முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் பந்த் - பஸ்கள் ஓடவில்லை

சனிக்கிழமை, 12 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

நகரி, ஜூலை 13 - ஆந்திர மாநிலம் 2ஆக பிரிக்கப்படுவதற்கு முன்பாக மேற்கு கோதாவரி பகுதியில் உள்ள போலாவரத்தில் நீர்பாசன அணை மற்றும் மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்க முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்தது.

இந்த திட்டத்தில் தற்போதைய தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டத்தின் 200 கிராமங்களையும் சில மண்டலங்களையும் ஆந்திராவுடன் இணைக்க மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேறியது. இந்த சட்ட மசோதாவுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதில் தெலுங்கானா அரசின் கருத்தை மத்திய அரசு கேட்கவில்லை என்றும் தங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக உடனடியாக நிறைவேற்றியிருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமான செயல் என்று குற்றம் சாட்டினார். போலாவரம் திட்டம் மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானாவில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு தெலுங்கானா போராட்டக் குழு தலைவர் பேராசிரியர் கோதண்டராமன் அழைப்பு விடுத்தார். இதற்கு ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி உட்பட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருந்தது.

தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் முழு அடைப்பு போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக ஐதராபாத் தவிர 9 மாவட்டங்களிலும் பந்த் முழுமையாக நடந்தது. பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பந்த் காரணமாக 9 மாவட்டத்திலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஐதராபாத்தில் மட்டும் பஸ்கள் ஓடியது. செகந்திராபாத்தில் பிரசித்தி பெற்ற போனால் திருவிழாவை முன்னிட்டு முழு அடைப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

போலாவரம் திட்டத்தால் ஒரு லட்சம் ஆதிவாசிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் எனவே இந்த திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு முதல்வர் சந்திரசேகரராவ் கோரிக்கை விடுத்து உள்ளார். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்