முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 5,284 கோடியில் 60 துணைமின் நிலையங்கள்: முதல்வர்

வியாழக்கிழமை, 31 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை 31:இந்த ஆண்டு 5,284 கோடி ரூபாய் செலவில் 60 துணை மின் நிலையங்கள் மற்றும் 2,500 சுற்று கிலோ மீட்டர் உயர் அழுத்த மின் வழித்தடப் பாதைகள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
ரூ.660 கோடி ரூபாய் செலவில் 28 ஆயிரம் மின் வினியோக மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டு நிறுவப்படும் என்று முதல்வர் கூறினார்.
மூன்று ஆண்டுகளில் 30 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மேலும் 10 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் முதல்வர்ஜெயலலிதா கூறினார்.
தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 3330 மெகாவாட் மின்சாரத்தில் இப்போது 224 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.  வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 1000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் அடுத்த ஆண்டு மீதியுள்ள மின்சாரம் கிடைக்கும் என்றும் முதல்வர்ஜெயலலிதா கூறினார்.தமிழகத்தில் உள்ள புனல் மின் நிலையங்களை புதுமைப்படுத்தி நவீனமயமாக்கும் பணிகள் ரூ.120 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் நேற்று  அறிவித்தார். .
அவை விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:
எங்கும் மின்சாரம், எதிலும் மின்சாரம்என்ற அளவுக்கு, வேளாண்மை, தொழில்கள், தொழிற்சாலைகள், ரயில் போக்குவரத்து, மருத்துவமனைகள், அலுவலகங்கள், இல்லங்கள் என அனைத்தும் மின்சாரமயமாகி இருக்கின்ற சூழ்நிலையில், தமிழ்நாட்டின் மின் நிறுவு திறனை கணிசமாக அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, மின் திட்டங்களை தீட்டி, அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் பணியில் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  
2011-ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாவது முறையாக நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தின் மின் தேவை 12000 மெகாவாட்டாக இருந்தது. ஆனால்,  மின் உற்பத்தி மற்றும் கொள்முதல் மூலம் 8,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்து வந்தது.  அதாவது, 4,000 மெகாவாட் மின் பற்றாக்குறை நிலவியது.
இந்தப் பற்றாக்குறையினை போக்கும் வகையில், ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த அனல் மின் திட்டங்கள் முடுக்கி விடப்பட்டன. இதன் காரணமாக கடந்த மூன்றாண்டுகளில் வல்லூர், மேட்டூர் மற்றும் வட சென்னையில் 5 அனல் மின் உற்பத்தி அலகுகள் கட்டி முடிக்கப்பட்டு 2,500 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி திறன் நிறுவப்பட்டு, அவை  வணிக ரீதியாக மின் உற்பத்தி செய்து வருகின்றன.  மேலும், நடுத்தர கால கொள்முதல் அடிப்படையில் 500 மெகாவாட் மின்சாரம் ஜுன் 2013 முதல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 
இது தவிர, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நீண்ட கால அடிப்படையில்,  2014-2015 ஆம் ஆண்டிலிருந்து 15 ஆண்டுகளுக்கு, 3,330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் கொள்முதல் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்த 3,330 மெகாவாட் மின்சாரத்தில், 224 மெகாவாட் மின்சாரம் தற்போது கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.  வரும் ஆகஸ்ட் 2014 முதல் 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.  மீதமுள்ள  மின்சாரம்  வரும்  2015-2016 ஆம் ஆண்டிலிருந்து பெறப்படும்.  
நான் எடுத்த பகீரத முயற்சிகளின் விளைவாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 24.6.2014 அன்று 13,775 மெகாவாட் உயர் அளவு தேவையை நிறைவேற்றியுள்ளது. மேலும், 20.6.2014 அன்று 294 மில்லியன் யூனிட் மின்சாரம் வழங்கி சாதனை படைத்துள்ளது.  இது மட்டுமல்லாமல், தமிழகத்தில்மேலும் பல புதிய மின் திட்டங்கள் நடப்பு நிதியாண்டில் உற்பத்தியைத் தொடங்க இருக்கின்றன.  தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் தேசிய அனல் மின் கழகத்தின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 500 மெகாவாட் திறன் கொண்ட வல்லூர் அனல் மின் திட்டத்தின் மூன்றாவது அலகு வரும் ஆகஸ்ட் மாதம் வணிக ரீதியாக மின் உற்பத்தியைத் தொடங்கும். 500 மெகாவாட் திறன் கொண்ட தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின்  கூட்டு முயற்சித் திட்டத்தின் முதல் அலகு வரும் அக்டோபர் மாதத்திலும்,
500 மெகாவாட் திறன் கொண்ட இரண்டாம் அலகு 2015 மார்ச் மாதத்திலும் வணிக ரீதியாக மின் உற்பத்தியை துவங்க இருக்கின்றன.
இத்திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கு 387 மெகாவாட் ஆகும்.  கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அலகு 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனை 7.6.2014 அன்று எட்டியுள்ளது.  இந்த அலகிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கு 462 மெகாவாட் ஆகும். கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து தமிழகத்திற்கு கூடுதல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று நான் பாரதப் பிரதமரைக் கேட்டுக் கொண்டதன் பலனாக, மத்திய அரசின் ஒதுக்கப்படாத அளவிலிருந்து தமிழகத்திற்கு 100 மெகாவாட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  ஆக, இந்த திட்டத்தில் தமிழகத்திற்கு 562 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது.
1,000 மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரண்டாம் அலகு இந்த ஆண்டு இறுதியில் மின் உற்பத்தியைத் தொடங்கும்.   இதில், தமிழகத்தின் பங்கு  463 மெகாவாட் ஆகும்.  மேலும், 2014-2015 ஆம் ஆண்டில் தலா 250 மெகாவாட் திறன் கொண்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி விரிவாக்கத் திட்டம் நிலை-2ன் இரண்டு அலகுகள் மின் உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கு 230 மெகாவாட் ஆகும்.  நடப்பு நிதியாண்டில் உற்பத்தித் தொடங்கவிருக்கின்ற புதிய மின் திட்டங்கள் மற்றும் நீண்ட கால அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் மின்சாரம் மற்றும் ஜுன் முதல் செப்டம்பர் வரை அதிக அளவில் கிடைக்கும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் உயர் மின் அழுத்தத் தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும்   1.6.2014 முதல் எனது தலைமையிலான அரசு நீக்கியுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் அனைத்து நுகர்வோருக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.  இவற்றின் தொடர்ச்சியாக, கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். 
தமிழகத்தின் புனல் மின் நிலையங்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் உள்ள உச்ச மின் தேவையை நிறைவேற்ற துணை புரிகின்றன. இப்புனல் மின் நிலையங்கள் பல்லாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை என்பதால், அவற்றை புனரமைத்து நவீனப்படுத்துவது மிகவும் அவசியம்.  இதனைக் கருத்தில் கொண்டு, புனல் மின் நிலையங்கள் படிப்படியாக புனரமைக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை, மேட்டூர் மற்றும் பாபநாசம் புனல் மின் நிலையங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன.  பெரியார் புனல் மின் நிலையம் புனரமைக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 43 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற கோவை மாவட்டத்திலுள்ள சோலையார் புனல் மின் நிலையம்-1-ன் இரு அலகுகளையும் புதுமைப்படுத்தி நவீனமயமாக்கும் பணி மற்றும் இவ்வலகுகளின் நிறுவுத் திறனை தலா 35 மெகாவாட்டிலிருந்து 42 மெகாவாட்டாக அதிகரிக்கும் பணி ஆகியவை 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நுகர்வோருக்கு தடையற்ற தரமான மின்சாரம் வழங்கப்பட வேண்டுமென்றால், கூடுதல் மின் உற்பத்திக்கு ஏற்ப மின் தொடரமைப்பு மற்றும் பகிர்மானம் ஆகியவற்றின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மிகவும் அவசியம்.   மூன்றாவது முறையாக எனது தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளில் 134 துணை மின் நிலையங்கள் நிறுவப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, நடப்பு நிதி ஆண்டில் 60 துணை மின் நிலையங்கள் மற்றும் 2,500 சுற்று கிலோ மீட்டர் உயர் அழுத்த மின் வழித்தடப் பாதைகள் 5,284 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த 60 துணை மின் நிலையங்களில், மூன்று 400 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள், ஒன்பது 230 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள், முப்பத்தியெட்டு 110 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள், பத்து 33 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள் அடங்கும்.
இது தவிர, சென்னை மாநகரின் மின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மேலும் இரண்டு 230 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள் 338 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இவற்றில், மேற்கு மாம்பலத்தில் 92 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு துணை மின் நிலையமும், போரூரில் 245 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு துணை மின் நிலையமும் அமைக்கப்படும். மின் தொடரமைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் மின் பகிர்மானக் கட்டமைப்பை செம்மைப்படுத்தினால் தான் நுகர்வோருக்கு
சீரான மின்சாரம் கிடைக்கும்.  இதனைக் கருத்தில் கொண்டு, இந்த நிதியாண்டில் 28,000 மின் விநியோக மாற்றிகள் 660 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்டு நிறுவப்படும். 
எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளில் 30 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக நடப்பு நிதியாண்டில் மேலும் 10 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும் எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள் மக்கள் உயர்வுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு  முதல்வர்ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago