முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதி மாறனை விரட்டி அடிக்க வேண்டும்: முதல்வர் பிரச்சாரம்

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப். 20 -  2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலுக்கு அடித்தளம் அமைத்த தயாநிதிமாறனை  விரட்டி அடிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார். ஆலந்தூர் தொகுதியில் வாக்கு சேகரித்த பின்னர் கிண்டி, அசாக்பில்லர், எம்.எம்.டி.ஏ. காலனி மற்றும் மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட ரசாக்கார்டன் சந்திப்பில் மத்திய சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். 

பிரச்சாரம் மேற்கொள்ள வந்த முதல்வரை முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, பாலகங்கா எம்.பி., மேயர் சைதை துரைசாமி, வேட்பாளர் விஜயகுமார் உட்பட பலர் அவருக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். பல இடங்களில் செண்டை மேளம், பேண்டு வாத்தியங்கள் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது. சூளை தபால் நிலையம், வால்டாக்ஸ் சாலை மற்றும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதை தொடர்ந்து மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட `ரசாக் கார்டன் சந்திப்பு' பகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாரை ஆதரித்து அங்கு கூடியிருந்த திரளான மக்களிடையே எழுச்சிமிகு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, 

மக்கள் பணத்தை கொள்ளை அடித்து, ஊழல் சாம்ராஜ்யம் நடத்திக் கொண்டிருக்கும் மத்திய காங்கிரஸ் அரசை தூக்கி எறிய வேண்டும், தமிழக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்த, மத்திய காங்கிரஸ் அரசை ஆதரித்த தி.மு.க_வை விரட்டி அடிக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் இன்று இங்கே நீங்களெல்லாம் கூடி இருக்கிறீர்கள். 

மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. மத்திய காங்கிரஸ் அரசை இப்படியே விட்டால் இந்திய நாட்டை முழுமையாக சூறையாடி விடுவார்கள்.  எனவே, இந்த ஊழல் மத்திய அரசை ஒழிப்பதே நமது முதல் குறிக்கோள்.  இந்த மக்களவைத் தேர்தல் மூலம் நாம் அதை நிறைவேற்ற வேண்டும்.  

இந்தத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பவர் கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன். 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலுக்கு அடித்தளம் அமைத்தவர். காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு முதன் முறையாக ஆட்சி அமைத்தவுடன் ஸ்பெக்ட்ரம் விலை குறித்தும், உரிமக் கட்டணம் குறித்தும் அமைச்சரவைக் குழு விவாதித்தது. அப்போது, தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் என்ன சொன்னார் தெரியுமா?  

இந்த ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் என்பது தொலைதொடர்புத் துறை சம்பந்தப்பட்டது. இதில் நிதித் துறை தலையிடக் கூடாது என்று சொன்னார்.  

இது தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலுக்கு அடித்தளம்.  

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்த போது அவருடைய சென்னை இல்லத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 323 டெலிபோன் இணைப்புகள் சட்ட விரோதமாக அளிக்கப்பட்டிருந்தன. அதாவது, ஒரு டெலிபோன் எக்ஸ்சேஞ்சே தயாநிதி மாறன் இல்லத்தில் இருந்தது. இவற்றை சன் டி.வி. நிறுவனம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கேபிள்கள் மூலம் இந்த டெலிபோன் இணைப்புகள் இணைக்கப்பட்டிருந்தன. இது குறித்து  2007_ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிபிஐ மத்திய தொலைதொடர்புத் துறைக்கு கடிதம் எழுதியும்,  அதன் மீது 44 மாதங்களுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர், உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டிய பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.  ஆனால், கருணாநிதி குடும்பத்தின் சன் டி.வி. நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம். ஏர்செல் நிறுவனம் ஏழு வட்டங்களுக்கு உரிமம் கேட்டு தொலைதொடர்புத் துறைக்கு விண்ணப்பித்தது. ஏர்செல் நிறுவனத்திற்கான உரிமத்தை அளிக்காமல், தயாநிதிமாறன் வேண்டும் என்றே தாமதம் செய்து வந்தார். ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசிய நாட்டைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வைத்து, அதன் மூலம் தனது  சகோதரர் கலாநிதி மாறனுடைய டி.டி.எச் நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் லாபம் தேடித் தந்தவர் தயாநிதி மாறன்.  

