முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்குப்பதிவு

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஏப்.23 - தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த 6 வாரங்களுக்கும் மேலாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்றுமாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாளை (24-ம் தேதி) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. 

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 9 கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு அதன்படி தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. 6-வது கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் ஆலந்தூர் சட்டசபை தொகுயிலும் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. 

தமிழகத்தில் இந்த முறை வரலாறு காணாதா வகையில் 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. இத்தேர்தலில் 40 தொகுதிகளிலுமே தனித்து போட்டியிடுகிறது. தனது அரசின் சாதனைகளை நம்பியும் மக்கள் ஆதரவையும் நம்பியும் முதல்வர் ஜெயலலிதா இந்த முடிவு எடுத்து தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளார். தி.மு.க. 35 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சிகள் மீதியுள்ள தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் போட்டியிடுகிறார். ஆனால் தி.மு.க. வேட்பாளர்களுக்கு இந்த முறை கடும் எதிர்ப்பு நிலவுகிறது. குறிப்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரியே தி.மு.க. வேட்பாளர்களை தோற்கடிக்க தீவிரம் காட்டி வருகிறார். இந்த தேர்தலில் 6 கட்சிகளை இணைத்து பாரதிய ஜனதா ஒரு கூட்டணியை அமைத்துள்ளது. அதில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகள் அடங்கும். கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றன. மொத்தம் 18 தொகுதிகளில் இந்த கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த முறை காங்கிரசுடன் யாரும் கூட்டணி அமைக்க முன்வரவில்லை. 10 ஆண்டுகள் கூட்டணியாக இருந்த தி.மு.க.வே காங்கிரசை கழற்றிவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் தோல்வி பயத்தால் பல தலைவர்கள் போட்டியிடவே இல்லை. இப்படியாக 5 முனை போட்டி தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த மார்ச் 3-ம் தேதி தனது பிரசாரத்தை காஞ்சிபுரத்தில் தொடங்கி 40 தொகுதிகளிலும் பிரசாரம் செய்துவிட்டார். தனது பிரசாரத்தின் இறுதிக்கட்டமாக அவர் மத்திய சென்னை, வட சென்னை, தென்சென்னை தொகுதிகளில் பிரசாரம செய்தார். தனது பிரசார கூட்டத்தில் எல்லாம் அவர் தி.மு.க.வின் ஸ்பெக்டரம் ஊழலையும் தி.மு.க. செய்த துரோகங்களையும் மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழகத்திற்கு செய்த துரோகங்களையும் பட்டியலிட்டு பேசினார். இந்த இரண்டு கட்சிகளையும் டெபாசிட் இழக்கச் செய்யுமாறு மக்களை கேட்டுக்கொண்ட அவர் செய்வீர்களா?செய்வீர்களா என்று மக்களை பார்த்து எல்லாம் கூட்டங்களிலும் கேள்வி எழுப்பினார். அவரது இந்த புதிய பாணி மக்களை மிகவும் கவர்ந்தது. தென் சென்னை கூட்டத்திலும் இரண்டு கட்சிகளையும் முதல்வர் ஜெயலலிதா ஒரு பிடி பிடித்தார். மேலும் 41 வேட்பாளர்களையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். அத்துடன் அவரது பிரசாரம் முடிவுக்கு வந்தது.

 இதேபோல் தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது மகன் மு.க.ஸ்டாலின் பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோரும் தங்கள் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்தார்கள். காங்கிரசை பொருத்தமட்டில் மத்திய மந்திர ப.சிதம்பரம், ஜி.கே. வாசன் போன்றவர்கள் தங்களால் முடிந்த வரை பிரசாரம் செய்தனர். மேலும் சோனியாவும் ராகுலும் தமிழகம் வந்து பிரசாரம் செய்தனர். பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியும் தமிழகத்தில் பல இடங்களில் பிரசாரம் செய்துவிட்டு திரும்பியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்காக ராமகிருஷ்ணனும் த.பாண்டியனும் சில கூட்டங்களில் பேசினார்கள். அ.தி.மு.க. வுக்கு ஏராளமான நடிகர், நடிகைகள் இம்முறை களத்தில் இறங்கி பிரசாரம் செய்தனர். ஆனால் தி.மு.க.வுக்கு குஷ்பு மட்டும் பிரசாரம் செய்தார். இப்படியாக கடந்த 6 வாரங்களுக்கும் மேலாக நடந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்றுமாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தேர்தலில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 845 பேர் போட்டியிடுகிறார்கள். நாளை வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு  முடிகிறது. தமிழகத்தில் தேர்தலை அமைதியாக நடத்த தேர்தல் ஆணையம் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளது. பாதுகாப்புக்காக தமிழக போலீசார் மட்டுமின்றி துணைராணுவ படையினரும் ஆயிரக்கணக்கில் குவிக்கப்படுகிறார்கள். ஒரு சில இடங்களில் போலீஸ் அணிவகுப்பும் நடைபெற்றது. தேர்தலை முன்னிட்டு மதுக்கடைகளை நேற்று செவ்வாய்கிழமை முதல் வாக்குப்பதிவு தினமா நாளை மாலை வரை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்