முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுத் தேர்வுகளில் குறைந்த தேர்ச்சி: விளக்கமளிக்க உத்தரவு

புதன்கிழமை, 30 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 31 - பத்தாம் வகுப்பு பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக பெற்ற அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மண்டல வாரியான ஆய்வு கூட்டங்களில் விளக்கமளிக்க வேண்டும் என பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி, பள்ளி கல்வி துறை செயலாளர் டி. சபிதா ஆகியோர் தலைமையில் மண்டல வாரியான ஆய்வு கூட்டங்கள் திருவள்ளூர், விழுப்புரம், கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வுகளில் 70 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் இந்த கூட்டங்களில் பங்கேற்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளி கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது.

அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆய்வு நடத்தப்படவுள்ளது. இந்த ஆண்டு முதல் முறையாக பத்தாம் வகுப்பு, பிளல் 2 தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் 90 சதவீதத்தை கடந்தது. 10ம் வகுப்பில் 90.7 சதவீதமும், பிளஸ் 2 வகுப்பில் 90.6 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளில் 80 சதவீதத்துக்கு அதிகமான மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 97 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு இதே போன்ற மண்டல ஆய்வு கூட்டத்துக்கு பிறகு தான் அரசு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வுகளில் குறைந்தபட்சம் தேர்ச்சி பெறுவதற்கான வழிகாட்டி கையேடுகள் தயாரித்து வழங்கப்பட்டன. இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் உயர்ந்ததற்கு இந்த கையேடுகளும் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

2014-15ம் ஆண்டில் ஆங்கில வழி பிரிவுகள் தொடங்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை விவரம் கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விபரம், பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு போன்றவை குறித்தும் இந்த கூட்டங்களில் ஆய்வு நடத்தப்படவுள்ளது. அதோடு பள்ளிகளில் உள்ள குடிநீர் வசதி, கழிப்பறை வசதி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பாகவும் மண்டல கூட்டங்களில் ஆய்வு நடத்தப்படும் என பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்