊழலில் ஈடுபட்டு, ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளார். அவரால் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 

திமுக, அதிமுக ஊழல் கட்சிகள். வருமானம் அதிகமாக இருப்பதால், டாஸ்மாக்கை அரசே நடத்துகிறது. இதனால், குற்றங்கள் அதிகரித்துள்ளன. குடும்பங்கள் மட்டுமின்றி பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் மிகப்பெரிய சமூக, அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினையாக மது உருவெடுத்துள்ளது. 

டாஸ்மாக் கடைகளுக்கு மது பாட்டில்கள் கொள்முதலில், இருகட்சிகளும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றன. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 25 தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. எங்கள் கட்சி போட்டியிடாத தொகுதிகளில், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் நல்ல சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்போம். அதேபோல, கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடாத தொகுதிகளில், ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். 

தமிழகம் உள்பட நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக சொல்கின்றனர். ஊடகங்களை கையில் வைத்து கொண்டு இதுபோல் பாஜகவினர் செய்கின்றனர். நாட்டில் மோடி அலை ஒன்றும் வீசவில்லை. ஊழலை எதிர்த்து போராடுவதைப் போல, மதுவை எதிர்த்தும் போராடுவோம். 

இவ்வாறு பிரசாந்த் பூஷண் தெரிவித்தார். 

பேட்டியின்போது கட்சியின் மாநில தேர்தல் பிரச்சார குழு ஒருங்கிணைப்பாளர் டேவிட் பருண்குமார் மற்றும் வேட்பாளர்கள் பலர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்