முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் வெண்மை புரட்சியை ஏற்படுத்தியவர் முதல்வர்

சனிக்கிழமை, 12 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

மதுரை, ஜூலை 13 - பால் உற்பத்தியை பெருக்கி தமிழகத்தில் வெண்மை புரட்சியை ஏற்படுத்தியவர் முதல்வர் ஜெயலலிதா என்று நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மதுரை ஆவின் மகாசபை கூட்டத்தில் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் 25வது மகாசபை கூட்டம் நேற்று மதுரையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை ஆவின் தலைவர் சி. தங்கம் என்ற கே.சி. தங்கராஜன் தலைமை வகித்தார். மதுரை துணை பதிவாளர் சண்முகராஜ்குமார், தேனி துணை பதிவாளர் என். கங்காபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை ஆவின் பொது மேலாளர் சூ. கிருஷ்டி அனைவரையும் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

தமிழகத்தில் 3வது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியை முதல்வர் அம்மா நடத்தி வருகிறார். இப்படிப்பட்ட நல்ல சூழ்நிலையில் இந்திய அளவில் பொருளாதாரத்தில் மந்த சூழ்நிலை நிலவி வந்தாலும் அதனுடைய பாதிப்புகள் தமிழக மக்களுக்கு இருக்க கூடாது என்ற தொலைநோக்கு சிந்தனையோடு பல்வேறு நலத்திட்டங்களையும், சமூக பாதுகாப்பு திட்டங்களையும் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு தந்து வருகிறார். அவரது தொலைநோக்கு திட்டங்கள் எதிர்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் உள்ளது. பொதுமக்கள் தரக்கூடிய வரிப்பணத்தில் 50 சதவீதத்திற்கும் மேலான தொகையை சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக முதல்வர் அம்மா ஒதுக்கீடு செய்து வருகிறார். அவரது தொலைநோக்கு திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றி அமல்படுத்தி வருகிறது. அப்படியென்றால் சிறப்பான நிர்வாகத்தை முதல்வர் அம்மா தமிழகத்தில் நடத்தி வருகிறார்.

கிராமப்புற ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 4 லட்சம் பசுமை வீடுகளை முதல்வர் அம்மா கட்டித் தந்துள்ளார். வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கோடியே 75 லட்சம் இலவச வேட்டி, சேலை வழங்குவதற்கு அம்மா உத்தரவிட்டுள்ளார். இப்படிப்பட்ட சமூக நல திட்டங்களை முதல்வர் அம்மா தமிழகத்தில் அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறார். அவரது சிந்தனை ஆற்றலின் பலனாக ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கறவை மாடுகள், 4 வெள்ளாடுகள் போன்றவற்றை இலவசமாக தந்து வருகிறார். இதனால் தமிழகத்தில் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் 21 லட்சம் லிட்டராக இருந்த பால் உற்பத்தி இன்றைக்கு 27 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. இப்படி பால் உற்பத்தியை அதிகரித்து தமிழகத்தில் ஒரு வெண்மை புரட்சியை முதல்வர் அம்மா ஏற்படுத்தி உள்ளார்.

பெண்களின் நலன் காக்கவும் முதல்வர் அம்மா கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார். அவர்களது வாழ்க்கை தரம் மேம்படுவதற்கு பெண்கள் சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். மனிதவளம் மேம்படுத்தப்பட வேண்டும் என்றால் ஒரு தரமான கல்வியை தர வேண்டும். இதற்காக கடந்த ஆண்டு ரூ. 21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், காலனி முதல் பென்சில், பேனா வரை வழங்கி வருகிறார். வெளிநாட்டு மாணவர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெறும் அளவுக்கு நமது மாணவர்களின் தரத்தை மேம்படுத்த இலவசமாக மடிக்கணினிகளை வழங்கி கல்வியின் தாயாக முதல்வர் அம்மா விளங்கி வருகிறார். இயற்கையின் சீற்றங்கள், வறட்சி, சுனாமி ஏற்பட்டாலும் அதனால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு முதல்வர் அம்மா முன்னுரிமை அளித்து வருகிறார்.

