முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தூதரகம் முன் நடிகர் - நடிகைகள் முற்றுகை

திங்கட்கிழமை, 4 ஆகஸ்ட் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக.5 - தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக இணைய தளத்தில் செய்தி வெளியிட்ட இலங்கை அரசை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை தமிழ் திரையுலகினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.இலங்கை தூதரகத்தை மூடவேண்டும் என்றும் நடிகர் விஜய் உட்பட பல நடிகர்கள் ஆவேசமாக பேசினார்கள்.

இலங்கை அரசின் ராணுவ இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியானது. இதற்கு அனைத்து கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதிமுக வினர் தமிழகம் முழுவதும் இலங்கை அதிபர் ராஜபக்சே கொடும்பாவியை எரித்து, கறுப்புக்கொடி போராட்டங்களையும் நடத்தினர்.

தமிழ் திரையுலகம் சார்பில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இயக்குனர்கள் சங்கத்தலைவர் விக்ரமன் அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம் எதிரில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் நடிகர் நடிகைகள் காலை 10.30 மணிக்கு திரண்டார்கள். இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் தலைமையில் டைரக்டர்களும் வந்தனர். பெப்சி தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் பங்கேற்றனர்.இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட அவர்கள் முயன்றனர். அப்போது போலீசார் தடுத்தனர். லயோலா கல்லூரி எதிரில் போடப்பட்ட பந்தலில் இலங்கைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்த போராட்டத்தில் நடிகர்கள் சிவகுமார், விஜய், சூர்யா, சிவா, விக்ரம் பிரபு, ஸ்ரீகாந்த், வினய், ரித்தீஷ், பார்த்திபன், வையாபுரி, குண்டு கல்யாணம், தாமு, பட்டாபி, அனுமோகன், நடிகை குயிலி, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், கலைப்புலி தாணு, இப்ராகிம் ராவுத்தர், முக்தா சீனிவாசன், டைரக்டர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சீமான், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், வி.சேகர், கே.எஸ்.ரவிக்குமார், பெப்சி விஜயன், நடன இயக்குநர் சிவசங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் டி.வி. நடிகர் நடிகைகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். டிஜிட்டல் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் தலைமையில் தயாரிப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோஷங்கள் அடங்கிய பேனர்கள் வைத்து இருந்தனர். தாயை வணங்குபவன் தமிழன், தாயை பழிப்பவன் சிங்களவன், தாயை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடோம் பத்து கோடி தமிழர்களின் புறநானூற்று தாய் அம்மா. குரங்கு கையில் பூமாலை கோத்தபய கையில் இலங்கை, உலகாண்ட தமிழனை அழிக்க நினைக்காதே. ஆட்டம் போடும் சிங்களனே ஓட்டம் எடு இலங்கைக்கு என்பன போன்ற வாசகங்கள் அதில் இருந்தன.

இலங்கையை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர்கள் ஆவேசமாக பேசினார்கள். நடிகர் சங்க தலைவர் சரத்குமார் பேசியதாவது:–

முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழக மீனவர் நலனுக்காக குரல் கொடுக்கிறார். மத்திய அரசுக்கும் கடிதங்கள் எழுதுகிறார். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இலங்கையை போர்க் குற்றவாளி நாடக அறிவிக்க வேண்டும் என்றும் அதன் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றி உள்ளார்.

இதற்காக முதல்வரை பற்றி இலங்கை அரசு இணையதளத்தில் அவதூறு வெளியிட்டு இழிவு செயல் செய்துள்ளது. ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமான கச்சத்தீவை மீட்க முதல்வர் முயற்சித்து வருகிறார். அது நடக்கும் இலங்கை தமிழர் மற்றும் மீனவர் பிரச்சினையில் புரட்சித்தலைவி எழுதும் கடிதங்களுக்கு மத்திய அரசு செவிசாய்க்காமல் உள்ளது. முதல்வரை அவமதித்த இலங்கை அரசை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக எச்சரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் விஜய் பேசியதாவது: தமிழக மீனவர்களுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வரும் முதலமைச்சரை இழிவுப்படுத்திய இலங்கை அரசை கண்டிக்கிறேன். சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இழுத்து பூட்ட வேண்டும். இந்த விமர்சனம் தாயை விமர்சனம் செய்வதற்கு சமமான செயலாகும். இவ்வாறு விஜய் பேசினார்.

ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது: முதலமைச்சரை விமர்சனம் செய்த ராஜபக்சேவின் இந்த நடவடிக்கை கீழ்த்தரமான, கேவலமான செயலாகும். இது ஒட்டுமொத்த தமிழக மக்களையே அசிங்கப்படுத்திய நடவடிக்கை என்றே நான் கருதுகிறேன். இதை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும் என்றார்.

ஆர்.கே.செல்வமணி பேசியதாவது: முதல்வரை அவமதித்த இலங்கை அரசுக்கு தமிழ் திரையுலகம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்த சாலைக்கு தமிழ்ஈழ சாலை என பெயர் சூட்ட வேண்டும் என தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை வைக்க உள்ளோம் என்றார். ஆர்.கே.செல்வமணி டைரக்டர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, நாடுகளிடையே நல்ல நட்புறவை ஏற்படுத்தவே தூதரகங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் நல்ல உறவை கெடுக்கும் செயலில் ஈடுபடும் இலங்கை தூதரகம் தேவை இல்லை. இதை அகற்ற வேண்டும். இலங்கை தூதரகம் உள்ள சாலைக்கு தமிழீழ சாலை என பெயர் சூட்ட வேண்டும் என்றார்.

நடிகர் சிவகுமார் பேசும் போது, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது அல்ல. நமது மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் தாக்குவதை கண்டித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதுகிறார். இதை கொச்சை படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசும் போது, முதல்–அமைச்சரை இலங்கை அரசு இழிவு படுத்தியதை கண்டிக்கிறோம். இந்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. இலங்கையில் நடைபெறும் ராணுவ கருத்தரங்கில் நமது ராணுவ அதிகாரிகள் பங்கேற்க கூடாது என்றார்.

டைரக்டர் விக்ரமன் பேசும் போது, எத்தனையோ பெண்கள் தலைவர்களாக இருந்துள்ளனர். தெரசாவை அன்னை தெரசா என்றோம். சோனியாகாந்தி அன்னை சோனியா என்று அழைக்கப்படுகிறார். புரட்சித் தலைவியை அம்மா என்று அழைக்கிறோம். அம்மா என்று அழைக்கப்படும் தலைவியை இலங்கை அரசு கொச்சை படுத்தி உள்ளது. இது ஒட்டு மொத்த தமிழர்களையும் கொச்சைப்படுத்துவது ஆகும். எனவே இலங்கை தூதரகத்தை அகற்ற வேண்டும் என்றார்.

கலைப்புலி தாணு பேசும் போது, தாயை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடமாட்டோம் என்று தமிழ் திரையுலகமே ஒன்று திரண்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. வருங்காலத்தில் தாயை பழித்ததற்கான தண்டனையை இலங்கை அனுபவிக்கும். அப்போது தமிழர்கள் மட்டும் காப்பாற்றப்படுவார்கள் என்றார்.

டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:–

பல காலமாக தமிழர்களை அழித்து வரும் சிங்கள அரசு அடுத்ததாக தமிழக மீனவர்களை கொடுமைபடுத்தியது. இப்போது அதையும் தாண்டி முதல்–அமைச்சரை கொச்சைப்படுத்தி உள்ளது. இது ஒட்டு மொத்த தமிழர்களையும் கொச்சைப்படுத்தும் செயல். இந்த பிரச்சினையில் புரட்சி தலைவி எடுக்கும் முடிவுக்கு திரையுலகம் எப்போதும் துணை நிற்கும் என்றார். நடிகர் கே.ராஜன் பேசும் போது, கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமல்ல என்ற பா.ஜனதா அரசை எதிர்க்கிறோம் என்றார்.

போராட்டத்தை தொடர்ந்து இலங்கை துணை தூரகத்தை சுற்றி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருந்தனர். நடிகர், நடிகைகளை காண ஏராளமான பொது மக்களும் அங்கு திரண்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்