முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மீனவர்கள் குடும்பத்திற்கு காங்., அரசு துரோகம்: முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப்.21 - அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று சென்னை வடக்கு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் டி.ஜி.வெங்கடேஷ் பாபுவை ஆதரித்து `திருவொற்றியூர் தேரடி' என்ற இடத்தில் ஆற்றிய எழுச்சிமிகு பிரச்சார உரை வருமாறு:-

வட சென்னை நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்களே, கழக நிர்வாகிகளே, தலைமைக் கழக நிர்வாகிகளே, அமைச்சர் பெருமக்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளே, தோழமைக் கட்சிகளின் தலைவர்களே, தொண்டர்களே, பொதுமக்களே, வணக்கத்திற்குரிய பெரியோர்களே, என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே, இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே, எனதருமை வாக்காளப் பெருமக்களே, உங்கள் அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கத்தை  முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் பணத்தை கொள்ளை அடித்து ஊழல் சாம்ராஞுயம் நடத்திக் கொண்டிருக்கும் மத்திய காங்கிரஸ் அரசை தூக்கி எறிய வேண்டும், தமிழக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்த மத்திய காங்கிரஸ் அரசை ஆதரித்த தி.மு.க_வை விரட்டி அடிக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் இன்று இங்கே நீங்களெல்லாம் கூடி இருப்பதைப் பார்க்கும் போது, உள்ளபடியே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 

தற்போது இருப்பது போன்ற மோசமான நிலையை சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நாம் பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை. அந்த அளவுக்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. எந்த ஊழலை எடுத்தாலும், ஒரு லட்சம் கோடி ரூபாய், இரண்டு லட்சம் கோடி ரூபாய் தான்.

சாமானிய மக்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் கடந்த ஆண்டு வரை அங்கம் வகித்து ஒட்டி உறவாடிய கட்சி தி.மு.க. என்பதை மறந்துவிடாதீர்கள். தமிழ் நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை முன்னின்று நடத்திய கட்சி தி.மு.க. என்பதை மறந்துவிடாதீர்கள்.    

தமிழகத்திலே மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்த அரசு, எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. கடந்த 34 மாத கால ஆட்சியில் தமிழக மக்களுக்கு என்னென்ன நலத் திட்டங்களை வளர்ச்சித் திட்டங்களை தொலைநோக்குத் திட்டங்களை என்னால் தர முடியுமோ அவற்றையெல்லாம் அளித்து இருக்கிறேன்; அளித்து கொண்டும் வருகிறேன். 

மத்திய அரசின் தவறான கொள்கைகளால், இடு பொருட்கள் விலை உயர்வால், உர விலை உயர்வால், டீசல் விலை உயர்வால், போக்குவரத்துச் செலவு உயர்வால், வட்டி விகித அதிகரிப்பால், விலைவாசி விஷம் போல் ஏறி உள்ளது. விலைவாசி உயர்வில் இருந்து சாமானிய மக்களைக் காக்க, நான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படுகிறது. குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள், காய்கறிகள் வழங்கப்படுகின்றன. 

ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வண்ணம் சென்னை மாநகராட்சியில் 203 அம்மா உணவகங்களில் மிகக் குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்படுகிறது. 

சென்னை மாநகர மக்களின் குடிநீர்ப் பிரச்சனையை தீர்த்து வைத்த அரசு உங்கள் அன்புச் சகோதரியின் அரசு. வீராணம் ஏரியிலிருந்து சென்னை மாநகர மக்களுக்கு தண்ணீர் கொண்டு வரும் புதிய வீராணம் திட்டம் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டது. 

வீராணம் திட்டத்துடன் நிற்காமல், மீஞ்சர் காட்டுப்பள்ளி கிராமத்தில் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டமும், என்னால் 2005_ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கான ஆணை வழங்கப்பட்டு, இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. 2006_ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மந்த கதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 

திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றன.  முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு ஆட்சியிலிருந்து விலகும் போது, வெறும் 25 விழுக்காடு பணிகளே முடிக்கப்பட்டு இருந்தன. பின்னர் 2011_ல் நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு இதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டு, இந்தத் திட்டம் 2013_ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் என்னால் துவக்கி வைக்கப்பட்டது.  

வாக்காளப் பெருமக்களே! சென்னை மாநகரின் பெருகி வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு, 1,000 கோடி ரூபாய் மதிப்பில் நெம்மேலியில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க உத்தரவிடப்பட்டு, அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

இது மட்டுமல்லாமல், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூர் என்ற இடத்தில் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. 

தேர்வாய்கண்டிகை ஏரியிலிருந்து பூண்டி ஏரிக்கு, கண்டலேறு பூண்டிக் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் 93 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. 

வாக்காளப் பெருமக்களே! அண்மையில், கன்னியாகுமரி பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி, தமிழக மீனவர் பிரச்சனையில் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அக்கறை காட்டவில்லை என்றும், இந்தியா_இலங்கை மீனவர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தைக்கு காங்கிரஸ் அரசு தான் காரணம் என்றும் பேசியுள்ளார். இதில் எள்ளளவும் உண்மை இல்லை.  மாறாக மீனவர்களை வஞ்சித்த அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. 

மீனவர்களின் நண்பனாக விளங்குகின்ற ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பதை மீனவப் பெருமக்கள் நன்கு அறிவார்கள். 

எனவே, தமிழக மீனவர்கள் பிரச்சனையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அக்கறை செலுத்தவில்லை என்று சொல்வதை மீனவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழக மீனவர்களுக்காக பல்வேறு நன்மைகளை செய்த அரசு எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. 

மீன்பிடி தடை காலங்களில் தமிழக மீனவர்களுக்கு  வழங்கப்பட்டு வந்த 1,000 ரூபாய் உதவித் தொகை 2,000 ரூபாயாக உயர்த்திக் கொடுக்கப்பட்டது. 

மீன்பிடிப்பு குறைந்த காலங்களில் 4,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதிய திட்டத்தை நான் உருவாக்கினேன். 

மீனவ மகளிருக்கு மீன்பிடி குறைவாக உள்ள காலங்களில் 1,800 ரூபாய் உதவித் தொகை வழங்கி வரும் அரசு, எனது தலைமையிலான அரசு.

மீன்பிடி குறைவாக உள்ள காலத்திற்கான நிவாரணத் திட்டத்தின் கீழ் கடல் மீனவருக்கு 1,800 ரூபாய் வழங்கி வரும் அரசு, எனது தலைமையிலான அரசு.

மீனவர்கள் பயன்படுத்தும் மோட்டார் படகுகளுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெயை மானிய விலையில் வழங்கும் அரசு, எனது தலைமையிலான அரசு.  

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அயல் நாட்டவரால் சிறைபிடிக்கப்படும் போது, அவர்கள் தாயகம் திரும்பும் வரை பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவித் தொகையை 50 ரூபாயிலிருந்து 250 ரூபாயாக நான் உயர்த்தி வழங்கினேன். 

ஒடிசா புயலில் சிக்கித் தவித்த 18 தமிழக மீனவர்களை பத்திரமாக மீட்டு அவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கிய அரசு, எனது தலைமையிலான அரசு.

ஈரான் நாட்டு சிறையில் வாடிக் கொண்டிருந்த 16 தமிழக மீனவர்களை மீட்டதோடு, அவர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கிய அரசு, எனது தலைமையிலான அரசு. 

தானே புயலில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட மீனவ மக்களின் வலைகளும் படகுகளும் சேதம் அடைந்த போது, அவர்களுக்கு தேவையான நிதி உதவியை அளித்த அரசு, எனது தலைமையிலான அரசு. 

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அச்சுறுத்தப்படும் போதும், சிறைபிடிக்கப்படும் போதும், வலைகள் மற்றும் படகுகள் சேதப்படுத்தப்படும் போதும், உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலமும், தூதரக நடவடிக்கைகள் மூலமும், தமிழக மீனவர்கள் விடுவிக்கப் படுவதற்கான நடவடிக்கைகளை எடுத்த அரசு, எனது தலைமையிலான அரசு. 

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு முக்கிய காரணம் கச்சத் தீவு இலங்கை அரசாங்கத்திற்கு தாரை வார்க்கப்பட்டது தான்.

1974 மற்றும் 1976_ஆம் ஆண்டைய ஒப்பந்தங்களின் மூலம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் தான் இலங்கை நாட்டிற்கு கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி.  கச்சத் தீவை தாரைவார்த்த ஒப்பந்தங்கள் செல்லத்தக்கதல்ல என அறிவிக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் 2008_ஆம் ஆண்டு நான் வழக்கு தொடர்ந்தேன்.  இதற்கு மத்திய காங்கிரஸ் அரசு என்ன பதில் மனு தாக்கல் செய்தது? கச்சத் தீவு இந்திய நாட்டின் ஒரு பகுதியே அல்ல என்று கூறி; ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு மத்திய காங்கிரஸ் அரசு மனு தாக்கல் செய்தது. இது தான் மீனவர்கள் மீது மத்திய காங்கிரஸ் அரசு கொண்டுள்ள அக்கறையா? இது மீனவர் விரோதச் செயல் இல்லையா?

