முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாமரைப்பாக்கம் இரு சமூகத்தினர் பிரச்சினை: முதல்வர் விளக்கம்

வியாழக்கிழமை, 24 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஜூலை.25 - திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு :கொசஸ்தலை ஆற்றில் மணல் எடுப்பதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமல்ல என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நேற்று திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்த வெங்கடேசன் (தே.மு.தி.க), டில்லி பாபு (மார்க்சிஸ்டு கம்யூ.), குணசேகரன் (இந்திய கம்யூ.), பிரின்ஸ் (காங்.), கணேஷ்குமார் (பா.ம.க.), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

இந்த சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த பதிலுரை வருமாறு:-

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் நடைபெறும் ஆடி மாதத் திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள், வெங்கல் காவல் நிலைய சரகம், அணைக்கட்டு பகுதியிலுள்ள செண்பகாதேவி கோவில் திருவிழாவிலும் கலந்து கொள்வது வழக்கம். கடந்த 20.07.2014 அன்று மாலை சுமார் 6 மணியளவில், திருவிழாவை முன்னிட்டு அணைக்கட்டு பகுதியில் ராட்டினத்தில் விளையாடுவது தொடர்பாக புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஹேமக்குமார் (எ) வசந்த் என்பவருக்கும், வெள்ளியூர் காலனியைச் சேர்ந்த அபினேஷ் என்பவருக்கும் யார் முதலில் ஏறுவது என்பதில் பிரச்சனை ஏற்பட்டு கைகலப்பு ஆகி உள்ளது. இச்சம்பவம் குறித்து 21.07.2014 அன்று அபினேஷ், வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடார்வேடு கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் என்பவர் வெங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கடார்வேடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த வெள்ளியூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் படித்து வரும் சில மாணவர்கள் தங்கள் கையில் மஞ்சள் நிற கயிறு கட்டக் கூடாதெனவும், நீல நிற கயிறு கட்ட வேண்டுமென்றும் வேறு சில மாணவர்கள் மிரட்டியதாகக் கூறி நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்துள்ளார்.

மேற்படி புகார்கள் தொடர்பாக, 22.07.2014 அன்று, காவல் துறையினர் இரு தரப்பினரையும் விசாரணைக்கு அழைத்திருந்த நிலையில், 22.07.2014 அன்று காலை சுமார் 9 மணியளவில் புன்னப்பாக்கத்தைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவர் தனது மகேந்திரா வேனில் பூ மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் வந்த போது வெள்ளியூர் காலனியைச் சேர்ந்த நிஷாந்த் உள்ளிட்ட சிலர் வாகனத்தை வழி மறித்து குருமூர்த்தியை தாக்கியதோடு, வாகனத்தின் கண்ணாடிகளைச் சேதப்படுத்தியுள்ளனர். இத்தகவல் அறிந்து, புன்னப்பாக்கத்தைச் சேர்ந்த சுமார் 250 பேர் பெரியபாளையம் சாலையில் சாலை மறியல் செய்தனர். பின்னர் அவர்கள் காவல் துறையினர் தலையீட்டின் பேரில் கலைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து புன்னப்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சிலர் சுமார் 11 மணியளவில், தாமரைப்பாக்கம் காலனியில் இருந்த இரண்டு இரு சக்கர வாகனங்களையும், ஒரு வீட்டையும் கல் வீசி சேதப்படுத்தியுள்ளனர்.

மேலும், ஆரிக்கம்பேடு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை உள்ளிட்ட ஐந்து பேர் பூ மூட்டைகளை சென்னைக்கு கொண்டு செல்வதற்காக பூச்சி அத்திப்பேடு என்ற கிராமத்தில் நின்று கொண்டிருந்த போது, கோடுவள்ளி மற்றும் தரிசுக் காலனியைச் சேர்ந்த சிலர் அவர்களை மரக்கட்டைகளால் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவத்தில் காயம்பட்ட அனைவரும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இத்தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் போதுமான காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து இரு தரப்பினருக்கும் மேலும் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர். நிலைமைக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவங்கள் தொடர்பாக, வெங்கல் காவல் நிலையத்தில் மொத்தம் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை, புன்னம்பாக்கம், வெள்ளியூர், பூச்சி அத்திப்பேடு, அரிக்கம்பேடு மற்றும் கோமக்கம்பேடு ஆகிய கிராமங்களில் காவல் துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவத்திற்கு, கொசஸ்தலை ஆற்றில் மணல் எடுப்பதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணம் என்பது சரியல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்