முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் - புதுச்சேரியில் மழைக்கு பெய்ய வாய்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 27 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 28:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. அதன் தாக்கமாக தமிழக எல்லை பகுதிகளில் உள்ள கோவை, கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

சென்னை உள்பட சில மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலோர கர்நாடகா, கேரள பகுதிகளில் மழை பெய்து வருவதால் அதன் தாக்கமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தரைக்காற்று வழக்கமாக வீசுவதை விடவும் சற்று பலமாக வீசும். ஜூன்-ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக நமக்கு 10 செ.மீ. அளவு மழை பதிவாகவேண்டும். ஆனால் தற்போது 9 செ.மீ. அளவு மழையே பதிவாகி உள்ளது. ஒரு செ.மீ. அளவுதான் குறைவு. இது சராசரியான அளவு மழைதான் என்றார்.

நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலா மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நடுவட்டம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, கோவை மாவட்டம் சின்னகலார் பகுதியில் தலா 2 செ.மீ. மழையும், நீலகிரி மாவட்டம் ஜி பஜார் பகுதியில் ஒரு செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகள் நிரம்பியது.

இதையடுத்து கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த 10–ந் தேதி முதல் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. முதலில் 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. அது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 40 ஆயிரம் கன அடி தண்ணீர் அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வருவதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. 67.41 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று முன்தினம் காலை 71.05 அடியாக உயர்ந்தது. அணைக்கு 36 ஆயிரத்து 772 கன அடி

தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

நேற்று 38 ஆயிரத்து 856 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர் மட்டம் 74.76 அடியாக உயர்ந்தது. பிற்பகல் 75 அடியை தொட்டது. தொடர் நீர்வரத்து காரணமாக கடந்த 9 நாட்களில் அணையின் நீர்மட்டம் 27 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குடிநீர் தேவைக்காக 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. ஆடிப்பெருக்கு விழாவை யொட்டி மேட்டூர் அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்