முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

மேட்டூர், ஜூலை 28 - ஆடிப்பெருக்கிற்காக மேட்டூர் அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டவில்லை. இதனால் அப்போது அணையில் இருந்து நீர் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் கர்நாடகாவில் இருந்து உபரிநீர் வருவதையடுத்து மேட்டூர் அணை நீர்மட்டம் உயருகிறது. கடந்த 11 நாட்களில் 27.25 அடி உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க டெல்டா பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்ததால் மேட்டூர் அணை மதகுகளில் உள்ள ஷட்டர்கள் பராமரிப்பு பணி தீவிரமாக நடந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை முதல் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அப்போது அணையின் நீர்மட்டம் 74.70 அடியாகும். நேற்று காலை அணைக்கு 38.856 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் நீர் இருப்பு 36.878 டிஎம்சி ஆகும். ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருக்கு நாளன்று காவிரி கரையோர மக்கள் ஆற்றில் புனித நீராடுவர். ஆடிப்பெருக்கு வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆடிப்பெருக்கிற்காக இப்போதே கரையோரங்களில் கடை போடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்