முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. கலவரம்: கண்டதும் சுட உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

ஷகரன்பூர், ஜூலை 28 - உத்தரபிரதேசத்தில் கலவரத்தில் ஈடுபடுவோரை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் ஷகரன்பூர் உள்ளது. இங்கு குப்த்ஷெர் என்ற இடத்தில் சீக்கியர்களின் வழிபாட்டு தலமான குருத்வாராவும், முஸ்லீம்களின் வழிபாட்டு தலமான மசூதியும் அருகருகே உள்ளது. சமீபத்தில் குருத்வாராவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த இடம் சம்பந்தமாக இரு பிரிவினருக்கும் நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்தது. இந்த நிலையில் கட்டுமான பணிக்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அது மோதலாக மாறி பயங்கர கலவரமாக உருவெடுத்தது.

கலவரத்தின் போது ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். 18 பேர் படுகாயமடைந்தனர். இந்த கொலையால் அங்கு நிலைமை விபரீதமானது. ஒரு பிரிவினர் பெட்ரோல் நிலையத்தையும், வாகனத்தையும் தீ வைத்து கொளுத்தினார்கள். கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டது. கலவரத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 3 பேர் பலியானார்கள். கலவரக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் 5 போலீசாரும் உதவி கலெக்டரும் காயம் அடைந்தனர். அவர்கள் ஷகரன்பூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த போலீஸ்காரர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதையடுத்து அவர் சண்டிகர் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். கலவரத்தை தொடர்ந்து ஷகரன்பூரில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடைகள் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. வாகன போக்குவரத்தும் அடியோடு நிறுத்தப்பட்டு தெருக்கள் வெறிச்சோடியது. கலவரத்தை தொடர்ந்து உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், உத்தரபிரதேச முதல் மந்திரி அகிலேஷ் யாதவுடன் டெலிபோனில் பேசி கலவரத்தை அடக்க மத்திய அரசு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யும் என்று உறுதி அளித்தார்.

இதையடுத்து மத்திய அரசு ஷகரன்பூருக்கு கூடுதலாக 600 துணை ராணுவ படையினரை அனுப்பி வைத்துள்ளது. கலவரக்காரர்களை கண்டதும் சுட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருவதாகவும் மேற்கொண்டு மோதல் எதுவும் நடைபெறவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தெருக்களில் ராணுவமும் ஆயுதம் தாங்கிய போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 22 பேர் கைது செய்யப்பட்டனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்