இது சோனியா காந்திக்கு தெரியாதா? ஒன்றுமே தெரியாதது போல் சோனியா காந்தி பேசுகிறாரா? இப்படிப்பட்ட சோனியா காந்தி தமிழக மீனவர்கள் பிரச்சனையில் எனது தலைமையிலான அரசு அக்கறை செலுத்தவில்லை என்று கூறுவது நகைப்புக்குரியது ஆகும்; கேலிக்கூத்தானது ஆகும். 

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்தியா உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அன்றாடம் பாரதப் பிரதமருக்கு நான் கடிதம் எழுதிக் கொண்டு இருக்கிறேன். இதன் மீது மத்திய காங்கிரஸ் அரசால் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? 

தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையே 2010_ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை நிறைவேற்ற மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? 2011_ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவுகளை ஏன் மத்திய காங்கிரஸ் அரசு வெளியிடவில்லை? இதனை அனுப்புமாறு நாங்கள் கேட்டும், அனுப்பாமல் மத்திய காங்கிரஸ் அரசு ஏன் மவுனம் சாதிக்கிறது என்பதை திருமதி சோனியா காந்தி விளக்க வேண்டும். 

தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பு, சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, அதனை நிறைவேற்றிக் காட்டிய அரசு, எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. ஆனால், இந்தப் பேச்சு வார்த்தைக்கு காரணமே காங்கிரஸ் அரசு தான் என்று திருமதி சோனியா காந்தி பேசி இருக்கிறார்! இது என்ன பித்தலாட்டம்?

தமிழக மீனவர்களை அடித்து துன்புறுத்துவதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் இலங்கை நாட்டு ராணுவத்தினருக்கு, இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று   நான் பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதினேனே? ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

நான் 2011_ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், பாரதப் பிரதமரை சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் சரை மீன்பிடி விசை படகுகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இதன் மீது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்ததா? 

இருப்பினும் எனது தலைமையிலான அரசு சரை மீன் பிடி விசைப் படகுகள் வாங்க 50 விழுக்காடு மானியம் வழங்கி வருகிறது. 

முடசலோடையில் உள்ள மீன் இறங்கு தளத்தை 7 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விரிவுபடுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு அதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதே போன்று, சாமியார் பேட்டையில் 

2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய மீன் இறங்கு தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகாரில் 78 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய மீன்பிடி துறைமுகம் அமைக்க என்னால் அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 

தமிழக மீனவர்களுக்கு எதிராக, இலங்கை அரசுக்கு சாதகமாக செய்வதை எல்லாம் செய்து விட்டு, தேர்தல் வந்தவுடன் மீனவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் சோனியா காந்தி.

இத்துடன் நின்றுவிடவில்லை. மீனவர்களின் உற்ற நண்பனாக விளங்கிக் கொண்டிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது புழுதிவாரி இறைக்கிறார். தமிழக மீனவர்கள் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி போல் துரோகம் செய்த கட்சி வேறு எதுவுமே கிடையாது. மீனவர்களைப் பற்றி பேசுவதற்கு உரிய அருகதையே காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. 

ஓட்டுக்காக தேர்தல் சமயத்தில் தமிழக மீனவர்கள் மீது கரிசனத்தை பொழியும் சோனியா காந்தி இதற்கு முன்பு இந்தப் பிரச்சனை பற்றி எங்காவது பேசியிருக்கிறாரா? நாடாளுமன்றத்தில் ஒரு வார்த்தையாவது பேசி இருக்கிறாரா?

காங்கிரஸ் மற்றும் அதற்கு பக்க பலமாக இருந்த தி.மு.க. ஆகியவற்றின் மீனவ விரோத செயலுக்கு, இந்தத் தேர்தலில் நீங்கள் தக்கப் பாடம் புகட்ட வேண்டும்.  காங்கிரஸ் கட்சிக்கும், திமுக_வுக்கும் நீங்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்.  காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அனைத்து தொகுதிகளிலும் நீங்கள் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்) .

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்