ஊர் சொத்தை கொள்ளையடிக்கும் இது போன்ற வேட்பாளரை(திமுக வேட்பாளரை) இந்தத் தேர்தலில் நீங்கள் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும்; சவுக்கடி கொடுத்து விரட்டியடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  

சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்த அரசு அதிமுக அரசுதான். வீராணம் ஏரியிலிருந்து சென்னை மாநகர மக்களுக்கு தண்ணீர் கொண்டு வரும் புதிய வீராணம் திட்டம் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது. வீராணம் திட்டத்துடன் நிற்காமல், மீஞ்சர், காட்டுப்பள்ளி கிராமத்தில் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும், என்னால் 2005_ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கான ஆணை வழங்கப்பட்டு இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. 

2006_ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மந்த கதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதால், 2010_ஆம் ஆண்டு தான் இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. 

2006_ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மத்திய அரசின் 1,000 கோடி ரூபாய் நிதி உதவியுடன் கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்று நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டதோ 2009_ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தான். இதன்படி, நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் பணிகள் ஆமை வேகத்தில் மேற்கொள்ளப்பட்டன.  

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு ஆட்சியிலிருந்து விலகும் போது வெறும் 25 விழுக்காடு பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டிருந்தன.  பின்னர் நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, இதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டு இந்தத்  திட்டம் 2013_ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் என்னால் துவக்கி வைக்கப்பட்டது. 

சென்னை மாநகரின் பெருகி வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு 1,000 கோடி ரூபாய் மதிப்பில் நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க உத்தரவிடப்பட்டு, அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இது மட்டுமல்லாமல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூர் என்ற இடத்தில் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. தேர்வாய்கண்டிகை ஏரியிலிருந்து பூண்டி ஏரிக்கு கண்டலேறு பூண்டிக் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் 93 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. 

மத்திய சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வசதிகளை கடந்த 34 மாதங்களில் நாங்கள் நிறைவேற்றி கொடுத்து இருக்கிறோம்.  சேத்துப்பட்டு ஏரியை 42 கோடி ரூபாய் செலவில் சிறந்த சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எழும்பூர்_நுங்கம்பாக்கம் வட்டத்தினை பிரித்து அமைந்தகரையில் ஒரு புதிய வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.  ராயப்பேட்டை மருத்துவமனையில் 17 கோடி ரூபாய் மதிப்பில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அரசினர் தாய் சேய் நல மருத்துவமனைக்கென 53 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் புதிய அடுக்குமாடிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. குழந்தைகள் மருத்துவமனைக்கென 18 கோடியே 47 லட்சம் பொய் செலவில் 300 படுக்கை வசதியுடன் கூடிய புதியக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 

சென்னை மருத்துவக் கல்லூரிக்கு 56 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் புதிய வளாகக் கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனையில் 16 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் மகப்பேறு சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.  சென்னை மாநகர வளர்ச்சிக்காக இதுவரை இல்லாத அளவுக்கு 1,161 கோடி ரூபாய் செலவில் 847 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள், 530 கிலோ மீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால்வாய்கள், 276 கிலோ மீட்டர் நீளமுள்ள நடை பாதைகள்; 

10,500 தெரு விளக்குகள் உட்பட பல்வேறு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் 174 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 

1,780 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இது போன்று, பல்வேறு பணிகளை மத்திய சென்னை தொகுதி மக்களுக்கு நாங்கள் செய்து கொடுத்துள்ளோம். இன்னும் பல்வேறு பணிகளை உங்களுக்கு செய்து கொடுக்க இருக்கிறோம். 

தமிழகத்திலே கடந்த 34 மாத கால ஆட்சியில் முத்தான பல திட்டங்களை அதிமுக அரசு அளித்துள்ளது. 

வருகின்ற மக்களவைத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்காக நடைபெறுகின்ற சாதாரண தேர்தல் அல்ல.  இந்தியாவின் வளர்ச்சியை மாற்றி அமைக்கும் தேர்தல். உங்களின் தலைவிதியை மாற்றி அமைக்கப் போகின்ற தேர்தல்.  அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவை காக்கின்ற தேர்தல்.

உங்களின் ஆதரவோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் உங்கள் ஆட்சி மத்தியிலே அமையப் பெறும் போது, 

விலைவாசி உயர்வு, தமிழக மீனவர் பிரச்சினை, தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கல், அன்னி? முதலீடு ஒழிய, கறுப்பு பணத்தை மீட்க, பெட்ரோல், டீசல் விலை நிர்ணய கொள்கையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். 

'அமைதி, வளம், வளர்ச்சி' என்ற பாதையில் இந்தியாவை  வழி நடத்திச் செல்ல அதிமுகவுக்கு ஒரு வாய்ப்பினை நீங்கள் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. 

நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தலில், மத்திய சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் அன்புச் சகோதரர் எஸ்.ஆர்.விஜயகுமாருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில்வெற்றியடைய செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்