முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ262.53 கோடி நிதி மானியமாக வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 22 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.23 - மூன்றாண்டு ஆட்சி காலத்தில் ஒளிவு மறைவற்ற முறையில் 1,29,175 பயனாளிகள் தேர்வுசெய்யப்பட்டு, ஒருவருக்கு அதிகபட்சமாக ரூபாய் 2.25 இலட்சம் வீதம், ரூபாய் 262.53 கோடி நிதியினை மானியமாக வழங்கி, முழுமையான பொருளாதார முன்னேற்றத்தினை, ஏற்படுத்தி சாதனை படைத்துள்ளார் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அத்துறைக்கான மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:_

தாட்கோ

சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக ஆதிதிராவிடர்களும் வாழவேண்டும், வளம்பெற வேண்டும், என்ற சீரிய நோக்கில், தாட்கோ திட்டத்தின் கீழ், பயன்பெற குடும்ப ஆண்டு வருமான, வரம்பினை 1.00 இலட்சமாக உயர்த்தி தந்த வள்ளலே.

கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சிகாலத்தில், தாட்கோ மூலம் பெறும் கடன்களுக்கான மானியம், ரூபாய் 25,000 மட்டுமே, வழங்கப்பட்டு வந்தது. ஆனால், மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள், மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதும், தாட்கோ மானியத்தை, செய்யும் தொழிலுக்கு ஏற்ப, திட்டத்தொகையில் 30 சதவீதம், அதிகபட்சமாக ரூபாய் 2.25 இலட்சமாக, உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டார்கள்.

கடந்த மைனாரிட்டி திமுக அரசின் ஐந்தாண்டு காலத்தில், தாட்கோ பொருளாதார முன்னேற்றத் திட்டத்தின் கீழ் 3,73,761 பயனாளிகளுக்கு, அதிகபட்ச மானியமாக,ரூபாய் 25,000 வீதம், ரூபாய் 196.10 கோடி மட்டுமே, வழங்கப்பட்டது. ஆனால், முதலமைச்சர் அம்மா அவர்களின் மூன்றாண்டு ஆட்சி காலத்தில் ஒளிவு மறைவற்ற முறையில் 1,29,175 பயனாளிகள் தேர்வுசெய்யப்பட்டு, ஒருவருக்கு அதிகபட்சமாக ரூபாய் 2.25 இலட்சம் வீதம், ரூபாய் 262.53 கோடி நிதியினை மானியமாக வழங்கி, முழுமையான பொருளாதார முன்னேற்றத்தினை, ஏற்படுத்தி தந்துள்ளார்கள், என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த காலங்களில் பொருளாதாரத்தில் வளர்ச்சியுற்ற

மேல்குடி மக்களின் தொழிலாக மட்டுமே இருந்த பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சில்லரை விற்பனை நிலையத்தினை, தற்போது, மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் கருணையால், தமிழக வரலாற்றிலேயே,முதன் முறையாக, அடித்தட்டு மக்களாம் ஆதிதிராவிடர் மக்களுக்கும், இந்த அரிய வாய்ப்பு கிடைத்திடும் வகையில், 2013-14 ஆம் ஆண்டில், ரூபாய் 22.50 இலட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டு, 3 நபர்கள் விற்பனை நிலையத்தினை அமைத்துள்ளனர், என்பதையும் இம்மாமன்றத்தில் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

காடு மலைகளில் வாழ்ந்து வந்த பழங்குடியினரையும், தொழில் செய்திட, மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள், தமிழக வரலாற்றிலேயே, முதன் முறையாக, 43 பழங்குடியினருக்கு, ரூபாய் 2.28 கோடி செலவில், இலகு ரக வாகனங்கள் வாங்கிட, வழிவகை செய்துள்ளார்கள். இவர்களுக்கு, திட்டத்தொகையில், மானியமாக, 50 சதவீதம், அதிக பட்சமாக ரூபாய் 3.75 இலட்சம் வரை, மானியத்தை வாரி வழங்கிய வள்ளளாகவே, மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் திகழ்கிறார்கள்.

