முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருநெல்வேலியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க திட்டம்: அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.23 - திருநெல்வேலி மாநகராட்சியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க ரூ.230 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள குடிநீர் பற்றாக்குறை சமாளிப்பதற்காக ரூ. 651 கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் 88 ஆயிரத்து 247 திட்டப்பணிகளை நிறைவேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த தகவலை சட்டசபையில் நேற்று முன்தினம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

சட்டசபையில்நேற்று முன்தினம் கேள்வி நேரம் முடிந்ததும்,

கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு மிக குறைந்த அளவு மழை பெறும் 11 மாவட்டங்களில் உள்ள 3 மாநகராட்சி, 40 நகராட்சிகளில் குடிநீர் திட்ட பணிகள் 67 கோடியே 80 லட்சம் செலவில் எடுத்தக் கொள்ளப்பட்டன. இதில் ரூ.50 கோடியே 87 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 20 மாவட்டங்களில் உள்ள நகராட்சிகள், மாநகராட்சிகளில் கோடைக்கால குடிநீர் பற்றாக்குறையினை சமாளிக்க ரூ.77 கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

31 மாவட்டங்களில் 2335 நீர் ஆதாரங்களை புணரமைத்தல், புதிய நீர் ஆதாரங்களை தோற்றுவித்தல், குடிநீர் குழாய்களை மாற்றி அமைத்தல், லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்தல் போன்ற பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றில் 1734 பணிகள் முடிக்கப்பட்டு, மீதமுள்ள பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.

இப்பணிகள் மழை அளவு குறைவாக உள்ள மாவட்டங்களில் குடிநீர் வினியோகம் குறைவின்றி வழங்க மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன.

குடிநீர் தட்டுப்பாடு உள்ள மாநகராட்சி பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோம் செய்யும் பணிகளுக்காக மொத்தம் ரூ.73 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அரசு நிதியாக ரூ. 26 கோடியே 93 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிகள் நமது சொந்த நிதியிலிருந்து ரூ.46 கோடியே 57 லட்சம் செலவு செய்து வருகின்றன. மொத்தம் 612 பணிகள் எடுக்கப்பட்டு 375 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட கால நடவடிக்கையாக 51 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உலக வங்கி மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு, தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டம், ஜப்பான் கூட்டுறவு முகமை கே.எப்.டபிள்யூ, மற்றும் ஐ.யூ.டி.எம். போன்ற திட்டங்களின் நிதி உதவியுடன் ரூ. 3473 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் செயலாக்கத்துக்கு எடுத்தக் கொள்ளப்பட்டு, பணிகள் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

இத்திட்டங்கள் முடிவுறும் நிலையில் மேலும் 585 மில்லியன் லிட்டர் குடிநீர் கூடுதலாக வழங்க இயலும்.

பேரூராட்சிகளுக்கு குடிநீர்

கடந்த 3 ஆண்டுகளில் பேரூராட்சிகளில் குடிநீர் வழங்குதலை மேம்படுத்துவதற்காக 250 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களின் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதவிர கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் பருவமழை குறைவு காரணமாக 2014–15ம் ஆண்டில் தட்டுப்பாடின்றி சீராக குடிநீர் வழங்குவதற்காக பேரூராட்சிகளில் புதிய குடிநீர் ஆதாரங்களை தோற்றுவித்தல், ஏற்கனவே உள்ள குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துதல், பழுதடைந்த கை பம்புகளை சீரமைக்க தேவையான உதிரி பாகங்கள் வாங்குதல், குடிநீர் குழாய் நீடிப்பு செய்தல், நீராதாரம் குறைந்த பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்காணும் பணிகள் ரூ.49 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்டப்டு வருகின்றன.

இதில் மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ரூ.17 கோடியே 33 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பேரூராட்சி தமது சொந்த நிதியலிருந்து ரூ.31 கோடியே 69 லட்சம் செலவு செய்து வருகின்றன. மொத்தம் 1821 பணிகள் எடுக்கப்பட்டு, 1688 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

ஊராட்சிகள்

வறட்சி காலத்தில் ஊரக பகுதிகளில் குடிநீர் தேவையினை சமாளித்திட மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.52 கோடியே 75 லட்சம் பெறப்பட்டு குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ரூ. 184 கோடியே 13 லட்சம் அளவிற்கு ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பிற திட்ட நிதியிலிருந்து குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் 2013–14ம் ஆண்டில் பிற திட்டங்கள் மூலம் ரூ. 948 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஊரக பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக மொத்தம் 2013–14ம் ஆண்டில் 83 ஆயிரத்து 334 பணிகள் ரூ. 1185 கோடியே 12 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேற்படி நடவடிக்கைகளின் விளைவாக குடிநீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்பட்டு நிலத்தடி நீர் குறைந்து வரும் சூழ்நிலையிலும் மாற்று குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதன் பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்