முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5ம் கட்ட தேர்தல்: 121 தொகுதிகளில் இன்று வாக்கு பதிவு

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable


புதுடெல்லி, ஏப்.17 - நாடாளுமன்ற தேர்தலில் 5வது கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 121 தொகுதிகளில் இன்று வாக்கு பதிவு நடக்கிறது. மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ள பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி, மே 12ம் தேதி வரையில் 9 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் இது வரையில் நான்கு கட்டங்களாக நடந்த தேர்தலில், 112 தொகுதிகளில் வாகக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்குகள் எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மீதமுள்ள 431 தொகுதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், 5 வது கட்ட தேர்தல் இன்று நடைபெற உள்ளது.  அசாமில் 6 தொகுதிகளிலும், பீகாரில் 7, சட்டீஸ்கரில் 3, ஜார்கண்டில் 5, கர்நாடகாவில் 28, மத்தியப்பிரதேசத்தில் 10, மகாரஷ்டிராவில் 19, ஒடிசாவில் 11, ராஜஸ்தானில் 20, உத்தரபிரேதசத்தில் 11, மேற்கு வங்கத்தில் 4 ஜம்முகாஷ்மீர் மற்றும் மணிப்பூரில் தலா ஒரு தொகுதிகளிலும் இன்று வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில் நேற்றுமுன்தினம் மாலையுடன் அனல் பறந்த பிரசாரம் முடிவடைந்தது. இந்த 121 தொகுதிகளில் மொத்தம் 1,739 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவற்றில் காங்கிரஸ் 101 தொகுதிகளிலும், பா.ஜ.க. 105 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின்  தேசிய தலைவர் சோனியா காந்தி பிரச்சாரம்  செய்தனர். பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், கோவா மாநில முதல்வர் மனோகர் பரிக்கர், மூத்த தலைவர்கள் வெங்கைய நாயுடு, அருண் ஜெட்லி உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். மஜத வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இன்று தேர்தலை சந்திக்கும் தலைவர்களில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் ( நான்டெட் தொகுதி), பீகாரில் லல்லு மகன் மிசா பாரதி ( பாடலிபுத்திரம் ), பாஜவில் இருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் (பார்மர் ), மேனகா காந்தி ( பிலிபட்), வீரப்பமொய்லி ( சிக்பல்லப்பூர் ), கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி (சிக்பல்லப்பூர் ) ஆகியோர் முக்கியமானவர்கள். 5ம் கட்ட தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை வாக்கு பதிவு நடைபெறுகிறது.
மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ள பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கரில் மத்திய படைகள் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு பதிவை அமைதியாக நடத்த தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்