முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா உணவகங்கள்: முதல்வருக்கு ஆந்திர அமைச்சர் பாராட்டு

புதன்கிழமை, 30 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஜூலை.31 - முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் விக்ரம் கபூர், தலைமையில் சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத் துறை, ஏழை, எளிய மக்கள் வயிறார உணவு உண்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அம்மா உணவகங்களை தற்பொழுது 203 எண்ணிக்கையில் அனைவரும் வியந்து பாராட்டும் வகையில் செயல்படுத்தி வருகிறது.

ஆந்திர மாநில அரசின் விலைக்கட்டுப்பாடு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை அமைச்சர் பரிட்டலா சுனிதா நேற்று (30.07.2014) சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தைப் பார்வையிட்டார். இந்த அம்மா உணவகத்தில் உள்ள பொருள்கள் வைக்கும் அறை, சமையலறை, சாப்பாடு வழங்கும் இடம், சாப்பிடும் அறை, பாத்திரங்கள் கழுவும் அறை, சாப்பிடுவதற்கு டோக்கன் வழங்கும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு, அங்கு வழங்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு, உணவு தரமாகவும், சுகாதாரமாகவும், சுவையாகவும் இருப்பதாகத் தெரிவித்தார்.

அமைச்சர் இந்த அம்மா உணவகத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகள், கோதுமை, தயிர் போன்ற பொருள்கள் எங்கிருந்து வாங்கப்படுகின்றன எனவும், இங்கு வேலை பார்க்கும் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை குறித்தும், பணியாளர்களின் பணி நேரம் குறித்தும், சுத்தமான, சுகாதாரமான, சுவையான உணவு தயாரிக்கும் முறை குறித்தும், சுத்தமான தண்ணீர் வழங்கப்படும் முறை குறித்தும், பாத்திரங்கள் கழுவ பயன்படுத்தும் முறைகளையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அமைச்சர் அம்மா உணவகத்தின் சாப்பிட்டு கொண்டிருந்த பொதுமக்களிடம் இங்கு வழங்கப்படும் உணவுகளின் தரம், சுவை, சுகாதாரம் போன்றவை குறித்து கேட்டார். அதற்கு பொதுமக்கள் விலை குறைவாக, சுத்தமாக, சுகாதாரமாக மற்றும் சுவையாக உணவுகள் இந்த அம்மா உணவகத்தில் வழங்கப்படுவது எங்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக உள்ளது எனத் தெரிவித்தனர்.

அமைச்சர் இந்த அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவுகள் விலை குறைவாகவும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும், சுவையாகவும் இருக்கிறது எனவும், ஏழை எளிய மக்கள் மட்டுமன்றி, அனைத்து பிரிவினர்களும் இந்த அம்மா உணவகத்தில் இவ்வளவு கூட்டமாக சாப்பிடுவதை பார்த்து மிகவும் வியப்படைந்தேன் எனவும் கூறினார். இந்த அம்மா உணவகம் போன்று ஆந்திர மாநிலத்திலும் மலிவு விலை உணவகங்கள் அமைக்க மாண்புமிகு ஆந்திர மாநில முதலமைச்சர் அவர்களிடம் பரிந்துரைப்பேன் எனவும் கூறினார். மேலும், ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியை போக்க இந்த அம்மா உணவகங்களை திறந்து வைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை ஆணையாளர் எஸ். கோபாலகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் (சுகாதாரம்) த. ஆனந்த், மாநகர சுகாதார அலுவலர் பெ. குகாணந்தம், சென்னை மாநகராட்சி அலுவலர்கள், ஆந்திர மாநில அரசின் விலைக்கட்டுப்பாடு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத் துறை அலுவலர்கள், அம்மா உணவக பணியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்