முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு.பி.எஸ்.சி. தேர்வு சர்ச்சை: பிரதமர் விளக்கமளிக்க வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.26 - யு.பி.எஸ்.சி தேர்வு சர்ச்சையில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

யு.பி.எஸ்.சி. தேர்வு வாரியம் நடத்தும் திறனறி தேர்வு (CSAT - Preliminary aptitude test) வினாத்தாள் ஆங்கிலத்திலேயே இருக்கும் என்பதால், இந்தி மற்றும் பிற மாநில மொழிகளில் தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக அமையும் எனக் கூறி டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நடைமுறை 2011-ல் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஆங்கிலப் புலமை உள்ள மாணவர்களுக்கு இணையாக தங்களால் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள முடியவில்லை என பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்பிரச்சினை நேற்று மாநிலங்களவையில் எதிரொலித்தது. அவை கூடியவுடன், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பத்தொடங்கினர்.

கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு பிரதமர் அல்லது மாநிலங்களவை தலைவர், யு.பி.எஸ்.சி. தேர்வு சர்ச்சை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றனர். இதனால் கேள்வி நேரத்தின் போது அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடிய போது சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அரசு இப்பிரச்சினையை கவனத்தில் கொள்ளும் என்றார்.

இதேபோல், மக்களவையிலும் இவ்விவகாரத்தை ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர்கள் எழுப்பினர். கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க அனுமதி கோரப்பட்டது. பாஜக ஆட்சியில் மாணவர்கள், பெண்கள் நலன் காக்கப்படவில்லை என எதிர்கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் கேள்வி நேரத்திர்கு பின்னர் யு.பி.எஸ்.சி. தேர்வு விவகாரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் அனுமதி வழங்கினார். இதனையடுத்து உறுப்பினர்கள் அமைதி அடைந்தனர்.

இதற்கிடையில் நேற்றும் தலைநகர் டெல்லியில், மாணவர்கள் பெரும் அளவில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திர சிங், நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார். அப்போது அவர் கூறுகையில் மாணவர்கள் மீது அக்கறை உள்ளது. இவ்விவகாரத்தை மிகவும் கவனமாக கையாள்கிறோம். போராட்டத்தில் இறங்கியுள்ள மாணவர்களைவிட அரசு இவ்விவகாரத்தில் அக்கறை செலுத்துகிறது. மாணவர்கள் அமைதியும், பொறுமையும் காக்க வேண்டும் என்றார்.

யு.பி.எஸ்.சி தேர்வு வாரியம் திறனறி தேர்வுக்கான அனுமதி சீட்டுகளை நேற்றுமுன்தினம் விநியோகித்தது. அதில் ஆகஸ்ட் 24-ல் திறனறி தேர்வு நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது. தங்கள் போராட்டத்தை முடக்கும் வகையிலேயே செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த தேர்வை ஆகஸ்டிற்கு மாற்றி அமைத்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டை மறுத்து மத்திய அரசு, இது யு.பி.எஸ்.சி. வாரியத்தின் முடிவு. இதற்கும், அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்