முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வினரை பங்கேற்க அனுமதிக்கக்கோரிய மனு நிராகரிப்பு

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை. 26: சட்டசபையில் தி.மு.க.வினரை பங்கேற்க அனுமதிக்கக்கோரிய மனுவை சபாநாயகர் தனபால் நிராகரித்து விட்டார். சட்டசபையில் நேற்று சந்திரகுமார் (தே.மு.தி.க.), சவுந்தரராஜன் (மார்க்சிஸ்டு கம்யூ), ஆறுமுகம் (இந்திய கம்யூ), ரங்கராஜன் (காங்), ஜவஹீருல்லா (மனித நேய மக்கள் கட்சி), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஆகியோர் எழுந்து ஒரு கோரிக்கை விடுத்தனர்.

தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சபை நடவடிக்கையில் பங்கேற்க கூடாது என்ற நடவடிக்கைய சபாநாயகர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தண்டனையை ரத்து செய்து சபை நடவடிக்கையில் மீண்டும் பங்கேற்க வாய்ப்பு வழங்க வேண்டும் அவர்கள் கோரினர்.

அப்போது அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்து ,கூறியதாவது:– ‘‘தி.மு.க.வினர் மீது எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது என்பது குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.

சபாநாயகரை கன்னிய குறைவான வார்த்தையை அவர்கள் பேசியது மட்டுமின்றி சபைக்கு இடையூறு செய்யும் நோக்கில் அவர்கள் தொடர்ந்து நடந்து வந்ததாகவும் கூறினார்.

பலமுறை சபாநாயகர் எச்சரித்தும் அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. அரசியல் விளம்பரத்துக்காக அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

முதல்–அமைச்சர் எண்ணப்படிதான் தாங்கள் வெளியேற்றப்பட்டதாக அவர்கள் கூறியது உள்ள படியே கண்டிக்கத்தக்க செயல். சபாநாயகர் எவ்வளவோ பொறுமை காத்தும் பலமுறை எச்சரித்தும் அவர்கள் சபையை கன்னியமாக நடத்த ஒத்துழைப்பு கொடுக்க வில்லை. அன்றைய தினம் உறுப்பினர் துரைமுருகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் அவர்களது உறுப்பினர்களை உட்காருங்கள் என்று கூறியும் உட்காரவில்லை.

உட்காருங்கள் வாய்ப்பு தருகிறோம். நாங்கள் பேச வாய்ப்பு தருகிறோம் என்று கூறியும் அவர்கள் கேட்கவில்லை. மலிவான அரசியல் லாபம் தேடுவதற்காக அவர்கள் நடந்து கொள்வதற்கு நீங்கள் துணை போவது (எதிர்கட்சி) எந்த வகையில் நியாயம்.

கடந்த தி.மு.க. ஆட்சியின் போது (2006–2007) எதிர்கட்சி தலைவராக இருந்த அம்மா சபை விவாதத்தில் பங்கேற்று பேசும் போது அனைத்து அமைச்சர்களும் எழுந்து 62 தடவை குறுக்கீடு செய்தனர். அம்மாவை பேச விடாமல் தடுத்தனர். ஆனாலும் தனது ஆணித்தரமான வாதத்தை அம்மா பேசிவிட்டு சென்றார். அப்போது நிதி அமைச்சராக இருந்த பேராசிரியர் அன்பழகன் கூறும் போது, ‘‘நிற்க வேண்டியவர் ஓடி விட்டார். ஓடிப்போனால் சொல்லக்கூடாதா?’’ என்றார்.

இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அப்போது, அன்பழகன் சொன்ன வார்த்தை என்னவென்றால் நான் சொல்லியதில் தப்பு இல்லையே என்றார். எனவே தி.மு.க. எம்.எல்.ஏக்கள் சபையில் கன்னியக் குறைவாக நடந்ததால்தான் 4–வது முறையாக வெளியேற்றும் சூழ்நிலையை உருவாக்கினார்கள். இவர்களுக்காக எதிர்க்கட்சியினர் பரிந்துரை செய்வது வருத்தமான செயல்.

இவ்வாறு அவர் கூறினார்.

சபாநாயகர் தனபால்:– கடந்த 22.7.2014 அன்று தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் நடந்த விதத்தை நீங்கள் எல்லோரும் எதிரே பார்த்து கொண்டு இருந்தீர்கள். இவர்கள் தினமும் திட்டமிட்டு குழப்பம் விளைவித்து வந்தனர். நானும் பொறுமை காத்து வந்தேன். அவர்கள் தினமும் அவைக்கு வந்து தங்கள் தொகுதி மக்களுக்கு தேவையான கோரிக்கையை வைக்காவிட்டாலும் மாண்புமிகு அம்மாவை பொருத்தமட்டில் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளையும் தனது தொகுதிகளாக கருதி தேவையானவற்றை செய்து தரும் நீதி தேவதையாக விளங்கி கொண்டு இருக்கிறார்.

அம்மாவின் எண்ணத்துக்கு ஊறு ஏற்படக்கூடாது என்ற வகையில் அன்றைய தினம் எவ்வளவு நேரம் பொறுமை காக்க முடியுமோ அவ்வளவு நேரம் பொறுமை காத்து அவர்களை பலமுறை எச்சரிக்கை செய்தும் குந்தகம் விளைவித்ததால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பலமுறை சொன்னோம். ஆனாலும் அவை மரபுக்கு கட்டுப்படாமல் பேரவை தலைவரின் வார்த்தைக்கு மதிப்பளிக்காதது ஏன்? தி.மு.க. சட்டமன்ற குழு தலைவர், துணைத் தலைவர் அமரச் சொல்லியும் அதற்கும் தி.மு.க. உறுப்பினர்கள் கட்டுப்படாமல் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துக்கு செயல்பட்டதால் தான் அவர்களை வெளியேற்ற வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டேன்.

அவையில் இருந்து 2–வது முறை வெளியேற்றப்பட்ட உடனேயே இந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டு இருக்கலாம். ஆனாலும் அவர்கள் திருந்துவதற்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கலாம் என்ற எண்ணத்தோடு அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள தொடர்ந்து அனுமதித்தேன்.

அதன் பிறகும் சபையில் 2 முறை வெளியேற்றப்பட்டு விட்டனர். எனது இருக்கைக்கு அருகில் வந்து கை நீட்டி குரல் எழுப்புவது என்பதை ஏற்றுக் கொள்ள இயலாத நிலையில் என்னையும் மதிக்காமல் அவர்களுடைய கட்சி தலைமைக்கும் கட்டுப்படாத காரணத்தால் நான் தி.மு.க. உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.

இவ்வாறு சபாநாயகர் தனபால் கூறினார்.

தி.மு.க. உறுப்பினர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து செய்ய வேண்டும் என்று மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்த தொடங்கினார்கள். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி மறுத்தார்.

இதை தொடர்ந்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹீருல்லா ஆகியோர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்