மதுரை ஆவின் பால்வள ஒன்றியம் 1967ம் ஆண்டில் தொடங்கப்பட்டு இன்றைக்கு 808 பால் உற்பத்தியாளர்களை கொண்டு 33 ஆயிரத்து 487 உறுப்பினர்களை பெற்று ஒரு மாபெரும் நிறுவனமாக திகழ்கிறது. தமிழகத்திலே லாபம் ஈட்ட கூடிய முதல் சங்கமாக மதுரை ஆவின் பால் கூட்டுறவு சங்கம் உயர்ந்துள்ளது. பால் உற்பத்தியை பெருக்கி லாபத்தை ஈட்டி மாநில அளவில் ஒரு தனி வரலாற்றை மதுரை ஆவின் நிறுவனம் படைத்துள்ளது. இந்த உயர்வுக்கு கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் பணிகள் சிறப்பானதாகும். பாராட்டுக்குரியது. அவர்களுக்கு நான் நன்றிக்கடனை செலுத்துகிறேன். மேலும் மதுரை ஆவின் நிறுவனம் தினமும் தற்போது உற்பத்தி செய்யப்படும் 3 லட்சம் லிட்டர் பாலை இனிவரும் காலத்தில் 5 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற ஒரு நல்ல தகவலை இங்கு தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன், மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா, ஆர். கோபாலகிருஷ்ணன் எம்.பி., ஆர். பார்த்திபன் எம்.பி, மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ம. முத்துராமலிங்கம், ஏ.கே. போஸ், மேலூர் ஆர். சாமி, கே. தமிழரசன், எம்.வி. கருப்பையா, ஆர். சுந்தர்ராஜன், துணை மேயர் கு. திரவியம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே. துரைபாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் வில்லாபுரம் ஜெ. ராஜா, தெற்கு மண்டல தலைவர் பெ. சாலைமுத்து, வடக்கு மண்டல தலைவர் கே. ஜெயவேல், மேற்கு மண்டல தலைவர் கே. ராஜபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாங்கம், எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் எம்.எஸ். பாண்டியன், பகுதி கழக செயலாளர்கள் தளபதி ஆர். மாரியப்பன், ஏ.கே. முத்து இருளாண்டி, வி.கே.எஸ். மாரிச்சாமி, பூமிபாலகன், எம்.என். முருகன், பகுதி பேரவை முன்னாள் செயலாளர் வைகை மூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் அண்ணாநகர் முனியசாமி. கவுன்சிலர்கள் புதூர் அபுதாகீர், குமுதா, சண்முகவள்ளி, ராமன், மதுரை கிழக்கு தொகுதி செயலாளர் மா. இளங்கோவன், மாவட்ட மாணவரணி செயலாளர் கே. மாணிக்கம், ஒன்றிய செயலாளர்கள் தக்கார் பாண்டி, அலங்காநல்லூர் ரவிச்சந்திரன், சோழவந்தான் தொகுதி செயலாளர் சி.பி.ஆர். சரவணன், மதுரை ஆவின் அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே. பழனிச்சாமி, தலைவர் கே. பாண்டி, இணை செயலாளர் கே. பரமானந்தம், பொருளாளர் ஏ. வேல்முருகன், மதுரை ஆவின் நிர்வாக குழு உறுப்பினர்கள் வி.பி. அமாவாசை, பி. கதிரேசன், இ. பெரியசாமி, கே. சுந்தரம், ஜெயலட்சுமி, எஸ். இளையராஜா, கா. ராஜேந்திரன், நா. பிரீதா, ஆர். ஜோதி, து. தனராஜ், கே. சாமிதாஸ், எஸ். மகாதேவன், வி. போதும்பொண்ணு, எம். அமுதவள்ளி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மதுரை ஆவின் துணை தலைவர் எம். செல்வம் நன்றி தெரிவித்தார்.

மகாசபை கூட்டத்தில் பால் கூட்டுறவு சங்க தலைவர்களுக்கு நினைவு பரிசாக கேடயமும், டிராவல் பேக்கும் வழங்கப்பட்டது. கருணை அடிப்படையில் 15 நபர்களுக்கு மதுரை ஆவினில் பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்