முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி - கிருஷ்ணகிரியில் முதல்வர் இன்று பிரச்சாரம்

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      அரசியல்
Image Unavailable

மதுரை, ஏப் 17 - அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம் செய்கிறார். இதையொட்டி இரு தொகுதிகளும் விழாக்கோலம் பூண்டுள்ளன.
தமிழகத்தில் வரும் 24ம் தேதி பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வரலாறுகாணாத வகையில் முதன் முதலாக ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி ஆக மொத்தம் 40 தொகுதிகளிலும் அதிமுக முதல் முறையாக தனித்தே போட்டியிடுகிறது. கருணாநிதி தலைமையிலான திமுக 35இடங்களிலும் அதன் கூட்டணி கட்சிகள் மீதியுள்ள இடங்களிலும் போட்டியிடுகின்றன. தேமுதிக, பாஜக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு புதிய கூட்டணியை ஏற்படுத்தி இந்த தேர்தலை களம் காண்கின்றன.
கூட்டணியை உருவாக்கிய பாஜக தனக்கு 8 தொகுதிகளை மட்டும் ஒதுக்கி கொண்டது. அதிலும் ஒரு தொகுதியை வேலூருக்கு விட்டு கொடுத்தது. நீலகிரி பாஜக வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து பாஜக தற்போது 6 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. ஆனால் தேமுதிக 14 இடங்களில் போட்டியிடுகிறது.
இப்படியொரு கூட்டணியை இவர்கள் அமைத்தாலும் தலைவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாத காரணத்தால் அவரவர் தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். இந்த தேர்தலில் இடதுசாரிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. எல்லா தேர்தலிலும் திராவிட கட்சிகளின் தோள் மீதே ஏறி சவாரி செய்து பழக்கப்பட்டு போன காங்கிரஸ் கட்சியும் இந்த முறை தனித்து விடப்பட்டுள்ளது. இக்கட்சி 39 தொகுதிகளிலும் தனித்தே களம் காணும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இப்படியாக தமிழகத்தில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 3ம் தேதி தனது பிரச்சாரத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கினார். பிறகு ஸ்ரீபெரும்புதூர், கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், நெல்லை, நாமக்கல், ராசிபுரம், ஆரணி, வேலூர் போன்ற தொகுதிகளில் மின்னல் வேக பிரச்சாரம் செய்தார். தனது பிரச்சாரங்களில் திமுகவை கடுமையாக விமர்சித்தார் முதல்வர்.
ஆரம்பத்தில் பாரதீய ஜனதாவை அவர் விமர்சிக்கவில்லை. சில தினங்களுக்கு முன் நடந்த பிரச்சார கூட்டத்தில் பாரதீய ஜனதாவையும் முதல்வர் ஜெயலலிதா ஒரு பிடிபிடித்தார். காவிரி பிரச்சினையில் துரோகம் இழைத்த காங்கிரஸ், பாஜக மற்றும் திமுகவுக்கு வாக்களிக்க கூடாது என்று வாக்காளர்களை முதல்வர் கேட்டுக் கொண்டார். நேற்று முன்தினம் ஆரணியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கு முதல்வர் ஒரு சவாலும் விடுத்தார். அதாவது, காவிரி பிரச்சினையில் செய்த துரோகங்கள் பற்றி பட்டியலிட்டு பேச தயார். திமுக தலைவர் கருணாநிதி சட்டமன்றத்துக்கு வந்து என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று முதல்வர் ஜெயலலிதா பகிரங்க சவால் விடுத்தார். ஆனால் இந்த சவாலுக்கு கருணாநிதி இதுவரை பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில் ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு முதல்வர் ஜெயலலிதா இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி மக்களவை தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளராக அசோக் குமார் போட்டியிடுகிறார். தருமபுரி தொகுதியில் அதிமுக வேட்பாளராக மோகன் போட்டியிடுகிறார். இவர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா இன்று அத்தொகுதிகளில் நடக்கும் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார். அனேகமாக இந்த கூட்டங்களில் அவர் பாமகவையும் ஒரு பிடிபிடிக்க கூடும். காரணம், தருமபுரி தொகுதியில்தான் பாமக நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். எனவே முதல்வரின் இன்றைய பேச்சு காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வரின் வருகையையொட்டி இரு தொகுதிகளுமே விழாக்கோலம் பூண்டு காணப்படுகின்றன. அதிமுக கொடிகள், பதாகைகள், தோரணங்கள், அலங்கார வளைவுகள் என இரு தொகுதிகளுமே களைகட்டி காணப்படுகின்றன. முதல்வரை காண அதிமுகவினரும் பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்