முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.எஸ்.எஸ், பாஜக மீது தடை விதிப்போம்: லாலு சூளுரை

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

பாட்னா,ஏப்.24 - ராஷ்டிரீய ஜனதா தளம் வசம் ஆட்சி அதிகாரம் வந்தால், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக மீது தடை விதிப்பதோடு, வன்முறையை தூண்டுபவர்களை நாட்டை விட்டே துரத்துவோம் என்று அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா, பாஜக பீகார் நவாடா தொகுதி வேட்பாளர் கிரிராஜ் சிங் பேச்சுகள் குறித்து தனது கருத்தை பதிவு செய்த லாலு பிரசாத் யாதவ், பாஜகவின் கறை படிந்த முகத்தை இத்தகைய வெறுப்புப் பேச்சுகள் காட்டுகிறது என்றார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

ராஷ்டிரீய ஜனதா தள கட்சி வசம் ஆட்சி அதிகாரம் வந்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, பாரதிய ஜனதா கட்சி மீது தடை விதிக்கப்படும். வன்முறையை தூண்டுபவர்களை நாட்டை விட்டே துரத்துவோம்.

கிரிராஜ் சிங், அரசியல் தலைவரே அல்ல. பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முகமூடி. மறைமுகமாக பாசிஸத்தையும், மதவாதத்தையும் நாட்டில் பரப்ப முற்படுகிறது பாஜக. சர்ச்சை கருத்துகளை தெரிவிக்கும் பாஜகவினர் பிடிபட்டால் உடனடியாக சாக்குபோக்கு சொல்லி தப்பிக்க நினைக்கின்றனர்.

பேச்சில் வெறுப்பை விதைக்கும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாடு பற்றி எரியும். அந்த வன்முறை தீயில் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறுத்துவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் வதைபடுவார்கள். இந்திய தேசம் சிதைக்கப்படும். இத்தகைய சக்திகள் கைகளில் நாடு செல்லாமல் ஆண்டவனே தடுக்க வேண்டும் இவ்வாறு லல்லு பிரசாத் யாதவ் கூறினார்.

அதே வேளையில், கிரிராஜ் சிங் பீகார் மற்றும் ஜார்கண்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பதை வரவேற்பதாக லாலு பிரசாத் யாதவ் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்