முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சியம்மன் கோயிலில் குறைந்த விலைக்கு பழத்தட்டு

திங்கட்கிழமை, 7 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஜூலை 8 - மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பழத்தட்டுகளை நிர்வாகமே விற்பனை செய்வதை பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதில் வட மாநிலத்தை சேர்ந்தவர்களும், வெளிநாட்டு பக்தர்களும் அதிகளவில் உள்ளனர். வட மாநில பக்தர்களும், வெளிநாட்டவரும் கூட அருள்மிகு மீனாட்சி அம்மனை வழிபடும் போது பழம் தட்டு வைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதையடுத்து கோபுர வாசல்களிலும் பழத்தட்டு விற்பனை இதுவரை தனியாருக்கு ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுத்தவர்கள் ஒரு தட்டு ரூ. 100 முதல் ரூ. 150 வரை விற்பதாக புகார்கள் எழுந்தன. தமிழ் தெரியாத வட மாநிலம் மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடம் கூடுதல் விலைக்கு பழத்தட்டுகளை விற்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அனைத்து பெரிய கோயில்களிலும் பழத்தட்டு விற்பனையை கோயில் நிர்வாகமே மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலிலும் பழத்தட்டு விற்பனையை கோயில் நிர்வாகமே மேற்கொண்டுள்ளது. அதன்படி ஒரு பழத்தட்டு ரூ. 50 என கோயில் நிர்வாகம் விற்கிறது. திருக்கோயிலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நெய் விளக்குகளை கூடுதல் விலைக்கு விற்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர். அதன்படி கோயில் செயல் அலுவலராக ஜெயராமன் இருந்த போது நெய் விளக்கு விற்பனையை கோயில் நிர்வாகமே மேற்கொண்டது.

பழத்தட்டு விற்பனையை கோயில் நிர்வாகம் மேற்கொண்டது குறித்து கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான நடராஜனிடம் கேட்ட போது, வெளிநாட்டு, வட மாநில பக்தர்கள் வசதிக்காகவே பழத்தட்டு விற்பனையை கோயில் நிர்வாகம் ஏற்றுள்ளது. அதன்படி தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் பழத்தட்டு விலையை எழுதி வைத்துள்ளோம் என்றார். பழத்தட்டு விற்பனையை முறைப்படுத்தியதுடன் கோயில் நிர்வாகமே ஏற்றிருப்பதற்கு பொதுமக்களும், பக்தர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்