முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க போர்க்கால நடவடிக்கை

திங்கட்கிழமை, 21 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 22 - தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதிலும் உள்ள குடிநீர் பற்றாக்குறை சமாளிப்பதற்காக ரூ. 651 கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் 88 ஆயிரத்து 247 திட்டப்பணிகளை நிறைவேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த தகவலை சட்டசபையில் நேற்று

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

சட்டசபையில்நேற்று

கேள்வி நேரம் முடிந்ததும், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர். சுவுந்தரராஜன், கே. பாலபாரதி, க. பாலகிருஷ்ணன், கே. தங்கவேல், ஏ. லாசர், ப.டெல்லி பாபு, இரா. அண்ணாதுரை, க. பீம்ராவ், ஆர். ராமமூர்த்தி, வி.பி. நாகை மாலி (மார்க்சிஸ்ட்), எம். ஆறுமுகம், சு. குணசேகரன், கே. உலகநாதன், கு. லிங்கமுத்து, பி.எல். சுந்தரம், வே. பொன்னுபாண்டி (கம்யூனிஸ்ட்), மு.க.ஸ்டாலின், துரைமுருகன், அர. சக்கரபாணி, எ.வ.வேலு (தி.மு.க.) எம்.எச். ஜாவாஹிருல்லாஹ், அ. அஸ்லம் பாட்சா (மனித நேய மக்கள் கட்சி), அ.சவுந்தரபாண்டியன், எ. வெங்கடேசன், எஸ்.ஆர். பார்த்திபன், ஆர். அருள்செல்வன், எஸ்.செந்தில் குமார் (தே.மு.தி.க.) ஆகியோர் ஒரு கவன ஈர்ப்பு அறிவிப்பை கொடுத்து பேசினார்கள்.

அதில் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தடி நீரின் அளவை அதிகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள 39 ஆயிரம் ஏரி, குளம், கண்மாய்களை ஒரு மீட்டர் முதல் ஒன்றரை மீட்டர் வரை ஆழப்படுத்தினால், 400 டி.எம்.சி. தண்ணீரை கூடுதலாக சேமித்து வைக்க முடியும். அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.

அதற்கு ஒரு விவர அறிக்கையை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டசபையில் அளித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் மழை பெய்த விவரம் வருமாறு: –

இந்த ஆண்டு இதுவரை 744.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் பெய்ய வேண்டிய மழை அளவு 729.3 மில்லி மீட்டர் ஆகும். இந்த ஆண்டு 15 மீல்லி மீட்டர் கூடுதலாக பெய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 776.4 மில்லி மீட்டர் பெய்தது. கடந்த ஆண்டு பெய்ய வேண்டிய மழை அளவு 959.4 மில்லி மீட்டர் ஆகும். கடந்த ஆண்டு 183 மில்லி மீட்டர் மழை அளவு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, சேலம், திருப்பூர், திருவள்ளூர், திருச்சி, விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் மழை குறைவாக பெய்துள்ளது.

கடந்த வருடம் ஏற்பட்ட மழை பற்றாக்குறையினை இந்த வருடத்தின் மழை பொழிவினை கருத்தில் கொண்டு முதலமைச்சர் ஜெயலலிதா குடிநீர் பற்றாக்குறை சமாளிப்பது குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினார். அதன் அடிப்படையில் ரூ. 651 கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வினியோக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 135 பணிகள், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல், கழிவு நீர் அகற்று வாரியம் மூலம் 10 பணிகள், நகராட்சி நிர்வாக ஆணையரகம் மூலம் 2947 பணிகள், பேரூராட்சிகளின் இயக்குனரகம் மூலம் 1821 பணிகள், ஊரக வளர்ச்சி இயக்குனரகம் மூலம் 83 ஆயிரத்து 337 பணிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் 541 கூட்டு குடிநீர் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட குடிநீர் அளவான நாள் ஒன்றுக்கு 1,748.62 மில்லியன் லிட்டர் மூலம் 7 மாநகராட்சிகள், 52 நகராட்சிகள், 280 பேரூராட்சிகள், 32,733 ஊரக குடியிருப்புகள் ஆக மொத்தம் 33,580 பயனாளிகளுக்கு 3 கோடியே 13 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தற்சமயம் மேற்கண்ட 541 கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் நாள் ஒன்று 1,442.6 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட திட்டங்களில் முழு அளவு குடிநீர் வழங்க முதலமைச்சரின் ஆணைக்கிணங்க மாநில பேரிடர் நிவாரண நிதி மூலம் 135 பணிகள் ரூ.14 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு 118 பணிகள் முடிக்கப்பட்டு, மீதமுள்ள பணிகள் 31.7.2014–க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேசிய ஊரக குடிநீர் திட்டத்தின் கீழான இயற்கை இடர்பாடு திட்டத்தின் மூலம் 1561 பணிகள் ரூ. 31 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டு பயனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

சென்னை நகரில்…

சென்னை குடிநீர் வழங்கல்–கழிவுநீர் அகற்றல் வாரியம், சென்னை மாநகர பகுதியில் பணிகளை நிறைவேற்றி வருகிறது. சென்னை மாநகருக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு 22.5.2013 முதல் சீரமைக்கப்பட்டு தற்போது தினமும் 587 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஏப்ரல் மாதம் வீராணம் ஏரியில் 2வது முறையாக நீர் நிரப்பப்பட்டதன் மூலம் சென்னை குடிநீர் வாரியம் தினந்தோறும் 180 மில்லியன் லிட்டர் நீரை தொடர்ந்து பெற்று வருகிறது.

