முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் குடியுரிமை கணக்கெடுப்பு பணி தொடங்கியது

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable


நகரி, ஆக 20 - ஆந்திராவில் இருந்து பிரிந்து நாட்டின் 29வது மாநிலமாக தெலுங்கானா கடந்த ஜூன் மாதம் உதயமானது. மாநில பிரிவினைக்கு பின் இங்கு நடந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி வெற்றி பெற்று அதன் தலைவர் சந்திரசேகரராவ் முதல் மந்திரியாக பதவியேற்றார்.
கடந்த 3 மாத காலத்தில் அரசு ஊழியர் பிரச்சினை, மாணவர்களின் கல்வி உதவி தொகை, மின்சாரம், சட்டம் ஒழுங்கு என பல்வேறு பிரச்சினைகளை இம்மாநில அரசு எதிர்கொண்டது. இதற்கு தீர்வு காண ஆந்திரா - தெலுங்கானா முதல் மந்திரிகளை சந்தித்து பேசுவதற்கு கவர்னர் நரசிம்மன் ஏற்பாடு செய்தார். தெலுங்கானாவில் ஆந்திராவை சேர்ந்தவர்கள் குடியிருப்பதால் அரசு நல திட்டங்கள் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டது. இதன் காரணமாக தெலுங்கானாவை பூர்வீகமாக கொண்டவர்கள் விவரங்களை அறிய குடியுரிமை கணக்கெடுப்பு நடத்த முதல் மந்திரி சந்திரசேகரராவ் உத்தரவிட்டார்.
இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் மூலம் தெலுங்கானாவில் குடியிருக்கும் ஆந்திர மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மறுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. கணக்கெடுப்பை எதிர்த்து ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் மக்களுக்கு இடையூறு இல்லாமல் கணக்கெடுப்பு நடத்த ஐகோர்ட் அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து தெலுங்கானாவில் நேற்று காலை 7 மணிக்கு கணக்கெடுப்பு தொடங்கியது. இரவு 8 மணி வரை நடக்கும் இந்த கணக்கெடுப்பில் தெலுங்கானாவில் உள்ள 10 மாவட்டங்களிலும் 3 லட்சத்து 69 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு ஊழியருக்கு 25 குடும்பங்கள் என பிரித்து அனுப்பப்பட்டனர். அவர்கள் ஒவ்வொரு வீட்டுக்காக சென்று குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்களை சேகரித்தனர். முன்னதாக இந்த கணக்கெடுப்பில் தெலுங்கானா மக்கள் அனைவரும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. அதற்கேற்ற வகையில் தெலுங்கானாவில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. போக்குவரத்து மற்றும் காவல் துறை உள்ளிட்ட அத்தியாவசிய பணி ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு கணக்கெடுப்பில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. நேற்று தெலுங்கானாவில் பஸ்கள் ஓடவில்லை. ஐதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் முழுவீச்சில் கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்