குடும்ப சொத்துகளைப் பாதுகாப்பதில் பெண்கள் அதிக கவனமாகவும், பொறுப்புடையவர்களாகவும், உள்ள காரணத்தினால், மகளிர் வேளாண் நிலம் வாங்கும் திட்டம், மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில், பயனாளிகள் 2.50 ஏக்கர், நன்செய் நிலம், அல்லது 5.00 ஏக்கர், புன்செய் நிலம், வாங்கலாம். தற்போது, 2011 முதல் 2014 வரை மூன்றாண்டுகளில், 291 ஆதிதிராவிட மகளிர், நிலம் வாங்கிட ரூபாய் 180.52 இலட்சம் மானியமாக வழங்கி, ஆதிதிராவிடர் பெண்களையும், நில உரிமையாளராக்கி, பெண்களின் பாதுகாவலராகவும், பூமித் தாயாகவும், திகழ்கிறார் மாண்புமிகு அம்மா அவர்கள்.

ஆதிதிராவிடர் மகளிர் சுய உதவிக்குழுக்கள் கூட்டாக தொழில் செய்திட 2011-2014 ஆகிய மூன்றாண்டுகளில், 63,204 உறுப்பினர்களுக்கு, தலா ரூபாய் 2.50 இலட்சம் வரை மானியமாக, மொத்தம் ரூபாய் 92.45 கோடி அளித்தும், 44,387 சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு, ரூபாய் 5.96 கோடி சுழல் நிதியாக வழங்கியும், ஆதிதிராவிடர் மகளிர் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் காண வழிவகை செய்த கற்பகத்தருவாக, மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் திகழ்கிறார்கள்.

ஆதிதிராவிடர் இளைஞர்கள் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று, அகில இந்திய அளவில் குடிமைப் பணி முதன்மைத் தேர்விற்குத் தயார் செய்துக்கொள்ள, அவர்களுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் வீதம், 2013-14-ஆம் ஆண்டில், 62 நபர்களுக்கு ரூபாய் 31.00 இலட்சம் வழங்கப்பட்டது. இவர்களில் 10 நபர்கள் முதன்மை தேர்வில் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி - 1 ல் முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்விற்குத் தயார் செய்துக்கொள்ள 2013-14-ஆம் ஆண்டில், ஆதிதிராவிட விண்ணப்பதாரர், ஒருவருக்கு ரூபாய் ஐம்பதாயிரம் வீதம், 32 நபர்களுக்கு ரூபாய் 16.00 இலட்சம், நிதியுதவி வழங்கிய, வள்ளலே!.

தமிழக வரலாற்றில், முதல் முறையாக, சட்டம் பயின்ற ஆதிதிராவிடர் வழக்கறிஞர்கள், சொந்தமாக தமது அலுவலகம் அமைத்திட, மானியமாக ரூபாய் 50,000 வீதம், 2012-13 மற்றும் 2013-14 ஆம் ஆண்டில் 1,187 சட்டப் பட்டதாரிகளுக்கு, ரூபாய் 5.94 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களால், மருத்துவம் பயின்ற ஆதிதிராவிடர் மாணாக்கர் சொந்தமாக, மருத்துவ மையம் அமைப்பதற்கு, 2012-13 மற்றும் 2013-14 ஆம் ஆண்டில் 38 மருத்துவர்களுக்கு, ரூபாய் 45.64 இலட்சம், திட்டத்தினைப் பொருத்து, மானியமாக வழங்கப்பட்டுள்ளது, என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாட்கோவின் திட்ட செயல்பாடுகளை முழுமையாக மக்களுக்கு கொண்டு செல்லவும், இடைத்தரகர்கள் இன்றி, பயனாளிகளுக்கு நேரடியாக பயன்கள் சென்றடைவதை உறுதி செய்யவும், இணையதளம் மூலம், விண்ணப்பங்கள் பதிவு செய்யும் திட்டம், 2012-13 ஆம் ஆண்டில் மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களின், நல்லாசியுடன் தோற்றுவிக்கப்பட்டது. இத்திட்டத்தினால், விண்ணப்பதாரர்கள், அவர்களின் விண்ணப்பத்தின், நிலையினை, அனைத்து நிலைகளிலும், தெரிந்து கொள்ள, வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறையினை, எளிதாக்கும் வண்ணம் பல மாற்றங்கள், இவ்வாண்டில் ஏற்படுத்தப்பட உள்ளது.

தாட்கோ நிறுவனத்தின் கட்டுமானப் பிரிவு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள், பள்ளிக் கட்டடங்கள், சமூக நலக் கூடங்கள் மற்றும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்கு, அடிப்படை வசதிகள், போன்ற பணிகளை மேற்கொள்கிறது. மாண்புமிகு அம்மா அவர்களின், இந்த மூன்று ஆண்டு ஆட்சியில், தாட்கோவிற்கு ரூபாய் 235.20 கோடியில், 2,159 கட்டுமானப் பணிகளுக்காக வழங்கப்பட்டன. அவைகளில் ரூபாய் 142.15 கோடி மதிப்பிலான, 1,975 கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டும், ரூபாய் 75.61 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் முன்னேற்றத்திலும் உள்ளன, என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதிதிராவிடர் முன்னேற்றத்தையே கருத்தில் கொண்டு நல்ல பல திட்டங்களை வகுத்து வரும் தமிழகத்தின், வாழும் அம்பேத்கார் அவர்களே!.

ஏற்றமிகு திட்டங்களினால் இன்று ஆதிதிராவிடர் மக்களின் வாழ்வில் மாற்றத்தினைத் தந்தீர்கள் அம்மா!

ஒட்டுமொத்த தமிழகமே, உங்கள் பக்கம் என்பதை நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலிலும், நிரூபித்துக் காட்டிய தைரிய லட்சுமியே!.

அம்மா வரும் சட்டமன்றத் தேர்தலிலும், 100 சதவிகித வெற்றியும், அம்மா அவர்களின் பக்கமே என உறுதி செய்யப்பட்டுள்ளது அம்மா, என பணிவுடன், அம்மா அவர்களின் பொற்பாதம் பணிந்து, தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே!

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மக்களின் மேல் பற்றும் பாசமும் கொண்ட, மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களின், ஆட்சியில் தான், இவ்வின மக்களுக்கு, எண்ணி பார்க்க முடியாத, சிறப்பான திட்டங்கள் எல்லாம், செயல்படுத்தப்படுகின்றன. சாதிப்பெயரை சொல்லி கட்சி நடத்துபவர்கள், தங்களை முன்னிறுத்தி கட்சி பிழைப்பு நடத்தியும், காணாமல் போனவர்களுடன் கூட்டணி அமைத்தும், ஆதிதிராவிடர் மக்களுக்கு, இதுவரை ஏதும் செய்யவும் இல்லை, கூட்டணி காரர்களிடமிருந்து, ஆதிதிராவிடர் மக்களுக்காக ஏதும் கேட்டுப் பெற்றதாகவும், சரித்திரம் இல்லை.

ஆனால், எங்கள் இதயதெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களோ, தன் நலம், கருதாமால், தமிழ் மக்கள் நலன் ஒன்றே, என்று, நொடிப்பொழுதும், எண்ணிச் செயல்படும், அம்மா, அவர்கள், அடித்தட்டு மக்களாம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை, எல்லா விதத்திலும், முன்னேற்றமடையச் செய்வதை, தன்னுடைய அடிப்படை கடமையாகவே, கொண்டுள்ளார். இதற்கு இவ்வின மக்கள், எப்பொழுதுமே மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு, மட்டுமே நன்றிக்கடன் பட்டவர்களாகவே, இருப்பார்கள் அம்மா, என்று மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்கி, ஆட்சி, அன்பு, மனிதநேயம் ஆகியவற்றிற்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டாக திகழும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களை வணங்கி, எனது உரையினை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்