தெலுங்கு கங்கை திட்டத்தின்கீழ் தற்போது வரை பெறப்பட்ட நீரின் அளவானது 5,664 மில்லியன் கன அடியாகும். இம்மாத இறுதியில் கிருஷ்ணா கால்வாயிலிருந்து நீர் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல், ஆழ்துளை கிணறுகளை புனரமைத்தல், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேறும் நீரிலிருந்து 25 மில்லியன் லிட்டர் மற்றும் பரவனாற்றிலிருந்து நாள் ஒன்றுக்கு 30 மில்லியன் லிட்டர் பெற பணிகள் போர்க்கால அடிப்படையில் முடிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையால் சென்னை மாநகருக்கு தினமும் 587 மில்லியன் லிட்டர் நீர் வழங்கப்படும்.

இதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.50 கோடி நிதி வழங்கப்பட்டு இதுவரை ரூ.543 கோடி செலவிடப்பட்டுள்ளது.

குடிசை பகுதிகளில் வாழும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மே 2013 வரை 2000 நடைகள் லாரி மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வந்த குடிநீர் வினியோகம் உயர்த்தப்பட்டு நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 900 நடைகள் வீதம் இலவசமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

சில பகுதிகளில் அவ்வப்போது ஏற்படும் பற்றாக்குறை உடனடிக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது.

நகராட்சி, மாநகராட்சிகள்

குடிநீர் சப்ளை

கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு மிக குறைந்த அளவு மழை பெறும் 11 மாவட்டங்களில் உள்ள 3 மாநகராட்சி, 40 நகராட்சிகளில் குடிநீர் திட்ட பணிகள் 67 கோடியே 80 லட்சம் செலவில் எடுத்தக் கொள்ளப்பட்டன. இதில் ரூ.50 கோடியே 87 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 20 மாவட்டங்களில் உள்ள நகராட்சிகள், மாநகராட்சிகளில் கோடைக்கால குடிநீர் பற்றாக்குறையினை சமாளிக்க ரூ.77 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

31 மாவட்டங்களில் 2335 நீர் ஆதாரங்களை புணரமைத்தல், புதிய நீர் ஆதாரங்களை தோற்றுவித்தல், குடிநீர் குழாய்களை மாற்றி அமைத்தல், லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்தல் போன்ற பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றில் 1734 பணிகள் முடிக்கப்பட்டு, மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

இப்பணிகள் மழை அளவு குறைவாக உள்ள மாவட்டங்களில் குடிநீர் வினியோகம் குறைவின்றி வழங்க மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன.

குடிநீர் தட்டுப்பாடு உள்ள மாநகராட்சி பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோம் செய்யும் பணிகளுக்காக மொத்தம் ரூ.73 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அரசு நிதியாக ரூ. 26 கோடியே 93 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிகள் நமது சொந்த நிதியிலிருந்து ரூ.46 கோடியே 57 லட்சம் செலவு செய்து வருகின்றன. மொத்தம் 612 பணிகள் எடுக்கப்பட்டு 375 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட கால நடவடிக்கையாக 51 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உலக வங்கி மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு, தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டம், ஜப்பான் கூட்டுறவு முகமை கே.எப்.டபிள்யூ, மற்றும் ஐ.யூ.டி.எம். போன்ற திட்டங்களின் நிதி உதவியுடன் ரூ. 3473 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் செயலாக்கத்துக்கு எடுத்தக் கொள்ளப்பட்டு, பணிகள் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

இத்திட்டங்கள் முடிவுறும் நிலையில் மேலும் 585 மில்லியன் லிட்டர் குடிநீர் கூடுதலாக வழங்க இயலும்.

பேரூராட்சிகளுக்கு குடிநீர்

கடந்த 3 ஆண்டுகளில் பேரூராட்சிகளில் குடிநீர் வழங்குதலை மேம்படுத்துவதற்காக 250 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களின் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதவிர கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் பருவமழை குறைவு காரணமாக 2014–15ம் ஆண்டில் தட்டுப்பாடின்றி சீராக குடிநீர் வழங்குவதற்காக பேரூராட்சிகளில் புதிய குடிநீர் ஆதாரங்களை தோற்றுவித்தல், ஏற்கனவே உள்ள குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துதல், பழுதடைந்த கை பம்புகளை சீரமைக்க தேவையான உதிரி பாகங்கள் வாங்குதல், குடிநீர் குழாய் நீடிப்பு செய்தல், நீராதாரம் குறைந்த பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்காணும் பணிகள் ரூ.49 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்டப்டு வருகின்றன.

இதில் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ரூ.17 கோடியே 33 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பேரூராட்சி தமது சொந்த நிதியலிருந்து ரூ.31 கோடியே 69 லட்சம் செலவு செய்து வருகின்றன. மொத்தம் 1821 பணிகள் எடுக்கப்பட்டு, 1688 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

ஊராட்சிகள்

வறட்சி காலத்தில் ஊரக பகுதிகளில் குடிநீர் தேவையினை சமாளித்திட மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.52 கோடியே 75 லட்சம் பெறப்பட்டு குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ரூ. 184 கோடியே 13 லட்சம் அளவிற்கு ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பிற திட்ட நிதியிலிருந்து குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் 2013–14ம் ஆண்டில் பிற திட்டங்கள் மூலம் ரூ. 948 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஊரக பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக மொத்தம் 2013–14ம் ஆண்டில் 83 ஆயிரத்து 334 பணிகள் ரூ. 1185 கோடியே 12 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேற்படி நடவடிக்கைகளின் விளைவாக குடிநீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்பட்டு நிலத்தடி நீர் குறைந்து வரும் சூழ்நிலையிலும் மாற்று குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதன் பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்