முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை தூதரகம் முன்பு சீமான் முற்றுகை போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை.ஆக.18 - இலங்கை ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அவதூறு பரப்பியதை கண்டித்தும், நேற்று தொடங்கி வருகிற 19–ந்தேதி வரை நடைபெறும் இலங்கை ராணுவ மாநாட்டில் இந்தியாவில் இருந்து யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். இதில் அக்கட்சியின் நிர்வாகிகள் கலைக்கோட்டு தயம், அய்யநாதன், அன்பு தென்னர சன், தங்கராசு அமுதா நம்பி, அறிவுச் செல்வன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். போராட்டத்தில் சீமான் பேசியதாவது:–

ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த இலங்கை அரசாங்கம் தனது ராணுவ இணைய தளத்தில் தமிழக முதல்–அமைச்சரை பற்றி கொச்சைப்படுத்தி கருத்து வெளியிட்டிருப்பது கடுமையான கண்டனத்துக் குரியது.

இந்நிலையில் இலங்கையில் நேற்று முதல் 19–ந்தேதி வரை ராணுவ மாநாடு நடக்கிறது. இதில் மத்திய அரசின் சார்பில் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும்.

இலங்கையில் நடைபெறும் ராணுவ கருத்தரங்கம் அந்நாட்டின் பெருமையை பேசும் கருத்தரங்கு. 30 ஆண்டுக்கு மேலாக அங்கு இருக்கும் தீவிரவாதத்தை ஒழிப்போம் என்று பேசுவார்கள். அதில் இந்தியா பங்கேற்பது எப்படி சரியாக இருக்கும். தமிழர்களை இனப்படுகொலை செய்த அந்நாட்டு ராணுவத்தை பாதுகாக்கும் செயலை தவிர இந்தியா வேறு எதையும் செய்யவில்லை. ஐ.நா. விசாரணைகுழுவை ஏற்காத இந்தியா, இலங்கை அமைத்த விசாரணை குழுவை ஏற்றுக் கொள்கிறது. தொடர்ந்து தமிழர்களை இந்தியா வஞ்சித்துக்கொண்டே இருக்கிறது.

ராணுவ கருத்தரங்கில் இந்தியாவில் இருந்து யாரும் பங்கேற்க போகிறார்களா? இல்லையா என்பது பற்றி பா.ஜனதா அரசு இன்னும் எந்தவித முடிவையும் அறிவிக்க வில்லை. மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு ராஜபக்சேவை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. பா.ஜ.க. காங்கிரஸ் அரசுகள் தமிழ் இன விரோத போக்குடனேயே நடந்து வருகின்றன. இலங்கை இனப்படு கொலையை கண்டிக்காத இந்தியா இலங்கை மாநாட்டில் பங்கேற்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இவ்வாறு சீமான் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்