முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1200 புதிய பேருந்துகள் வாங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.1-: தமிழகத்தில் பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிதாக 1200 பேருந்துகள் ரூ.253 கோடியே 80 லட்சம் செலவில் வாங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டசபையில் அறிவித்தார்.பெருகிவரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு சென்னை நகரில் மேலும் புதிய சிற்றுந்துகள் இயக்கப் படும் என்று முதல்வர் தெரிவித்தார்.சட்டசபையில் அவை விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா கூறி யிருப்பதாவது:

சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் போக்குவரத்து சேவையினையும், போக்குவரத்து சேவையினை செவ்வனே புரிந்து வரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் மேம்பாட்டினையும் உயர்த்தும் உன்னதமான திட்டங்களை எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்திலுள்ள அரசு போக்கு வரத்துக் கழகங்கள் திறமையான மற்றும் தேவையான போக்குவரத்து வசதியினை பொது மக்களுக்கு வழங்குவதில் முக்கியமான பங்கினை வகிக்கின்றன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், செயல் திறன் மற்றும் நிர்வாக மேலாண்மையில் பல்வேறு சாதனைகளை அகில இந்திய அளவில் படைத்துள்ளன.

இப்போக்குவரத்துக் கழகங்கள் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சாதாரண வகைப் பேருந்துகளுடன், விரைவுப் பேருந்துகள், தாழ்தள சொகுசுப் பேருந்துகள், சொகுசுப் பேருந்துகள், அதிசொகுசுப் பேருந்துகள், அதிநவீன சொகுசுப் பேருந்துகள் மற்றும் குளிர்சாதனப் பேருந்துகள் போன்ற பல்வேறு வகைப் பேருந்துகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் நாளொன்றுக்கு 91.20 லட்சம் கிலோ மீட்டர் தூரத்திற்கு பேருந்துகளை இயக்கி அதன் மூலம் இரண்டு கோடியே பத்து லட்சம் பயணிகள் குறைந்த செலவில் நிறைவான பயணம் செய்திடும் வகையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களால் போக்குவரத்துக் கழகங்களின் சேவை மகத்தானதாக போற்றப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டு காலத்தில், 1,476 புதிய வழித் தடங்கள் துவக்கி வைக்கப்பட்டதோடு, 4,649 புதிய பேருந்துகள், 712 புனரமைக்கப்பட்ட பேருந்துகள் மற்றும் 107 சிற்றுந்துகள் வாங்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. தமிழக போக்குவரத்துத் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மாநிலம் முழுவதும் 20,684 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளை நவீனப்படுத்தும் வகையில், பல ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகளை இயக்க எனது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 2014 - 2015-ஆம் ஆண்டில், 253 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 1,200 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின், மோட்டார் வாகன விபத்துகள் இழப்பீடு வழங்காமையால், நீதிமன்றங்களால் ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகளை மீட்பதற்காக 38 கோடியே 91 லட்சம் ரூபாயினை அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு எனது தலைமையிலான அரசு வழங்கியுள்ளது.

23.7.2014 அன்று போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய உறுப்பினர்கள் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நீதிமன்றங்களால் ஜப்தி செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பேசினார்கள்.

இது குறித்து அரசு உயர் அதிகாரிகளிடம் விவாதித்ததில், விபத்துக்கான இழப்பீட்டுத் தொகையான 39 கோடியே 73 லட்சம் ரூபாயினை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் செலுத்தாததால் 544 அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த 544 அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை மீட்கும் வகையில், 39 கோடியே 73 லட்சம் ரூபாயினை அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழிவகை முன்பணமாக எனது தலைமையிலான அரசு வழங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மாநகர மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், போக்குவரத்து இணைப்பில்லா பகுதிகளிலிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தை இணைக்கும் வகையில் 100 சிற்றுந்துகள் வாங்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு சென்னை மாநகர மக்களிடையே ஏகோபித்த வரவேற்பு இருப்பதை கருத்தில் கொண்டும், பெருகி வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டும், மேலும் 100 புதிய சிற்றுந்துகள் 16 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டு, சென்னை மாநகரில் உள்ள, பல்வேறு வழித் தடங்களில் இயக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago