முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனைவியை மதிக்க கற்றுக் கொள்ள சிவகுமார் அறிவுரை

திங்கட்கிழமை, 11 ஆகஸ்ட் 2014      சினிமா
Image Unavailable

 

ஈரோடு, ஆக 12 - ஒவ்வொரு மனிதரும் குடும்ப உறவுகளை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று நடிகர் சிவகுமார் கூறினார்.

ஈரோடு புத்தக திருவிழாவில் நடைபெற்ற சிந்தனை அரங்கில் வாழ்க்கை ஒரு வானவில் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது,

குழந்தைகள் சிறு வயதிலேயே பள்ளிகளில் உள்ள விடுதிகளில் சேர்க்கும் வழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க வேண்டும். 5 முதல் 12 வயது வரையில் தான் குடும்ப உறவுகள், குடும்ப பாரம்பரியம் உள்ளிட்டவற்றை குழந்தைகளுக்கு கற்று கொடுக்க முடியும். விடுதியில் சேர்த்தால் இது போன்ற விஷயங்களை கற்று கொடுக்க முடியாத நிலை உருவாகி விடும். வளர் இளம் பருவத்தில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். இந்த வயதில் பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு நண்பர்களாக மாறி அப்போது ஏற்படும் சந்தேகங்களை புரிய வைக்க வேண்டும். நிறம், குடும்ப பின்னணி பற்றி வெறுப்புகள் கூட ஏற்படும். அப்போது எவ்வித பின்புலமும் அழகும் இல்லாமல் வாழ்க்கையில் சாதித்து காட்டிய தலைவர்கள் பற்றி கற்று கொடுத்து அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டும்.

அது போல வகுப்பறைகளில் குழந்தைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து அதில் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இந்த கூட்டத்தில் எனக்கு எதிரில் அமர்ந்திருக்கும் எனது ஆசிரியர் குமாரசாமி, எனது திறமையை கண்டுபிடித்து ஊக்கப்படுத்தியதால்தான் நடிகராக மாற முடிந்தது. கார்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் பலருக்கு குடும்ப உறவுகள் பற்றி தெரிவதில்லை. திருமணம் செய்யாமல் வாழ்க்கையை கழித்து விடலாம் என எண்ணுகின்றனர். இது போன்ற தவறான எண்ணம் கொண்டவர்கள் இப்போது 5 சதவீதம் பேர் உள்ளனர். திருமணத்துக்கு பின்னர் ஆண், பெண்ணையும், பெண், ஆணையும் முழுமையாக புரிந்து கொண்டு வாழ வேண்டும். குழந்தைகள் பிறந்து விட்டால் மனமுறிவு என்ற பேச்சுக்கே இடமளித்து விட கூடாது. குடும்ப உறவுகளை மதிக்க கற்று கொள்ள வேண்டும். ஓய்வு பெற்ற பின்னர் தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் உழைத்த மனைவியை முழுமையாக மதிக்க வயதானவர்கள் கற்று கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது கூட அதில் தலையிட்டு பழமையான பெயர்களை வைக்க கூடாது. விடலை பருவத்தினர் காதல் செய்தால் பெற்றோர் கண்டிக்க வேண்டும். நன்கு படித்து வேலைக்கு வந்த பின்னர் தொடர்ந்து 5 ஆண்டுகள் காதல் செய்தால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முன்வர வேண்டும். வாழ்க்கையை முழுமையாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்