முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா திறன் வேலை வாய்ப்பு- பயிற்சி திட்டம்: முதல்வர்

வியாழக்கிழமை, 24 ஜூலை 2014      அரசியல்
Image Unavailable

 சென்னை, ஜூலை 25: ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’ என்ற புதிய திட்டத்தின் மூலம் 25 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்திருக்கிறார். .

படித்து வேலையில்லாத இளைஞர் களுக்கு 6 மாத பயிற்சி அளிக்கப் படும். பயிற்சியின்போது ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சட்டசபையில் அவை விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:

பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தியாகவும்; தொழில் முனைவோர் செயல் திறன் மேம்பாடு அடைவதற்கான நாற்றங்காலாகவும்; நிலைத்த வேலைவாய்ப்பினை வழங்கும் அட்சய பாத்திரமாகவும் விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை உருவாக்குவதில் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. நாட்டின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக கீழ்க்காணும் திட்டங்களை இந்த மாமன்றத்திற்கு அளிப்பதில் நான் பெருமை அடைகிறேன்.

1.தமிழ்நாட்டில் 31.3.2014 அன்றைய நிலவரப்படி 9.68 லட்சம் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இத்தொழில் நிறுவ னங்களிலும், புதியதாக ஏற்படுத்தப்படும் தொழில் நிறுவனங்களிலும் தேவைப்படும் மனித ஆற்றலை வழங்கிடும் வகையிலும்; வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் அம்மா திறன் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திட்டத்தின் கீழ், 18 முதல் 25 வயது வரையிலான பொறியியல், தொழிற் கல்வியியல், தொழில் பட்டயப் படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று வேலையில்லாத இளைஞர்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும். இதன்படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் 6 மாதங்களுக்கான வேலை குறித்த பயிற்சியினை இளைஞர்களுக்கு அளிக்கும்.

பயிற்சி காலத்தில் தொழில் நிறுவனங்கள் மாதம் 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும். ஆறு மாத பயிற்சி முடிந்தவுடன், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 12,000 ரூபாயினை அரசு வழங்கும். 6 மாத பயிற்சிக்குப் பிறகு, பயிற்சி பெற்றவர்களின் திறமை, தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால்( National Skill Development Corporation )அறியப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இந்தச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தையும் அரசு வழங்கும். ஆறு மாத பயிற்சி முடித்த இளைஞர்களை தொழில் நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்திக் கொள்ளும். வேலையில் சேர்த்துக் கொண்ட பின் வழங்கப்படும் ஊதியம் 5000 ரூபாய் அல்லது தொடர்புடைய சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியம் இவற்றுள் எது உயர்ந்ததோ அத்தொகை சம்மந்தப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்படும்.

நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் 25,000 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதில் 30 சதவீதம் மகளிருக்கென ஒதுக்கீடு செய்யப்படும். இத்திட்டத்திற்காக 32 கோடியே 50 லட்சம் ரூபாயினை அரசு வழங்கும். இத்திட்டம், படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் தகுந்த ஊதியத்துடன் கூடிய பயிற்சியினை பெற்று வேலைவாய்ப்புகளை பெற வழி வகுக்கும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்